தேவை நடவடிக்கை:முக்கிய ரோடுகளில் இல்லை வழிகாட்டி போர்டுகள் :தடுமாறும் வெளியூர் வாசிகள், சுற்றுலா பயணிகள்

தினமலர்  தினமலர்

வத்திராயிருப்பு,;பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களிலிருந்து விருதுநகர் மாவட்டத்திற்கு வரும் வெளியூர் வாசிகள், முக்கிய இடங்களுக்கு, கோயில்கள், சுற்றுலா தலங்கள் செல்வதற்கு, ரோடுகளில் வழிகாட்டி போர்டுகள், ஊர்பெயர் பலகைகள் ஏதும் இல்லாமல் இருப்பதால், தட்டுத்தடுமாறி எங்கெங்கோ சுற்றி அலைந்து திரும்புகின்றனர்.
மாவட்டத்தில் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய உள்ளன. ஒவ்வொரு தாலுகாவிலும் இவற்றில் ஏதாவது ஒரு இடம் அனைவரும் பார்க்க வேண்டிய வகையில் உள்ளன. உதாரணமாக சுற்றுலா தலமாக பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகள் உள்ளன. அதேபோல் ராஜபாளையத்தில் அய்யனார் கோவில் அருவி உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்துாரில் புகழ்பெற்ற வைணவ திருத்தலமான ஆண்டாள் கோயில், தமிழக அரசின் முத்திரை சின்னத்தில் இடம்பெற்றுள்ள கோபுரம் உள்ளது. அத்துடன் செண்பகத்தோப்பு பகுதியில் சாம்பல்நிற அணில் சரணாலயம் அமைந்துள்ளது. வத்திராயிருப்பு பகுதியை யொட்டி புகழ்பெற்ற மலைவாச சிவஸ்தலமான சதுரகிரி மலை உள்ளது. மாவட்ட தலைநகரான விருதுநகரில் காமராஜர் நினைவு இல்லம், திருச்சுழியில் ரமண மகரிஷி நினைவு இல்லம், ஆஸ்ரமம் அமைந்துள்ளது. இப்படி வெளியூர்களிலிருந்து வந்து பார்த்துச் செல்லும் வகையில் புகழ்பெற்ற இடங்கள் நிறைய உள்ளன.
நெரிசல் சிக்குகின்றனர்
இவைகளை காண்பதற்காக ஒவ்வொரு நாளும் ஏராளமான வெளியூர்வாசிகள் மாவட்டத்திற்குள் வருகி்ன்றனர். இவ்வாறு வருபவர்கள் தாங்கள் செல்லவேண்டிய ஊர், மற்றும் இடங்களை தெரிந்து கொள்வதற்கு பெரும்பாலான ரோடுகளில் கைகாட்டி போர்டுகளோ, வழிகாட்டி அறிவிப்பு பலகைகளோ ஏதும் இல்லை. இதனால் ஒவ்வொருவரும் வழிப்பாதையில் உள்ள உள்ளூர்வாசிகளிடமும், கடைகளிலும் விசாரித்து கேட்டு அதன்படிதான் செல்லவேண்டியுள்ளது.
தனியார் வாகனங்களில் வருவோர் ஆங்காங்கு வண்டியைநிறுத்தி விசாரிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசல் உள்ள இடங்களி்லும், முக்கிய சந்திப்புகளிலும் எந்த இடத்தில் திரும்பவேண்டும் என்பதை யாரிடமும் கேட்டு தெரிந்து கொள்ளமுடியாத அளவிற்கு போக்குவரத்து நெரிசல் சிக்குகின்றனர். மேலும் திரும்ப வேண்டிய வளைவுகளை விட்டு வேறுஎங்காவது வழிமாறிச் சென்றுவிடுகின்றனர்.
மாயமான ரோடுஇதுபோன்ற குழப்பமான இடங்களில் வாகனங்களை நிறுத்தி யாரிடமும் விசாரிக்க முடியாத நிலை ஏற்படுவதால் பல கி.மீ.., துாரம் சுற்றி அலைந்து சிரமப்பட்டு இறுதியாக தாங்கள் செல்லவேண்டிய இடங்களை அடைகின்றனர். உதாரணமாக வெளிமாவட்டங்களிலிருந்து பிளவக்கல் அணைகளுக்கு சுற்றுலா செல்ல வருபவர்கள் மதுரை, கொல்லம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கிருஷ்ணன்கோவிலில் இருந்து வத்திராயிருப்பிற்கு திரும்பவேண்டும். மூன்று ரோடுகள் சந்திக்கும் அந்த ஊரில் எந்த இடத்தில் திரும்பவேண்டும் என்பதற்கான வழிகாட்டி போர்டுகள் கிடையாது.
அந்த காலத்தில் வைக்கப்பட்ட ஒரு சிறுபோர்டு உள்ளது. இதன் அருகில் கடைக்காரர்கள் ஆக்கிரமித்துக் கொண்டதாலும், கட்சியினர் பிளக்ஸ் போர்டுகள் சுற்றிலும் வைக்கப்படுவதாலும் இது இருப்பதையும் யாராலும் கண்டுபிடிக்க முடியாது. மேலும் பிரதான நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து பல்வேறு ஊர்கள் உள்ளன. இதில் கிருஷ்ணன்கோவில் எது என்பதை தெரிந்து கொள்ள ஊர் பெயர்பலகை கூட அவ்வூரின் எல்லைகளில் தெளிவாக கிடையாது.இவை அனைத்தையும் கடந்து வத்திராயிருப்பு வந்துவிட்டால் அங்கிருந்து மூன்று ரோடுகள் பிரிகின்றன. அதை கடந்து சென்றால் கூமாப்பட்டியிலும், ராமசாமியாபுரத்திலும் என ஒவ்வொரு இடத்திலும் மூன்று ரோடுகள் வீதம் பிரிந்து செல்கின்றன. ஒவ்வொரு இடத்திலும் வாகனங்களை நிறுத்தி அக்கம்பக்கத்தில் விசாரித்துத்தான் செல்லவேண்டும். இதற்காக ஒருநபர் தயார் நிலையில் முன்சீட்டில் அமர்ந்திருக்க வேண்டும். இங்குமட்டுமல்ல, மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் செல்ல பயணிகள் இவ்வளவு சிரமங்கள் அடைவது தெரிந்தும் நெடுஞ்சாலை துறையிலிருந்து ஒரு போர்டு வைப்பதற்குகூட முயற்சி செய்வதில்லை.
புரியாத புதிராக ரோடுகள்
கான்சாபுரத்தை சேர்ந்த கண்ணன்ஜி கூறுகையில், ''எதற்கெல்லாமோ அரசு வீண் செலவு செய்கிறது. ஒரு வழிகாட்டி போர்டு வைப்பதற்கு கூடவா நடவடிக்கை எடுக்க கூடாது. இதற்கு நிதி ஒரு பிரச்னையே அல்ல. அதிகாரிகளிடம்தான் அக்கறை இல்லை. உள்ளூர்வாசிகள், தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக இருந்தாலும்கூட ஒவ்வொரு இடத்திலும் விசாரித்து செல்வதற்குள் போதும், போதும் என்றாகி விடுகிறது. இதில் வெளிமாநிலங்களிலிருந்து மொழி தெரியாமல் வருபவர்களின் நிலை எப்படி இருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஒருமுறை மாவட்டத்திற்குள் நுழைபவர்கள் மீண்டும் மறந்துகூட இங்கு வரமாட்டார்கள். அந்த அளவிற்கு புரியாத புதிராக செல்கிறது மாவட்டத்தில் உள்ள ரோடுகள். எங்கு செல்கிறோம் என்பதே தெரியாமல் பயணிக்க வேண்டியுள்ளது,'' என்றார்.

மூலக்கதை