மத்திய அரசின் தொடர் நடவடிக்கைகள் ஜெயலலிதா மரணத்தின் மர்மம் போலவே நீடிக்கிறது

தமிழ் முரசு  தமிழ் முரசு
மத்திய அரசின் தொடர் நடவடிக்கைகள் ஜெயலலிதா மரணத்தின் மர்மம் போலவே நீடிக்கிறது

சென்னை: திமுக செயல் தலைவரும் தமிழக எதிர்கட்சி தலைவருமான மு. க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:
 தமிழக மக்களின் பிரச்சினைகள் குறித்து மாநிலத்தில் உள்ள அதிமுக அரசும் மத்தியில் பாஜ தலைமையில் உள்ள மத்திய அரசும் கவலைப்படவில்லை என்பது உள்ளபடியே வேதனையளிப்பதாக இருக்கிறது. விவசாயிகள் தொடர் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காவிரி டெல்டா பகுதிகள் வறண்டு கிடக்கின்றன. லட்சக்கணக்கான மாணவர்களின் டாக்டர் கனவு “நீட்” தேர்வு கட்டாயத்தால் கேள்விக்குறியாகியிருக்கிறது.

 வறட்சியின் பிடியில் சிக்கி மக்கள் ஆங்காங்கே காலிக்குடங்களுடன் குடிநீருக்காக தவிக்கும் நிலை உருவாகி, மத்திய அரசின் நிதியும் கிடைக்காமல் எங்கும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்துமாறு விவசாயிகள் விடுக்கும் கோரிக்கைகள் பற்றி துளி கூட மத்திய அரசுக்கு அக்கறை இல்லை. மறைந்த ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 2016ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதியிலிருந்து இன்றுவரை தமிழக அரசு நிர்வாகம் முடங்கிக் கிடக்கிறது.

தமிழக மக்களை இப்படி பல்வேறு வாழ்வாதாரப் பிரச்சினைகளும், எதிர்கால பிரச்சினைகளும் ஆட்டிப் படைக்கின்ற நேரத்தில், மத்திய பாஜ அரசு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வருமான வரித்துறை, அமலாக்கத்துறை - இப்போது போதாக்குறைக்கு டெல்லி போலீஸ் என அனைத்து வகையான ஏஜென்சிகளையும் முடுக்கிவிட்டு, அதிமுகவை முதலில் உடைத்தும், பிறகு இணைப்பதற்குமான முயற்சிகளை செய்து, இந்த மாநிலத்தின் அரசு நிர்வாகத்தை முழுமையாக நிலைகுலைய வைத்திருக்கிறது.

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் திமுகவிற்கு எப்போதுமே உடன்பாடு உண்டு.   ஆனால் ஒரு கட்சியை உடைப்பதற்கும், இணைப்பதற்கும் சுதந்திரமாக, நேர்மையாக செயல்பட வேண்டிய வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அமைப்புகள் திட்டமிட்டு பயன்படுத்தப்படுகிறது என்ற சந்தேகம் தமிழகத்தைப் பொறுத்தமட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

முதன்முதலில் அதிமுக பிரமுகர் கரூர் அன்புநாதன் வீட்டிலும், தோட்டத்திலும் ரெய்டு நடத்தப்பட்டு 4. 77 கோடி ரூபாயும், பணம் எண்ணும் இயந்திரங்களும் வருமான வரித்துறையால் பிடிக்கப்பட்டன. முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் உயிருடன் இருந்தபோது நடைபெற்ற இந்த ரெய்டு பிறகு அப்படியே மூட்டை கட்டி வைக்கப்பட்டது.

அந்த ரெய்டின் மீதோ, கரூர் அன்புநாதனுக்கு நெருக்கமான அமைச்சர்கள் மீதோ இன்றுவரை மேல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

பிறகு, திருப்பூரில் 570 கோடி ரூபாய்க்கு மேல் கன்டெய்னரில் பணம் கடத்தப்பட்டு, மடக்கிப் பிடிக்கப்பட்டது.   நான்கு வரி கடிதத்தை அதுவும் வங்கியில் உள்ள கீழ்நிலை அதிகாரி கொடுத்ததை வருமான வரித்துறையும், தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொண்ட நிகழ்வு அரங்கேறியது.
அந்த கன்டெய்னர் விவகாரம் பற்றி சி. பி. ஐ.

விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று திமுக சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டு, சென்னை உயர்நீதிமன்றமும் “சி. பி. ஐ. விசாரணைக்கு” உத்தரவிட்டது.

எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், சென்னை மாநகர மேயராக இருந்த சைதை துரைசாமி ஆகியோர் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையின் சுவடுகள் கூட மறைந்து விட்டன. மணல் மாபியா என்று அழைக்கப்படும் அதிமுக அரசின் மணல் ஊழல் முக்கிய கூட்டாளியான “சேகர் ரெட்டி அன்ட் கோ” வினர் மீது சி. பி. ஐ. , வருமான வரித்துறை இணைந்து நடத்திய ரெய்டுகளும், அதிரடி நடவடிக்கைகளும் நாளுக்கு நாள் மாயமாகிக் கொண்டேயிருக்கின்றன.

தலைமைச் செயலகத்தில் மத்திய போலீஸ்படையை அனுப்பி, தலைமைச் செயலாளராக இருந்த  ராமமோகனராவ் அலுவலகத்திற்குள்ளேயே ரெய்டு நடத்துமாறு வருமான வரித்துறையை இயக்கியது மத்திய அரசு.

மாநில சுயாட்சி கொள்கைகளுக்கு எதிராக ஒரு மாநில அரசின் தலைமைச் செயலகத்திற்குள் நுழைந்து ரெய்டு செய்ததை திமுக ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும், ஊழல் நடவடிக்கை என்ற ரீதியில் சம்பந்தப்பட்ட ஊழல் வாதிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது.

ஆனால் தங்க கட்டிகளும், ரூபாய் நோட்டுக் கட்டுகளும் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்பட்ட ராமமோகனராவ் மீது ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடாமல் அவருக்கு மீண்டும் பதவியே வழங்கப்பட்டு விட்டது.

எதற்கு எல்லாமோ அறிக்கை விடும் பாஜ வினர் ’இவ்வளவு பெரிய ஊழல் வாதிக்கு எப்படி மீண்டும் பணி வழங்கினீர்கள்’ என்று இதுவரை கேள்வி கேட்கவில்லை என்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது. ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் பட்டியலை கைப்பற்றிய வருமான வரித்துறை, சுகாதாரத்துறை அமைச்சர் சி.

விஜயபாஸ்கர் வீட்டில் மட்டும் ரெய்டு செய்தது.

அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதலமைச்சர் உள்ளிட்ட ஏனைய அமைச்சர்கள் குறித்து இதுவரை ஒரு சிறிய அளவிலான விசாரணையைக் கூட மேற்கொள்ளாமல் இருக்கிறது.

இன்னொரு பக்கம் திரு டி. டி. வி. தினகரன் மீது தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றார் என்று வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் இப்போது அதிமுகவில் உள்ள ஒரு அணிக்கு எதிராக நடக்கும் “செலக்ட்டிவ் ரெய்டு” - “செலக்ட்டிவ் கைது” உள்ளிட்டவற்றின் பின்னனியிலும், இன்னொரு அணியின் ஊழலை தூசு படியவிட்டு வேடிக்கை பார்ப்பதிலும் மத்திய அரசுக்கு தலைமை தாங்கும் பாஜவின் கை மறைவாகக் கூட அல்ல- வெளிப்படையாகத் தெரிகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மத்திய அரசின் தொடர் நடவடிக்கைகள் எல்லாமே மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள “மர்மம்” போலவே நீடிக்கிறது.
ஜெயலலிதா மறைந்தவுடன் ஏதோ இப்போதுதான் அதிமுக அமைச்சர்கள் மத்தியில் ஊழல் பெருகிவிட்டது என்பது போல் வருமான வரித்துறை முதல் அனைத்து ஏஜென்சிகளையும் ஆர்வத்துடன் களத்தில் இறக்குவது உண்மையான ஊழல் ஒழிப்பு நடவடிக்கையையும் தாண்டி, மத்தியில் ஆட்சியிலிருக்கிறோம் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழகத்தில் பாஜ காலூன்றுவதற்கு நடக்கும் முஸ்தீபுகள் என்றே தோன்றுகிறது.
திராவிட உணர்வு மேலோங்கியிருக்கும் தமிழகத்தில் தங்களின் முயற்சி பலிக்காது என்பதை பாஜ உணர்ந்து கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் கடும் இன்னலுக்கு உள்ளாக்கியுள்ள அண்டை மாநில நதி நீர் பிரச்சினைகள், மத்திய அரசே முடிவு எடுக்க வேண்டிய தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல், மீனவர்கள் தொடர் கைது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் எதிலும் மத்தியில் உள்ள பாஜ அரசு வேகம் காட்டவில்லை.

“அதிமுகவின் ஊழல் அணிகளை” இணைப்பதற்காக எடுக்கும் நடவடிக்கைளில் ஒரு சதவீதம் கூட தமிழக மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க பாஜ தலைமையிலான மத்திய அரசு எடுக்கவில்லை என்பதைப் பார்க்கும்போது, தமிழகத்தில் நிலையற்ற ஆட்சியை உருவாக்கி, அந்த நிழலில் பாஜவை எப்படியாவது வளர்த்து விட முடியுமா என்று வியூகம் வகுத்து, தனது சுயநலத்திற்காக அரசியல் சட்ட அமைப்புகளை இப்படி கண்மூடித்தனமாக மத்திய அரசு. பயன்படுத்திக் கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

திராவிட உணர்வு ஊறிய தமிழக மண்ணில் பாஜ வளர்க்கும் வீண் முயற்சிக்காக, அரசியல் சித்துவிளையாட்டுகளில் ஈடுபடாமல், இதுவரை அதிமுக அமைச்சர்களின் மீது நடத்தப்பட்டுள்ள ரெய்டுகள், அதில் கைப்பற்றப்பட்டுள்ள ஆதாரங்கள் அடிப்படையில் தயவு தாட்சயன்மின்றி ஊழல் ஒழிப்பு மேல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

“அரசியல் சட்ட அமைப்புகளின் நேர்மைத்தன்மையையும், சுதந்திரத்தையும் காப்பாற்றுவேன்” என்று மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்த பிரதமர் “வருமான வரித்துறை, அமலாக்கப்பிரிவு, சி. பி. ஐ” போன்ற அமைப்புகள் அரசியலுக்காக பா. ஜவால் பயன்படுத்தப்படுவதை தடுத்து, தமிழகத்தில் அரசியல் சட்டப்படியான நிலையான ஆட்சி நடைபெறுவதையும், மாநில அரசுக்குள்ள அதிகாரங்களுடன் செயல்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

.

மூலக்கதை