இளம் வாக்காளர் பெயர் சேர்ப்பில்... மந்தம் ஏன்? - வடக்கு தொகுதியில் மிக குறைந்தது

தினமலர்  தினமலர்
இளம் வாக்காளர் பெயர் சேர்ப்பில்... மந்தம் ஏன்?  வடக்கு தொகுதியில் மிக குறைந்தது

திருப்பூர் : போதிய விழிப்புணர்வு இல்லாததால், மாவட்ட அளவில் அதிக வாக்காளர் உள்ள திருப்பூர் வடக்கு தொகுதியில், இளம் வாக்காளர் பெயர் சேர்ப்பு விண்ணப்பம் குறைந்தளவே பெறப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் கமிஷன், 18 முதல், 21 வயது வரையுள்ள இளம் வாக்காளர்களை பட்டியலில் சேர்க்கும் வகையில், சிறப்பு இயக்கம் நடத்தி வருகிறது. கடந்த, 1ம் தேதி முதல், மாவட்டத்தில் உள்ள, 2,324 ஓட்டுச்சாவடிகளிலும், பெயர் சேர்க்க விண்ணப்பித்து வருகின்றனர். கடந்த, 1ம் தேதி துவங்கிய முகாம், வரும், 31 வரை நடக்கிறது.கடந்த, 9ம் தேதியும், நேற்று முன்தினமும், சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் நடந்த முகாமில், 5,880 பேர், புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். பல்லடத்தில், 1,004 பேர்; உடுமலையில், 855; அவிநாசியில், 813; காங்கயத்தில், 694; திருப்பூர் வடக்கில், 683; திருப்பூர் தெற்கில், 675; தாராபுரத்தில், 589; மடத்துக்குளத்தில், 563 பேர் என, 5,880 பேர், படிவம்-6ஐ பெற்று, பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். கடந்த, 9ம் தேதி நடந்த முகாமில், 5,186 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பித்தனர்.நேற்று மதியம் நிலவரப்படி, மொத்தம், 11 ஆயிரத்து, 838 பேர், படிவம்-6 மூலமாகவும்; 1,951 பேர், "ஆன்-லைன்' மூலமாகவும் விண்ணப்பித்துள்ளனர். தேர்தல் கமிஷன் மக்கள் இயக்கமாக நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதால், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று, கள ஆய்வு நடத்துவர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகளில், நேற்று வரை யாரும் கள ஆய்வு நடத்தவில்லை. இரண்டு முகாம்களில் மட்டும், மக்களிடம் இருந்து படிவங்களை பூர்த்தி செய்து பெற்றுள்ளனர். பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலித்து, கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி, தாலுகா அலுவலகங்களில் நடந்து வருகிறது.ஒவ்வொரு ஆண்டும், திருப்பூர் வடக்கு தொகுதியில் அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் பெயர் சேர்க்க விண்ணப்பம் செய்வது வழக்கம். ஆனால் இம்முறை, போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தாததால், இரண்டு முகாம்களிலும் குறைந்த எண்ணிக்கையிலானவர் மட்டும் விண்ணப்பித்துள்ளனர்.வரும், 31ம் தேதி வரை அவகாசம் இருப்பதால், விடுபட்ட இளம் வாக்காளர்கள் தங்களது பெயரை பதிவு செய்துகொள்ள, இனியாவது உரிய விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை