5 நாள் விசாரணைக்கு பிறகு டிடிவி தினகரன் நீதிமன்றத்தில் நாளை ஆஜர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
5 நாள் விசாரணைக்கு பிறகு டிடிவி தினகரன் நீதிமன்றத்தில் நாளை ஆஜர்

சென்னை: இரட்டை இலை சின்னத்தை சசிகலா அணிக்கு பெற்று தருவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் டிடிவி. தினகரன், புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர் மூலம் ரூ. 50 கோடி பேரம் பேசியுள்ளார். முதற்கட்டமாக ரூ. 1. 30 கோடி பணம் ஹவாலா ஏஜென்ட்கள் மூலம் தரப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக டெல்லி குற்றவியல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் நட்சத்திர ஓட்டலில் பதுங்கியிருந்த பெங்களூரை சேர்ந்த புரோக்கர் சுகேஷ் சந்திர சேகரை கடந்த 16ம் தேதி போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் டிடிவி. தினகரன், மல்லிகார்ஜூனா, தினகரன் உதவியாளர் ஜனார்த்தனன், வக்கீல் குமார் ஆகியோருக்கு டெல்லி போலீசார் சம்மன் அனுப்பினர்.

இதை தொடர்ந்து விசாரணைக்கு டெல்லி வந்த டிடிவி.

தினகரன், மல்லி கார்ஜூனாவிடம் தனித்தனியாக போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, டிடிவி தினகரன் பணம் கொடுத்ததாக ஒப்பு கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து டிடிவி தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே சுகேஷ் சந்திரசேகரிடம் நடத்திய விசாரணையில் ரூ. 50 கோடி ஹவாலா பணத்தை டிடிவி தினகரனிடம் இருந்து டெல்லிக்கு கொண்டு வருவதற்கு முக்கிய ஏஜென்டாக செயல்பட்ட நத்துசிங் என்கிற நரேஷை நேற்றுமுன்தினம் டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.



பின்னர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் கொடுத்த தகவலின் பேரில் சென்னையில் இருந்து ஹவாலா பணம் கொண்டு வர குருவியாக செயல்பட்டவர்கள் யார், யார் என்பது குறித்த முகவரியுடன் கூடிய முழு விவரங்களையும் நரேஷ் டெல்லி போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அவர் கொடுத்த தகவலின் பேரிலும், சுகேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த முன்னாள் பொதுப்பணித்துறை ஊழியர் மோகன்,  பாரிமுனை நாரயண முதலி தெருவை சேர்ந்த நரேந்திர குமார், திருவேற்காடு சுந்தர  சோழபுரம் பஜனை கோயில் தெருவை சேர்ந்த கோபி நாத், கொளப்பாக்கம் மேக்ஸ்  ஓர்த் நகரை சேர்ந்த பிலிப் டேனியல், பெரம்பூரை சேர்ந்த ஜெயச்சந்திரன்  மற்றும் மோகன்ராஜ் ஆகியோரது வீடுகளில் டெல்லி போலீசார் நேற்றுமுன்தினம்  அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, அவர்களது வீடுகளில் பணம் கைமாறியது  தொடர்பாக முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

மேலும், நரேஷ்  கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் அவர்களிடம் விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி போலீசார் சம்மன் அளித்தனர். அந்த சம்மன் பெற்றவர்களை டெல்லி குற்றவியல் போலீஸ் நிலையத்தில் வரும் செவ்வாய் கிழமைக்குள் ஆஜராகுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இல்லையெனில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று டெல்லி போலீஸ்  வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையே நேற்று முன்தினம் நடத்திய சோதனையிலும்,  தினகரனிடம் நடத்திய விசாரணையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாக  கூறப்படுகிறது.

அந்த ஆவணங்களை நாளை டெல்லியில் லஞ்ச ஒழிப்பு  தனிக்கோர்ட்டில் சமர்பிக்கவிருக்கின்றனர்.

இந்நிலையில், தினகரன், நண்பர் மல்லிகார்ஜூனா 3 நாட்கள்  விசாரணை முடித்து அவர்கள், இரண்டு பேரையும் அழைத்து கொண்டு  போலீசார் நேற்று இரவு டெல்லி புறப்பட்டு சென்றனர். இரவு 10. 20 மணிக்கு டெல்லியை அடைந்தனர்.

இந்த நிலையில், டிசிபி மதூர்வர்மா தலைமையில் ஏசிபி சஞ்சய் ஷெராவத் உட்பட 5 போலீசார்   டி. டி. வி. தினகரன், மல்லிகாகார்ஜூனா, நரேஷ் ஆகிய 3 பேரையும் டெல்லி போலீசார் சானக்கியாபுரி குற்றபிரிவு காவல்நிலையதிற்கு அழைத்து வந்தனர்.

அவர்கள் 3 பேரையும் ஒரே அமர்வில் வைத்து டெல்லி போலீசார் தீவிர விசாரைண நடத்தினர்.

அப்போது, தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் பேரம் பேசியவர்கள் யார்? ஹவாலா பணம் யார் மூலம் கொண்டு வரப்பட்டது,  3 பேருக்கும் தொடர்பு ஏற்பட்டது எப்படி? உட்பட பல்வேறு கேள்விகளை போலீசார் அவர்களிடம் எழுப்பினார். அவர்களது கேள்விக்கு 3 பேரும் முதலில் பதிலளிக்க மறுத்தனர்.

அதன்பிறகு போலீசார் டேப் ஆடியா, 3 பேரின் வாக்குமூலம் வீடியோ பதிவு மற்றும் கைப்பற்ற முக்கிய ஆவணங்கள் குறித்து அவர்களிடம் தெரிவித்தனர். அதன்பிறகே 3 பேரும் பேச ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.

அப்போது, அவர்களிடம் நடத்திய விசாரணையை வீடியோவில் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நாளை பிற்பகல் 3 மணியளவில் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

மேலும் 3 பேரிடம் விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக கால அவகாசம் கேட்கலாம் என்று கூறப்படுகிறது.

அப்படி நீதிபதி அதை மறுக்கும் பட்சத்தில் டிடிவி தினகரன், மல்லிகார்ஜூனா நரேஷ் உட்பட 3 பேரும் நீதிமன்ற காவலில் வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

.

மூலக்கதை