இரட்டை இலை உதித்த நாள் இன்று!!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இரட்டை இலை உதித்த நாள் இன்று!!

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு, தமிழகத்தின் இன்றளவும் பேரியக்கமாக திகழ்ந்து வரும் அதிமுகவின் சின்னமான இரட்டை இலை உதயமான நாள் இன்று.

திமுகவிலிருந்து கடந்த 1972-ஆம் ஆண்டு எம்ஜிஆர் வெளியேற்றப்பட்ட பின்னர், முதன் முதலாக 1973-ஆம் ஆண்டு நடைபெற்ற திண்டுக்கல் இடைத்தேர்தலில்தான் இரட்டை இலை சின்னம் தமிழக மக்களுக்கு அறிமுகமானது.

இரட்டை இலை அறிமுகம்

இரட்டை இலைச் சின்னத்தை எம்ஜிஆர் 1973ஆம் ஆண்டு ஏப்ரல் 30ல் முதல் முதலாக திண்டுக்கல் பாராளுமன்ற இடைத் தேர்தலில் அறிமுகம் செய்தார். தனிக்கட்சி தொடங்கி 6 மாதத்துக்குப் பின் திண்டுக்கல் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. இந்தத் தேர்தலில் போட்டியிடலாமா வேண்டாடமா என்ற பெரும் குழப்பத்திற்குப் பின் அத்தொகுதியில் போட்டியிட முடிவு செய்த எம்ஜிஆர் நடப்பது நடக்கட்டும் என வேட்பாளரை நிறுத்தினார்.

எம்ஜிஆர் கண்டெடுத்த இரட்டை இலை

இதில் தோல்வியடைந்தால் கட்சியை கலைத்துவிடலாம் என்றே அவர் நிர்வாகிகளிடம் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து கட்சிக்கு தேர்தல் சின்னம் தேர்வு நடைபெற்றது. இதில் தேர்தல் ஆணையட் பட்டியலில் இருந்த சின்னங்களில் இரட்டை இல்லை சின்னத்தை தேர்ந்தெடுத்தார் எம்ஜிஆர்.

அதிமுகவின் பிரதான சின்னமானது

ஒரு மாதம் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் உதய சூரியனால் இரட்டை இல்லை எரிந்து சாம்பலாகிவிடும் என்றே திமுக வினர் கூறிவந்தனர். எப்படியும் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்று தீரத்தில் இருந்த எம்ஜிஆர் இரட்டை விரலைக் காண்பித்து, இரட்டை இலைக்கு ஓட்டுப் போடுங்கள் என்றார். இரட்டை இலை சின்னம் உதயசூரியனை விட அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிமுகவின் பிரதான சின்னமானது இரட்டை இலை.

கலைக்கப்பட்ட ஆட்சி

இந்நிலையில் 1987, டிசம்பர் 24-ம் தேதி எம்ஜிஆர் மரணம் அடைந்ததால் ஜெயலலிதாவின் தனி அரசியல் தீவிரமானது. அங்கேயே எம்ஜிஆர் மனைவி ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரு கோஷ்டிகளாகப் பிரிந்தது அதிமுக. தொடர்ந்து முதல்வரான ஜானகி அம்மாள் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல், பெரும் ரகளையாகி, ஆட்சி கலைக்கப்பட்டு கவர்னர் ஆட்சி அமலுக்கு வந்தது. 6 மாதங்களில் தேர்தல்.

ஜெ அணி - ஜா அணி

திமுக தன் தோழமைக் கட்சிகளுடன் போட்டியிட்டது. காங்கிரஸ் தன் சொந்த பலத்தைச் சோதித்துப் பார்க்க ஜிகே மூப்பனார் தலைமையில் தனித்துக் களம் கண்டது. அதிமுக இரண்டாகப் பிரிந்து ஜெயலலிதா தலைமையில் ஒரு அணி போட்டியிட்டது. ஜானகி தலைமையில் இன்னொரு அணி, சிவாஜி கணேசனின் புதிய அரசியல் கட்சியான தமிழக முன்னேற்ற முன்னணியுடன் கூட்டு சேர்ந்து போட்டியிட்டது.

முடக்கப்பட்ட இரட்டை இலை

அதிமுக இரண்டுபட்டதால், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. ஜெயலலிதா அணிக்கு சேவல் சின்னமும், ஜானகி அணிக்கு இரட்டைப் புறா சின்னமும் கிடைத்தன. தேர்தலில் திமுக வெற்றிப் பெற்றது. ஜெயலலிதா தலைமையிலான அணிக்கு 27 இடங்கள் கிடைத்தன. அவர் பிரதான எதிர்க்கட்சித் தலைவரானார். ஜானகி அணிக்கு ஒரு இடம் கூடக் கிடைக்கவில்லை.

இரட்டை இலையை கைப்பற்றிய ஜெ

கொஞ்ச நாள் அமைதியாக இருந்தார் ஜானகி. ஒரு நல்ல நாளில் ஜெயலலிதா - ஜானகி சந்திப்பு நடந்தது. இதைத் தொடர்ந்து அரசியலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ஜானகி, தனது அணியை ஜெயலலிதாவிடமே ஒப்படைத்துவிட்டார். இதைத்தொடர்ந்து ஒன்றுபட்ட அஇஅதிமுகவுக்கு எம்ஜிஆரின் வெற்றிச் சின்னமான இரட்டை இலை கிடைத்தது.

முதல்முறையாக முதல்வரான ஜெ

அடுத்து வந்த 1991 தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் பெரும் மெஜாரிட்டி பெற்று ஆட்சியைப் பிடித்தது அதிமுக. ஜெயலலிதா முதல் முறையாக முதல்வர் பதவி ஏற்றார். இதுவரை அதிமுகவின் வெற்றிச்சின்னமாக இரட்டை இலைச் சின்னம் இருந்து வருகிறது.

மீண்டும் முடக்கப்பட்ட இரட்டை இலை

28 ஆண்டுகளுக்குப் பின்னர், தற்போது சசிகலா-ஓபிஎஸ் என்ற இருவேறு அணிகளால் இரட்டை இலை சின்னம் மீண்டும் முடக்கத்துக்கு ஆளாகியுள்ளது. ஒரு பக்கம் ஓபிஎஸ் அணியினர் சின்னமும், கட்சியும் எங்களுக்குத்தான் எனக் கூறிவருகின்றனர். மற்றொரு பக்கம் சசிகலா தரப்பு உரிமை கொண்டாடி வருகிறது.

இதனிடையே சுமூகமாக பேசி இரு அணியும் இணைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதுவும் இதுவரை சாத்தியமாகவில்லை. இதனால் இரட்டை இலை சின்னத்திற்கு இன்னும் விடிவு காலம் பிறக்கவில்லை. சின்னம் யாருக்கு என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

மூலக்கதை