அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் வகுப்பறைகள் இல்லாததால் மரத்தடியில் படிக்கும் அவலம்: ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் வேதனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் வகுப்பறைகள் இல்லாததால் மரத்தடியில் படிக்கும் அவலம்: ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் வேதனை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் அரசு மற்றும் மாநகராட்சி சார்பில் ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் ஆயிரக்கணக்கில் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் சுமார் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் தற்போது 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான அரசு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அந்தந்த பகுதிகளில் இயங்கி வரும் சென்னை மாநகராட்சி மற்றும் அரசு பள்ளிகளில், அடுத்து வரும் தேர்வுக்கான சிறப்பு வகுப்புகளும் ஒருசில பள்ளிகளில் ஆசிரியர்கள் தனிக்கவனம் எடுத்து, மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.
எனினும், இதுபோன்ற அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் இதுபோன்ற தேர்வு நேரங்கள் மற்றும் பல நேரங்களில் வகுப்பறை இல்லாமல், பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடிகளில் ஆசிரியர்கள் அமர்ந்து பாடம் நடத்தி வருகின்றனர்.

அந்தந்த பகுதிகளில் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி வளாகங்களில் போதிய இடவசதி இருந்தும், அங்கு மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தபடி வகுப்பறைகள் கட்டப்படவில்லை.

உதாரணமாக, சென்னை அருகே நன்மங்கலத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு பல மாதங்களாகியும் இன்றுவரை திறக்கப்படவில்லை.
இதேபோல், சென்னை மதுரவாயல் பகுதியில் இயங்கி வரும் ஒரு அரசு பள்ளியின் வகுப்பறை பயன்படுத்தப்படாமல், அது குடிமகன்களின் மது அருந்தும் கூடாரமாக மாறிவிட்டது. இதனால் அந்த வகுப்பறை முழுவதும் ஏராளமான பிளாஸ்டிக் மற்றும் பாட்டில் கழிவுகள் குப்பை போல் தேங்கியுள்ளன.

மேலும் அங்குள்ள கதவுகள் மற்றும் கண்ணாடி ஜன்னல்கள் உடைக்கப்பட்டு திறந்த நிலையில் கிடக்கின்றன. மேலும், அம்பத்தூரில் மாநகராட்சி மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் ஒரு பள்ளியில், வகுப்பறைக்குள் தமிழக அரசு இலவசமாக வழங்கிவுள்ள மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகள் குப்பை போல் போட்டு வைக்கப்பட்டு உள்ளது.

இதனால் அங்கு படிக்கும் 9-ம் வகுப்பு மாணவ-மாணவிகளை மரத்தடிக்கு அழைத்து வந்து, ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.

இன்னும் ஒருசில அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் போதிய இடவசதி இருந்தும், அங்கு மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆய்வகத்துடன் கூடுதல் வகுப்பறை வசதிகள் செய்து தரப்படவில்லை என பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து ஒருசில ஆசிரியர்களிடம் கேட்டபோது, ‘அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் போதிய இடவசதி இருந்தும், அங்கு கூடுதல் வகுப்பறை வசதிகளை ஏற்படுத்தி தருமாறு ஒவ்வொரு ஆண்டும் கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு பள்ளி சார்பில் கோரிக்கை விடப்படும்.

எனினும், அங்கு கூடுதல் வகுப்பறைகளையோ, மாணவர்களுக்கு தேவையான மேஜை, நாற்காலி வசதிகளையோ ஏற்படுத்தித் தர, போதிய நிதி வருவாய் இல்லை என காரணம் கூறி கல்வித்துறை உயர் அதிகாரிகள் கைவிரித்து வருகின்றனர். எனினும், அவர்கள் மட்டும் வருடத்துக்கு ஒரு புது சொகுசு காரில் பவனி வருகின்றனர்.

அல்லது, ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதல் 3 சிறப்பிடங்களை பிடிக்கும் மாநகராட்சி பள்ளிகளுக்கு மட்டும் அனைத்து கூடுதல் வசதிகளை செய்து தருகின்றனர்.

எங்களது பள்ளிக்கும் போதிய வகுப்பறைகள் மற்றும் ஆய்வகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை அரசு தரப்பில் ஏற்படுத்தி தந்தால், எங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களையும் சிறந்த மாணவராக தரம் உயர்த்த பாடுபட முடியும். ஆனால், இவை அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான் திகழ்கிறது’ என்று ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

சென்னை மாநகராட்சி மற்றும் அரசு பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் திறனை உயர்த்த, அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் இன்டர்நெட் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தருவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

.

மூலக்கதை