கமிஷனுக்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சை தாமதம்:'ஸ்கேன்' எடுக்க அலைக்கழிக்கப்படும் நோயாளிகள்

தினமலர்  தினமலர்

மதுரை:மதுரையில், தனியார் ஸ்கேன் சென்டரில் கமிஷன் பெற, அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை ஊழியர்கள் அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது.சி.டி., மற்றும் எம்.ஆர்.ஐ.,ஸ்கேன் சென்டர்களில், உடல், வயிறு, தலைக்குள் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து அறிய, மதுரை அரசு மருத்துவமனைக்கு தினமும் 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் வருகின்றனர். இங்கு, நோயின் தன்மைக்கேற்ப 500, 2,500 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர். பிற தனியார் ஸ்கேன் சென்டர்களோடு ஒப்பிடுகையில், இங்கு கட்டணம் குறைவு. ஆண், பெண்களுக்கென 3 சி.டி., ஸ்கேன், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் செயல்படுகிறது. ஊழியர் பற்றாக்குறையால், நோயாளிகள் ஸ்கேன் எடுக்க பல மணிநேரம் காத்திருக்கின்றனர். இதனால் தொடர் சிகிச்சை பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது.
ஒரு நோயாளிக்கு ஸ்கேன் மற்றும் முடிவு அறிவிக்க ஒரு மணி நேரம் மட்டுமே ஆகும். ஆனால், மருத்துவமனை ஊழியர்கள் வேண்டுமென்றே காலதாமதம் செய்கின்றனர். இதனால், பிற மாவட்டங்களில் இருந்து அதிகாலையிலேயே மருத்துவமனை வந்து, இரவு வரை காத்துக் கிடக்கின்றனர். ஊழியர்கள் தனியார் ஸ்கேன் சென்டருக்கு அனுப்பும் நோக்கில், காலதாமதம் செய்வதாக, புகார் எழுந்துள்ளது.
புரோக்கர் நடமாட்டம்
அரசு மருத்துவமனை ஊழியர்களின் ஆதரவோடு, வளாகத்திற்குள் திரியும் புரோக்கர்கள் நோயாளியை வலுக்கட்டாயமாக தனியார் ஸ்கேன் சென்டருக்கு அழைத்து செல்கின்றனர். இதனால், மருத்துவமனை ஊழியர்களுக்கு புரோக்கர் மூலம் கமிஷன் வழங்கப்படுகிறது. இக்கமிஷனை பெறவே அரசு மருத்துவமனை ஸ்கேன் சென்டரில், காலதாமதம் செய்கின்றனர்.திண்டுக்கல் கன்னிவாடி மருதுராஜ்: என் மனைவி தலைக்குள் உள்ள பாதிப்பு அறிய ஸ்கேன் எடுக்க, அதிகாலையிலேயே வந்தேன். மாலை 3:00 மணிவரை ஸ்கேன் எடுக்கவில்லை. முடிவும் காலதாமதமாக தருகின்றனர். காலதாமதமாகும் எனக்கூறி தனியார் ஸ்கேன் சென்டர் புரோக்கர்கள், என்னை கட்டாயப்படுத்தினர். இந்த நுாதன மோசடியில் ஈடுபடும் ஊழியர், புரோக்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,என்றார்.
டீன் (பொறுப்பு) மருது பாண்டியன்: ஊழியர் பற்றாக்குறையால், காலதாமதம் ஆகலாம். நோயாளிகள் வசதிக்கு 24 மணி நேரம் ஸ்கேன் எடுக்கப்படும். புரோக்கர்களை நம்பி ஏமாறவேண்டாம், என்றார்.-

மூலக்கதை