கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலையில் கேரளாவில் சிக்கிய வாலிபரிடம் போலீசார் ரகசிய விசாரணை

தமிழ் முரசு  தமிழ் முரசு
கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலையில் கேரளாவில் சிக்கிய வாலிபரிடம் போலீசார் ரகசிய விசாரணை

ஊட்டி: நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் கேரள மாநிலத்தில் சிக்கிய வாலிபர் ஒருவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் காவலாளியை கொன்றுவிட்டு, ஜெயலலிதாவின் பங்களாவுக்குள் நுழைந்த கும்பல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது.

பணம் மற்றும் நகைக்காக இந்த கும்பல் உள்ளே சென்றதா அல்லது ஆவணங்களை கைப்பற்ற சென்றதா என்பது புரியாத புதிராகவே உள்ளது. 5 தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது பங்களா கேட் வரை 3 வாகனங்கள் வந்து சென்றதை மட்டுமே போலீசார் கண்டறிந்துள்ளனர். நேற்று வரை ஸ்கார்ப்பியோ மற்றும் இனோவா கார் வந்ததாக கூறப்பட்டது.



ஆனால் நேற்று மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலைகள், சோதனை சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டதில் கோடநாடு எஸ்டேட்டிற்கு வந்து சென்றது பஜூரா மற்றும் இனோவா கார் என்பது தெரியவந்துள்ளது. இந்த வாகனங்களை பிடிக்க மற்றும் அடையாளம் தெரிந்து கொள்ள மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலையோரங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில் மேலும் இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஒன்று சென்னைக்கும், மற்றொன்று தென்மாவட்டங்களுக்கும் சென்றதாக கூறப்படுகிறது.

கூடலூர் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்த போது கொலை நடந்த அன்று அதிகாலை ஒரு இனோவா கார் போலீஸ் சோதனையின் போது சிக்கியது. அந்த காரில் 3 பேர் இருந்தனர்.

மேலும் காரில் உரிய ஆவணங்கள் இல்லாததால் கூடலூர் போலீசார் காரை பறிமுதல் செய்து காவல்நிலையத்தில் வைத்திருந்தனர். இதற்கிடையில் இரண்டு நாட்களுக்கு முன் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் பறிமுதல் செய்யப்பட்ட காரின் ஆவணங்களை போலீசாரிடம் காண்பித்து காரை எடுத்து சென்றனர்.

தொடர்ந்து கோடநாடு, ஊட்டி, கோத்தகிரி, கூடலூர் ஆகிய பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவில் பதிவாகியுள்ள வாகனமும், கூடலூர் போலீசார் பறிமுதல் செய்த கேரள வாகனத்தோடு ஒத்துப்போனதாக தெரிகிறது.

இதனைதொடர்ந்து, தனிப்படையின் ஒரு பிரிவினர் கேரள மாநிலத்திற்கு விரைந்தனர். மேலும், அங்கு சென்ற போலீசார் எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கார் மற்றும் ஒரு வாலிபர் சிக்கியதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து நீலகிரி மாவட்ட எஸ். பி. முரளிரம்பா உள்பட போலீஸ் அதிகாரிகள் நேற்று கேரளா சென்றனர்.

கொலை, கொள்ளை சம்பவத்தில் அவருக்கு தொடர்பு உள்ளதா என போலீசார் அந்த வாலிபரிடம் ரகசியமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

.

மூலக்கதை