தியாகி பரலி சு.நெல்லையப்பர் பள்ளியை மேம்படுத்த ஒதுக்கப்பட்ட... ரூ.1 கோடி எங்கே? 2015- - 2016 பட்ஜெட் அறிவிப்பை செயல்படுத்துவதில் மெத்தனம்

தினமலர்  தினமலர்
தியாகி பரலி சு.நெல்லையப்பர் பள்ளியை மேம்படுத்த ஒதுக்கப்பட்ட... ரூ.1 கோடி எங்கே? 2015  2016 பட்ஜெட் அறிவிப்பை செயல்படுத்துவதில் மெத்தனம்

பல்லாவரம் நகராட்சியில், பல ஆண்டுகளாக பாழடைந்து கிடக்கும், சுதந்திர போராட்ட தியாகி பரலி சு.நெல்லையப்பர் பள்ளியை மேம்படுத்த, 2015- - 16ம் ஆண்டுபட்ஜெட்டில், 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டும், இதுவரை எவ்வித பணிகளும் துவக்கப்படவில்லை. இதனால், அந்த நிதி எங்கே என்ற கேள்வி எழுந்துஉள்ளது.சுதந்திர போராட்ட தியாகி, மகாகவி பாரதியாரின் சீடர், எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர், பரலி சு.நெல்லையப்பர். அவர், குரோம்பேட்டையில் வாழ்ந்த போது, அந்தப் பகுதிக்கு, பாரதிபுரம் என பெயரிட்டார். கடந்த, 1950 முதல், தன் இறுதிக்காலமான, 1971ம் ஆண்டு வரை, குரோம்பேட்டையில் வாழ்ந்த அவருக்கு, 1954ல், தமிழக அரசு, 3.16 ஏக்கர் நிலத்தை வழங்கியது.அதில், 5,000 சதுர அடி நிலத்தை, ஆரம்பப் பள்ளி நடத்த, பரலி சு.நெல்லையப்பர், அரசுக்கு தானமாக வழங்கினார். அரசு, 1968ல், ஆரம்பப்பள்ளி ஒன்றை, அங்கு துவக்கியது. 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்த அப்பள்ளி, பிற்காலத்தில் முடங்கியது.அதன்பின், பல்லாவரம்நகராட்சி நிர்வாகம், அந்த இடத்தை கிடங்காக மாற்ற முயற்சித்தது; எதிர்ப்பு கிளம்பியதால், அது கைவிடப்பட்டது.பல ஆண்டுகளாக பாழடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளியை, 'குடி'மகன்கள், 'குடி'மையமாக பயன்படுத்துகின்றனர். சிலர், அந்நிலத்தை அபகரிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளதாக, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அப்பள்ளி கட்டடத்தை சீரமைத்து மீண்டும் இயக்க வேண்டும் என்று, அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பினர்.இதையடுத்து, 2015 - 16ம் ஆண்டு பட்ஜெட்டில், பரலி சு.நெல்லையப்பர் பள்ளியில்,ஒரு கோடி ரூபாய் செலவில், ஒருங்கிணைந்த பயிற்சிவளாகம் அமைக்கப்படும் எனஅறிவிக்கப்பட்டது.அந்த பட்ஜெட்டில், 'இப்பள்ளியில் சேர்க்கை இல்லை. பரலி சு.நெல்லையப்பர், எந்த நோக்கத்திற்காக, அந்த இடத்தை வழங்கினாரோ, அந்த நோக்கம் நிறைவேறும் வகையில், மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் கல்வி வளாகம், முதியோர் கல்வி வளாகம், வேலைவாய்ப்பற்றோருக்கு திறன் மேம்பட கணினி பயிற்சி மற்றும் தையல் கலை பயிற்சி போன்ற ஒருங்கிணைந்த பயிற்சி வளாகம் கட்டப்படும்' என தெரிவிக்கப்பட்டது.இரண்டு ஆண்டுகளாகியும், அதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை. இது, அப்பகுதி மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஒரு கோடி ரூபாய் நிதி எங்கே என்ற கேள்வி எழுந்துள்ளது.இதுகுறித்து, நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'ஒருங்கிணைந்த பயிற்சி வளாகம் அமைப்பதில், எங்களுக்கு திருப்தி இல்லை. அப்படி செய்தால், மக்களுக்கு பயன் உண்டா அல்லது வேறு எதாவது செய்யலாமா என, யோசித்து கொண்டிருக்கிறோம்' என்றனர்.
ஏன் குரல் கொடுக்கவில்லை?சுதந்திர போராட்ட தியாகி தானமாக கொடுத்து, அவரது பெயரில் இயங்கிய பள்ளியை, பராமரிக்கக் கூட நகராட்சிக்கு நேரமில்லையா. இதற்காக ஒதுக்கப்பட்ட நிதி எங்கே என, மக்கள் பிரதிநிதிகள் ஏன் குரல் கொடுக்கவில்லை. நகராட்சி நிர்வாகம் முடங்கிவிட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.பாரதிபுரம் மக்கள்


ஏன் இவ்வளவு தாமதம்?அதிகாரிகளின் இந்த பதில், பட்ஜெட்டில் அறிவிக்கும் போது தெரியாதது ஏன், அவர்கள் கூறுவது போல் ஒருங்கிணைந்த பயிற்சி வளாகம் அமைப்பதில் திருப்தி இல்லை எனில், மாற்று நடவடிக்கைக்கு, இரண்டு ஆண்டுகள் தேவையா?சமூக ஆர்வலர்பல்லாவரம்

- நமது நிருபர் -

மூலக்கதை