அழகர்கோவிலில் பழமையான தெப்பக்குளம் புனரமைப்பு: நிரந்தரமாக தண்ணீர் தேக்க நிர்வாகம் ஏற்பாடு

தினமலர்  தினமலர்
அழகர்கோவிலில் பழமையான தெப்பக்குளம் புனரமைப்பு: நிரந்தரமாக தண்ணீர் தேக்க நிர்வாகம் ஏற்பாடு

அழகர்கோவில்:மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் சிதிலமடைந்திருந்த பழமையான தெப்பக்குளம் பல லட்சம் ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்டுள்ளது. அங்கு நிரந்தரமாக தண்ணீர் தேக்க ஏற்பாடுகள் நடக்கிறது.அழகர்கோவில் கள்ளழகர் கோவில் பழமையும், புராதான சிறப்பும் மிக்கது. கள்ளழகர் கோயில் கருப்பண சுவாமி கோயில் முன்பு பழமையான தெப்பக்குளம், கோட்டைச்சுவர் சிதிலமடைந்திருந்தது. அதை புனரமைக்க 2015ல் கோயில் நிர்வாகம் சார்பில் திட்டம் வகுக்கப்பட்டது. தக்கார் வி.ஆர்.வெங்கடாஜலம் முயற்சியில் முதற்கட்டமாக கோயிலின் பழமையான கோட்டைச்சுவர் பல லட்சம் ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்டது. கோயில் வளாகம் முழுவதும் மரங்கள் நட்டு பராமரிக்கவும், சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள தனியார் மூலம் நடவடிக்கை எடுத்தனர்.
அடுத்ததாக சிதிலமடைந்த தெப்பக்குளம் சீரமைப்பு பணி பல லட்சம் ரூபாய் மதிப்பில் கடந்த 2016 ல் துவங்கி பணிகள் நிறைவடைந்துள்ளன.
தண்ணீர் தேக்க முடிவு
அழகர்கோவில் மலையில் வற்றாத சுனை ஊற்றான நுாபுர கங்கை தீர்த்தம் மற்றும் மழைக்காலங்களில் மலைகளில் ஏற்படும் சிற்றோடைகளின் தண்ணீரை வீணாக்காமல் நேரடியாக தெப்பக்குளத்திற்கு திருப்பி விட்டு நிரந்தரமாக தண்ணீர் தேக்கும் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. இப்பணிகள் செயல் அலுவலர் மாரிமுத்து மேற்பார்வையில் விரைவில் துவங்கவுள்ளது. தெப்பக்குளத்தின் உபரி நீரை சுத்திகரித்து குடிநீருக்கு பயன்படுத்தவும், சோலைமலை மண்டபம் முருகன் கோயில், நுாபுர கங்கை தீர்த்தம், மலை பாதைகளில் குரங்குகள், வன விலங்குகள் பயன்பெறும் வகையில் சிறிய நீர் தொட்டிகள் வைத்து தண்ணீர் வழங்கவும் ஏற்பாடுகள் நடக்கிறது. அடுத்ததாக பொய்கைக்கரைப்பட்டி தெப்பக்குளம் சீரமைக்கும் ஏற்பாடுகள் நடக்கிறது.

மூலக்கதை