நாகை உட்பட பல மாவட்டங்களில் தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சம் காலி குடங்களுடன் பெண்கள் மறியல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
நாகை உட்பட பல மாவட்டங்களில் தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சம் காலி குடங்களுடன் பெண்கள் மறியல்

பெரம்பலூர்: தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பெண்கள் காலி குடங்களுடன் குடிநீருக்கு அலைந்து வருகின்றனர்.

நேற்று பல்வேறு இடங்களில் குடிநீர் கேட்டு போராட்டங்கள் நடந்தது.
பெரம்பலூர் : வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது கீழப்புலியூர்.

இங்குள்ள சிலோன் காலனிப் பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கான குடிநீர் வசதியை ஊராட்சி நிர்வாகம் இன்னமும் முறைப்படுத்தவில்லை.

அப்பகுதியில் வெட்டப்பட்ட கிணற்று நீரையும் குழாய்களின் மூலம் விநியோகிப்பதில்லை.

 இதனைக் கண்டித்து நேற்று சிலோன் காலனி பொதுமக்கள் கீழப்புலியூர் சிறுகுடல் பிரிவு சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர்:  வி. கைகாட்டி அருகேயுள்ள ரெட்டிப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட முனியங்குறிச்சி பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

இப்பகுதி மக்களுக்கு கடந்த ஒருமாதமாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள்  முனியங்குறிச்சி பஸ் நிலையத்தில்  நேற்று மறியலில் ஈடுபட்டனர்.

கரூர் : தோகைமலை அடுத்த வடசோி ஊராட்சியில் ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்த ஊராட்சியில் குடிநீர் தட்டுபாடு நிலவி வருகிறது. ஆத்திரமடைந்த இப்பகுதி மக்கள் காலிகுடங்களுடன் வடசேரி பஸ் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நாகை:  மயிலாடுதுறை அருகே உள்ள அகரகீரங்குடி ஊராட்சியில் கடந்த 2 மாதமாக குடிநீர் சப்ளை வழங்கப்படவில்லை. இதைக் கண்டித்து அகரகீரங்குடி பகுதி பொதுமக்கள் காலி குடங்களுடன் மயிலாடுதுறை-திருவாரூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 இதனால்  1 மணிநேரம் போக்குவரத்து பாதித்தது.

தஞ்சை : பேராவூரணி ஒன்றியம் அம்மையாண்டி, வீரராகவபுரம், பஞ்சநதிபுரம், ஏனாதிக்கரம்பை கிராமங்களில் கடந்த 15 தினங்களுக்கு மேலாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த இப்பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் நேற்று வீரராகவபுரம் கடைவீதியில் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

.

மூலக்கதை