கொடுங்கையூர் பேக்கரி தீ விபத்தில் மேலும் 2 பேர் பரிதாப சாவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொடுங்கையூர் பேக்கரி தீ விபத்தில் மேலும் 2 பேர் பரிதாப சாவு

தண்டையார்பேட்டை : கொடுங்கையூர் பேக்கரியில் நடந்த சிலிண்டர் விபத்தில் தீயணைப்பு படை வீரர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் மேலும் 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

சென்னை கொடுங்கையூர் மீனாம்பாள் பிரதான சாலையில் நித்யானந்தம் (52) என்பவருக்கு சொந்தமான 2 அடுக்கு மாடி கட்டிடம் உள்ளது. தரை தளத்தில் 3 வங்கிகளின் ஏடிஎம் மையம், பேன்சி கடை உள்பட 7 கடைகள் உள்ளது.

இந்த கட்டிடத்தில் ஒரு மாதத்துக்கு முன், கொடுங்கையூர் எம். ஆர். நகரை ேசர்ந்த ஆனந்தன் (35), ஹாட்சிப்ஸ் என்ற பெயரில் பேக்கரி கடை திறந்தார். கடந்த 15ம் தேதி இரவு 11 மணியளவில் பேக்கரியில் சிலிண்டர் வெடித்து 47 பேர் காயம் அடைந்தனர்.

ஷட்டரை உடைத்து தீயை அணைக்க முயன்ற தீயணைப்பு படை வீரர் ஏகராஜ் உடல் கருகி பலியானார். இந்த தீ விபத்தில் 3 ஏடிஎம் மையம் உள்பட 5 கடைகள் எரிந்து நாசமானது.

கட்டிடத்தின் எதிரே நிறுத்தப்பட்டிருந்த 5க்கும் மேற்பட்ட பைக்குகளும் சேதமானது. தீ விபத்தை வேடிக்கை பார்த்தவர்கள் என 47 பேர் படுகாயம் அடைந்தனர்.

இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொடுங்கையூர் விவேகானந்தா நகர் அப்பர் தெருவை சேர்ந்த பரந்தாமன் (65) நேற்றிரவு பரிதாபமாக இறந்தார். இவர், தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றினார்.

தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வரும், கொடுங்கையூர் கண்ணதாசன் நகரை சேர்ந்த அபிமன்யு (40) என்பவரும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இதையடுத்து பேக்கரி விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே தீ விபத்து தொடர்பாக கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாநகராட்சியின் அனுமதிபெற்று இந்த கட்டிடம் கட்டப்படவில்லை என்று தெரிகிறது.

கட்டிடத்தின் உரிமையாளர் கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர் வள்ளுவர் நகரை சேர்ந்த காந்தி. இவரது அண்ணன் நித்தியானந்தம்.

இவர்தான் கடைகளை பராமரிப்பது, வாடகை பணம் வசூலிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளார். தற்போது தலைமறைவாக உள்ள அண்ணன், தம்பியை போலீசார் தேடி வருகின்றனர்.

இவர்கள் மீதும் பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

.

மூலக்கதை