அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை : வெப்பசலனம், தென்மேற்கு பருவமழையின் தாக்கத்தால் தமிழகம் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் வெயில் வாட்டி வருகிறது.

அதே போல் வெப்பசலனம், தென்மேற்கு பருவமழையின் தாக்கத்தால் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் நேற்று மாலை 5 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

அதே போல் வால்பாறையில் 27. 2 மி. மீ, ஊட்டியில் 5 மி. மீ மழை பதிவாகியுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளது.

அதனால் ஒடிசா மற்றும் கடலோர ஆந்திர பகுதிகளில் கனமழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 5. 30 மணி நிலவரப்படி பூரியில் இருந்து 70 கி. மீ தொலைவிலும், புவனேஷ்வரில் இருந்து தென்மேற்கில் 50 கி. மீ தொலைவிலும் நிலப்பகுதியில் இந்த  காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளது.

இது படிப்படியாக வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, வலுவிழக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பில் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை நகரம், சுற்றுவட்டார பகுதிகளை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 96 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகும்.


.

மூலக்கதை