சுற்றுச்சூழல் காப்பதில் இணைந்த இளைஞர் பட்டாளம்... இப்டியல்லோ இருக்கோணும்! குளம் தூர்வாருதல், சீமை கருவேலம் ஒழிப்பில் ஆர்வம்

தினமலர்  தினமலர்
சுற்றுச்சூழல் காப்பதில் இணைந்த இளைஞர் பட்டாளம்... இப்டியல்லோ இருக்கோணும்! குளம் தூர்வாருதல், சீமை கருவேலம் ஒழிப்பில் ஆர்வம்


இயற்கை வளத்தை பேணிக்காப்பதில், இளைஞர்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது. பல்லடத்தில் உள்ள குளத்தை தூர்வாருவதிலும், அவிநாசியிலுள்ள குளங்களில், சீமை கருவேல மரங்களை அடியோடு அகற்றவும், இளைஞர் படை களமிறங்க தயாராகி விட்டது.
திருப்பூர், ஆண்டிபாளையம் குளம், பொதுமக்கள், தன்னார்வலர்களின் பங்களிப்பால், 2015ல் தூர்வாரப்பட்டது. குளத்தின் மையத்தில் பறவைகள் தங்கும் வகையில் இரண்டு திட்டுகள் அமைத்து, சுற்றிலும் அழகூட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வறண்டு போய், முட்செடிகள் மிகுந்திருந்த குளம், தன்னார்வலர்களின் முயற்சியால், பொலிவு பெற்றது. மழைக்காலங்களில் கடல் போல் தண்ணீர் தேங்கி, பசுமையுடன் காட்சியளித்தது.இதை முன்மாதிரியாக கொண்டு, பல்லடம் பகுதியில் குளத்தை தூர்வார, இளைஞர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். பொள்ளாச்சி ரோடு வடுகபாளையத்தில், 12 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள செங்குட்டை, சீமை கருவேல மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. கடந்த, 5ம் தேதி முதல், தன்னார்வலர்கள் பலர் கரம் கோர்த்து, செங்குட்டையை தூர்வாரி வருகின்றனர். இதை தொடர்ந்து, ஆண்டிபாளையம் குளத்தை போல், இதனையும் புதுப்பிக்க திட்டமிட்டுள்ளனர்.அப்பகுதியினர் கூறுகையில், "சீமை கருவேல மரங்கள் அகற்றிய பிறகு, செங்குட்டையை தூர்வார திட்டமிட்டுள்ளோம். தன்னார்வலர்கள் குணசேகரன், ரமேஷ்குமார் தலைமையில், ஏழு பேர் குழு, இதில் ஈடுபட்டுள்ளனர். ஆண்டிபாளையம் குளத்தை போன்று, சுற்றுச்சுவர் அமைத்து, நடைபாதை வசதி செய்து, பூங்கா போல் மாற்ற விரும்புகிறோம்."இதில், இயற்கை ஆர்வலர்கள் தாங்களாகவே முன்வந்து கரம் கோர்த்தால், வரவேற்போம். துறை அதிகாரிகளின் ஆலோசனையின்படி, அடுத்த கட்ட பணிகளை துவக்குவோம்,' என்றனர்.
குளம் காக்க புறப்பட்ட படை!மண்ணுக்கும், மனிதனுக்கும் தீங்கு விளைவிக்கும் சீமை கருவேல மரங்களை அகற்ற, அவிநாசியிலுள்ள சேவை அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து, "குளம் காக்கும் இயக்கம்' துவக்கியுள்ளனர்.ஒரு காலத்தில் அவிநாசி பகுதியை வளம் கொழிக்க வைத்த, தாமரைக்குளம், சங்கமாங்குளம் ஆகியவற்றில் சீமை கருவேலன் மரங்கள் ஆக்கிரமித்துள்ளன. அவற்றுக்கான, நீர் வழித்தடத்தையும் ஆக்கிரமித்துள்ளதால், மழை பெய்தாலும், குளத்திற்கு நீர் வராமல், வறண்டு காணப்படுகிறது.சங்கமாங்குளத்திற்கு நீர் வரத்து ஆதாரமாக, ராமபாளையம் துவங்கி, 4 கி.மீ.,தூரம் சேவூர் ஓடை அமைந்துள்ளது. சீமை கருவேலன் மரங்கள் அகற்றுவதோடு, நீர் வழித்தடம் மற்றும் நீர் நிலைகள் புதுப்பிக்கும் பணிகள் துவங்க உள்ளன. முதல் கட்ட பணிகள் துவக்க விழா, இன்று காலை, 8:00க்கு, தாமரைக்குளம், மயிலம்மன் கோவில் அருகில் விழா நடக்கிறது.குளம் காக்கும் இயக்கத்தில், பொதுமக்கள் இணைந்து, சீமை கருவேலம் அகற்றி, குளத்தில் நீர் நிரப்புவோம் என்ற ஒரே எண்ணத்தில், கரம் கோர்க்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

- நமது நிருபர்கள் குழு -

மூலக்கதை