மாவோயிஸ்ட் தாக்குதலில் வீரமரணம் : துப்பாக்கி குண்டுகள் முழங்க தமிழக வீரர்கள் உடல் தகனம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மாவோயிஸ்ட் தாக்குதலில் வீரமரணம் : துப்பாக்கி குண்டுகள் முழங்க தமிழக வீரர்கள் உடல் தகனம்

வலங்கைமான்: சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் தெற்கு பஸ்டர் பர்கபால்- சிந்தாகுவா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டபோது நக்சலைட்கள் மறைந்து இருந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 25 வீரர்கள் பலியாயினர். பலியானவர்களில்  பத்மநாபன்(48), செந்தில்குமார்(35), திருமுருகன்(37), அழகுபாண்டி(26) ஆகிய 4 தமிழக வீரர்களும் அடங்குவர்.

4 வீரர்களின் உடல்களும் சட்டீஸ்கரிலிருந்து சிறப்பு விமானத்தில் நேற்று மாலை திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்பட்டது. செந்தில்குமார், பத்மநாபன், திருமுருகன் ஆகியோரின் உடல்கள் திருச்சி விமான நிலையத்தில் இறக்கப்பட்டது. அழகுபாண்டி உடல் அதே விமானம் மூலம் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டது.

நேற்று இரவு 8. 30 மணிக்கு பத்மநாபனின் உடல் அவிச்சக்குடிக்கு வந்தது.

அவரது உடலுக்கு அமைச்சர் காமராஜ், கலெக்டர் நிர்மல்ராஜ், ஆர்டிஓ முத்துமீனாட்சி, தஞ்சை எஸ்பி மகேஷ், சென்னை சிஆர்பிஎப் மிஸ்ரா, திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அமைச்சர் காமராஜ் அரசு சார்பில் ரூ. 20 லட்சத்திற்கான காசோலையை பத்மநாபனின் குடும்பத்தினரிடம் வழங்கினார்.

பத்மநாபனின் மனைவி மகேஸ்வரி(32). மகன் முரளி(5), மகள் மோனிஷா(1) ஆகியோர் பத்மநாபனின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறியது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இரவு 10. 30மணிக்கு அங்குள்ள மயானத்தில் ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.

இதேபோல் செந்தில்குமார் உடல் நேற்றிரவு 8 மணிக்கு நீடாமங்கலத்தில் அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. முன்னதாக அண்ணாசிலையில் இருந்து காமராஜர் காலனி வரை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

அங்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. அமைச்சர் காமராஜ், இறந்த செந்தில்குமார் மனைவி வித்யாவிடம் ரூ. 20 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

அவரது உடலுக்கு கலெக்டர் நிர்மல் ராஜ், எஸ்பி மயில்வாகனன், டிஆர்ஓ சக்திமணி, ஆர்டிஓ செல்வசுரபி, தாசில்தார் ஜானகி மற்றும் அரசியல் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் பொதுமக்கள், வெளியூர் இளைஞர்க்ள வந்து அஞ்சலி செலுத்தினர். இன்று காலை 7. 30மணிக்கு வெண்ணாறு பாலத்தில் இருந்து மூணாறு தலைப்பு செல்லும் வழியில் உள்ள மயானத்தில் ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க உடல் தகனம் செய்யப்பட்டது.

இதேபோல் சேலத்தில் திருமுருகன் உடலும், மதுரையில் அழகுபாண்டி உடலும் ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

.

மூலக்கதை