திருவொற்றியூரில் மீனவர்கள் சாலை மறியலால் பதற்றம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருவொற்றியூரில் மீனவர்கள் சாலை மறியலால் பதற்றம்

திருவொற்றியூர்- சென்னை துறைமுகத்தில் இருந்து எண்ணூர் துறைமுகம் வரையுள்ள சுமார் 30 கிமீ தூரத்துக்கு 4  வழிச்சாலைகள் அமைக்கும் பணி துவங்கப்பட்டது. இந்த விரிவாக்க பணிகளின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு எர்ணாவூர், சுனாமி குடியிருப்பு பகுதியில் மாற்று குடியிருப்பு வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அவர்கள் தங்கள் இடத்தை காலி செய்துவிட்டு, மாற்று குடியிருப்பு பகுதியில் குடியேறினர். ஆனால், திருவொற்றியூர் நல்லதண்ணீர் ஓடைக்குப்பத்தை சேர்ந்த 500 மீனவர்கள், தங்களுக்கு தொழில் பாதிக்காத வகையில், தங்களது இருப்பிடத்துக்கு அருகாமையிலேயே குடியிருப்புகள் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி, காலி செய்ய மறுத்து, அக்குப்பத்திலேயே குடியிருந்து வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் சுமார் அரை கிமீட்டர் தூரம் வரை முழுமையாக சாலை விரிவாக்க பணிகள் முடிவடையாமல் உள்ளது.

இந்நிலையில், திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் அருகே உள்ள தியாகராஜசாமி திருக்கோயிலுக்கு சொந்தமான 3. 34 ஏக்கர் காலி இடத்தில் நல்ல தண்ணீர் ஓடைக்குப்பத்தை சேர்ந்த 446 மீனவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. இதற்கான தற்காலிக ஒதுக்கீட்டு ஆணையை நேற்று திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் ைவத்து அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் வழங்கினர்.

மேலும், பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு நஷ்டஈட்டு தொகையாக ரூ. 20 ஆயிரமும், குடியிருப்பு கட்டி முடிக்கும்வரை மாத வாடகையாக ரூ. 900 வழங்கப்படும். ஓரிரு மாதங்களில் இப்பணிகள் துவங்கப்பட்டு, 2019-ம் ஆண்டு மீனவர்களுக்கு குடியிருப்புகள் நிரந்தரமாக ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர்கள் தெரிவித்தனர்.



இந்நிலையில், திருவொற்றியூர் குப்பத்தை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள், தங்கள் குடும்பத்துடன் இன்று காலை நல்லதண்ணீர் ஓடைக்குப்பம் மீனவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தியாகராயசாமி கோயிலின் காலி இடத்துக்கு வந்தனர். ‘இந்த இடம் திருவொற்றியூர் குப்பம் மீனவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடம்.

இந்த இடத்தை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டோம்’ என்று கூறி, காலி இடத்தை கையகப்படுத்தினர். அத்துடன் அப்பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.

‘இந்த இடம் எங்களுக்கே வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தால்தான் இங்கிருந்து செல்வோம்’ என வலியுறுத்தி, அங்கு பந்தல் அமைத்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஏராளமான மீனவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

.

மூலக்கதை