பிரசாரத்திற்கு எதிராக கோஷமிட்டதால் தகராறு ஓபிஎஸ், சசிகலா அணி மோதல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பிரசாரத்திற்கு எதிராக கோஷமிட்டதால் தகராறு ஓபிஎஸ், சசிகலா அணி மோதல்

சென்னை- ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் ஓ. பி. எஸ் அணி சார்பில் மதுசூதனனும், சசிகலா அணி சார்பில் டி. டி. வி. தினகரனும் வேட்பாளராக களம் இறங்கியுள்ளனர். முன்னதாக, தினகரன் தரப்பினர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, போலீஸ் பாதுகாப்பு கோரி மதுசூதனன் போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்திருந்தார்.

அதன்படி, அவருக்கு எஸ். ஐ தலைமையில் 6 போலீசார் பாதுகாப்பு வழங்கப்பட்டது. மேலும், தினகரன் வெளியூர்களில் இருந்து ஆட்கள் வரவழைத்து ஆர். கே. நகர் பிரசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளதாகவும், அவர்களால் எனக்கும், என் ஆதரவாளர்களுக்கும் ஆபத்து உள்ளது என மதுசூதனன் கூறிவருகிறார்.

மதுசூதனன் ஆதரவாளர்களை தினகரன் ஆதரவாளர்களால் தொடர்ந்து மிரட்டப்பட்டு வருகிவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், மதுசூதனன் இன்று காலை தண்டையார்பேட்டை மாநகர போக்குவரத்து பணிமனை அருகே உள்ள பவானி அம்மன் கோயிலில் வழிபாடு செய்துவிட்டு கருமாரி அம்மன் கோயில் தெருவில் பிரசாரம் செய்தார்.

அப்போது, கருமாரி அம்மன் கோயில் தெருவில் அமைத்துள்ள தினகரன் தரப்பு பணிமனையில் இருந்த வெளியூர் நிர்வாகிகள் மதுசூதனனுக்கு எதிராக கோஷமிட்டனர்.

பதிலுக்கு மதுசூதனன் ஆதரவாளர்களும் கோஷமிட்டனர். ஒரு கட்டத்தில் இரு தரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, தினகரன் ஆதரவாளர்கள், மதுசூதனன் பிரசார ஆட்டோவை நோக்கி ஓடினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உடனே, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், இரு தரப்பினரையும் தடுத்து நிறுத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். அதிமுக தொண்டர்கள் மதுசூதனன் பக்கம் இருப்பதால் வெளியூர் ஆட்களை வைத்து தினகரன் மிரட்டி வருகிறார்.

இதனால்தான், ஆர். கே. நகர் முழுவதும் வெளி ஆட்களை அவர் குவித்துள்ளதாக மதுசூதனன் அணியினர் குற்றம்சாட்டி உள்ளனர்.



.

மூலக்கதை