விவசாயிகளுக்கு ஆதரவாக வெடிக்கும் போராட்டம்: வள்ளுவர் கோட்டத்தில் நள்ளிரவில் மாணவர்கள் திரண்டதால் பரபரப்பு: மெரினாவில் 2வது நாளாக போலீஸ் பாதுகாப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
விவசாயிகளுக்கு ஆதரவாக வெடிக்கும் போராட்டம்: வள்ளுவர் கோட்டத்தில் நள்ளிரவில் மாணவர்கள் திரண்டதால் பரபரப்பு: மெரினாவில் 2வது நாளாக போலீஸ் பாதுகாப்பு

சென்னை- டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் நேற்று நள்ளிரவு வள்ளுவர் கோட்டம் அருகே திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விவசாய கடன் தள்ளுபடி, நிவாரண உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் கடந்த 2 வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தமிழகம் முழுவதும் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சென்னை மெரினா கடற்கரையில் நேற்று 20 மாணவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தை தொடங்கினர். பேஸ்புக் மூலம் நேரலையாக மாணவர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.



அதைதொடர்ந்து போலீசார் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை விரட்டியடித்து போராட்டத்தை ஒடுக்கினர்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள சுதந்திர தின பூங்கா எதிரே 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள், விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் மூலம் அழைப்பு விடுத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவம் இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற இளைஞர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் வள்ளுவர் கோட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மாணவர்களின் தொடர் போராட்டத்ைத தொடர்ந்து சென்னை முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக மெரினா கடற்கரையில் இன்று 2வது நாளாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மெரினா கடற்கரைக்கு வரும் இளைஞர்கள் மற்றும் பொது மக்களை தீவிர விசாரணை பிறகே அனுமதிக்கின்றனர்.

வள்ளுவர் கோட்டம், கிண்டியில் உள்ள காந்திமண்டபம் உள்ளிட்ட இடங்களில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தை தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது சென்னை முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

.

மூலக்கதை