தலைமை கவனத்தை ஈர்க்க எத்தனையோ வழி இருக்குதே.. தமிழர்கள் வயிற்றில்தான் அடிக்கனுமா எச்.ராஜா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தலைமை கவனத்தை ஈர்க்க எத்தனையோ வழி இருக்குதே.. தமிழர்கள் வயிற்றில்தான் அடிக்கனுமா எச்.ராஜா?

சென்னை: தமிழகத்தின் சுப்பிரமணிய சாமியாக மாறுவதற்கு பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா முயன்று கொண்டிருப்பது அவரது சர்ச்சை பேச்சுக்களில் இருந்து அம்பலமாகியுள்ளது.

எச்.ராஜாவின் பேச்சுக்கள் அவரது டிவிட்டுகளை தொடர்ந்து கவனித்து வருவோருக்கு ஒரு விஷயம் நன்கு தெரியும். அவர் வட இந்தியாவில் சில பாஜக நிர்வாகிகள் முன்வைக்கும், பிரித்தாளும் சூழ்ச்சியை தமிழகத்தில் செயல்படுத்த நினைக்கும் ஒரு நபர் என்பது.

ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோதே இவர் தனது சர்ச்சை கருத்துக்களை அவிழ்த்துவிட ஆரம்பித்தார். முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்து தேர்வு எழுத அனுமதிக்க கூடாது, இதனால் விடைத்தாள்களை பிட் எடுத்துச் செல்வது சுலபமாகிவிடும் என்று இவர் கூறியபோது, முஸ்லிம் அமைப்புகள் கொந்தளித்தன.

பிரச்சினைகள் தன்னை நெருங்கும்போதெல்லாம், ஜெயலலிதா எனது அக்கா போன்றவர் என ஐஸ் மழை பொழிந்து நைஸ் செய்து தப்பிவந்தார் எச்.ராஜா. மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைத்த பிறகு, தேசிய பொதுச்செயலாளர் என்ற பதவியையும் பெற்ற பிறகு தலைகால் புரியவில்லை மனிதருக்கு. சர்ச்சை கருத்துக்களை கூறுவதை தினமும் டிஃபன் சாப்பிடுவதை போல நினைத்து பின்பற்றி வருகிறார் ராஜா.

ஜல்லிக்கட்டு போராட்டம் உச்சத்திலிருந்தபோது, அதை எப்படியாவது கலைத்துவிட வேண்டும் என நினைத்து சகுனி வேலையை பார்த்தார். கோவையில் போராட்டம் நடத்தியபோது, ஒரு இந்து தமிழனை, இஸ்லாமிய போராட்டக்காரர்கள் இணைந்து தாக்கியதாக டிவிட்டரில் கருத்து பதிவு செய்தார். இந்து-முஸ்லிம் இளைஞர்கள் அடித்துக்கொண்டு போராட்டத்தை கெடுத்துவிடுவார்கள் என்பது அண்ணாருடைய அவா.

ஆனால், உண்மையிலேயே அப்படி எதுவும் நடைபெறவில்லை என்பதை கோவை இளைஞர்கள் அம்பலப்படுத்தியதால் ஒரு துரும்பு கூட அசையாமல் போராட்டத்தின் உறுதி கூடியது. இந்த விஷம் பொருந்திய கருத்துக்காக ஹெச்.ராஜாவின் டிவிட்டர் கணக்கிற்கு போய் கழுவி, கழுவி ஊற்றினர் நெட்டிசன்கள். மதக் கலவரம் ஈசியாக பரவும் என்பதற்காக கோவையை, தேர்ந்தெடுத்த ஹெச்.ராஜாவின் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாக போனது. இன்னும் பயிற்சி வேண்டுமோ என 23ம் புலிகேசி மன்னனை போல மனக் கணக்கு போட்டுக்கொண்டார் ராஜா.

இந்த நிலையில்தான், தமிழக மீனவர் பிரிட்ஜோவை விடுதலைப்புலிகளின் கைகூலிகளும் ஆதரவாளர்களும் ஏன் கொலை செய்திருக்ககூடாது என பட்டுக்கோட்டையில் நடந்த விழாவில் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது, உளறி வைத்தார் எச்.ராஜா. இந்த கருத்து, பொர்க்கி சாமியின் தமிழ் வெர்சன் என்பதை உணர்ந்து வைத்துள்ளனர் தமிழர்கள். இலங்கையை காப்பாற்ற ஏஜென்டாக செயல்படும் சாமியின் அடியொற்றி, அண்ணாரும் இக்கருத்தை வைத்திருப்பது பட்டவர்த்தனம்.

இந்நிலையில், ஆட்டை கடித்து, மாட்டைக் கடித்து கடைசியில் மனிதரை கடித்த கதையாக, இப்போது மோடியின் செயல்பாட்டை எதிர்த்து கேள்வி கேட்ட நிருபர் ஒருவரை தேச துரோகி என்று கூறி பட்டமளித்துள்ளார் எச்.ராஜா. செய்தியாளர்களை ஹெச். ராஜா சந்தித்தார். அப்போது விவசாயிகள் நிவாரணம் குறித்து மத்திய அரசு மௌனம் காப்பது ஏன், கென்யா நாட்டுக்கு பல ஆயிரம் கோடி நிதி உதவி செய்துவிட்டு தமிழகத்திற்கு இவ்வளவு குறைந்த வறட்சி நிவாரணம் கொடுத்துள்ளீர்களே என்று கேள்வி எழுப்பிய நிருபரிடம், வெளிநாட்டு கொள்கைக்கான நிதி உதவியையும், உள்நாட்டு நிதி ஒதுக்கீடையும் ஒப்பிடுவது சரியில்லை என்று கூறிய ராஜா, திரும்ப திரும்ப கேள்வி எழுப்பிய நிருபருக்கு மேற்சொன்ன பட்டத்தை கொடுத்து கவுரவித்தார்.

கொடுக்கும் வரிப்பணத்திலிருந்துதானே பங்கு கேட்கிறோம் என கூறிய நிருபரிடம், நீங்கள் செலுத்திய பணத்தை நான் திருப்பி தருகிறேன், சும்மா இருந்து கொள்ளுங்கள் என்று ஆணவ தோரணையில் பதிலளித்தார் எச்.ராஜா. போராடும் விவசாயிகள் அத்தனை பேரும் வரி செலுத்தியவர்கள்தான். தீப்பெட்டி முதல், உப்பு, விமானம் என அனைத்துக்கும் வரி செலுத்தும் திருவாளர் பொதுஜனம் தனது தேவைக்கு நிதி உதவி கேட்கும்போது, பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்து தருவேன் என எச்.ராஜா கூறுவது எவ்வளவு பெரிய கயமை.

ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஜிங்ஜாங் அடிப்பதற்கு எவ்வளவோ வழிகள் இருக்கும்போது, தமிழர்கள் வாழ்வை பணயமாக வைக்கிறாரா எச்.ராஜா என்ற எண்ணம் எழுகிறது. இப்படிப்பட்ட சர்ச்சை கருத்துக்களை கூறிதான் உ.பி.யில் ஆதித்யநாத் சிஎம் ஆகிவிட்டார். அதேபோன்ற கருத்துக்களை கூறி தமிழகத்தின் பாஜக தலைவராக தன்னை முன்னிருத்த எச்.ராஜா முயல்வதாக சந்தேகம் எழுகிறது. தமிழிசை போன்றோரின் சாப்ட் பாலிடிக்ஸ்சுக்கு மாற்றாக தன்னை முன்னிருத்த முனைகிறார் எச்.ராஜா. ஆனால், கல்வி அறிவுள்ள தமிழகத்திற்கும், பின்தங்கிய உ.பி.க்கும் வித்தியாசம் உள்ளது என்ற அடிப்படை தெரியாமல் விளையாடிக்கொண்டிருப்பது, கோயில் வாசலில் அங்கபிரதட்சணம் செய்யாமல், குழாயடியில் உருண்ட சரண்யா கதாப்பாத்திரத்திற்கு ஒப்பாகத்தான் முடியும் என்பதை எச்.ராஜாவுக்கு யாராவது எடுத்துச் சொல்வது நல்லது.

மூலக்கதை