ஓராண்டாகியும் திறக்கப்படாத பள்ளி கட்டிடம்: புழல் அருகே மாணவர்கள் அவதி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஓராண்டாகியும் திறக்கப்படாத பள்ளி கட்டிடம்: புழல் அருகே மாணவர்கள் அவதி

புழல்: சென்னை புழல் அடுத்த கதிர்வேடு அரசு உயர்நிலைப் பள்ளியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் போதுமான வகுப்பறைகள் இல்லாததால், கூடுதல் வகுப்பறைகளை கட்டித் தரும்படி கடந்த 2009-ம் ஆண்டு முதல் மாவட்ட நிர்வாகத்துக்கு பள்ளி ஆசிரியர்களும் அப்பகுதி மக்களும் பலமுறை கோரிக்கை விடுத்தனர்.
இக்கோரிக்கையின்பேரில், கடந்த 2010-11-ம் ஆண்டில் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின்கீழ் கட்டிடங்கள் கட்டுவதற்கு ₹1. 67 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

இந்நிதியில் கடந்த 2015-16-ம் ஆண்டில் இப்பள்ளியில் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.

எனினும், கடந்த ஓராண்டுக்கு மேலாகியும் புதிய கட்டிடம் மாணவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை.

இதனால் இடியும் நிலையில் உள்ள பழைய கட்டிட பகுதி மற்றும் மரத்தடிகளில் மாணவர்கள் படிப்பதற்கு பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, வரும் ஜூன் மாதம் பள்ளி திறக்கும் நேரத்திலாவது இந்த புதிய கட்டிடத்தை மாணவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்துகின்றனர்.

.

மூலக்கதை