பிஎப் சந்தாதாரர்களுக்கு ஹட்கோ மூலம் வீட்டுக்கடன் ரூ.2.67 லட்சம் மானியம் பெறலாம்: புது ஒப்பந்தம் கையெழுத்து

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: பிஎப் சந்தாதாரர்கள் ஹட்கோ மூலம் வீட்டுக்கடனுக்கான வட்டி மானியம் பெற ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பிஎப் பிடித்தம்  செய்யப்படும் தொழிலாளர்களின் வீட்டுக்கனவை நனவாக்கும் வகையில், பிஎப் விதிகளில் கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசு திருத்தம் செய்தது. பிஎப்  சந்தாதாரர்கள் ரூ.2.67 லட்சம் வட்டி மானியம் பெற, வீட்டு வசதி மற்றும் ஊரக மேம்பாட்டு கழகத்துடன் (ஹட்கோ) பிஎப் நிறுவனம் நேற்று ஒப்பந்தம்  செய்துள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், மத்திய பிஎப் ஆணையர் வி.பி.ஜாய் மற்றும் ஹட்கோ முதன்மை நிர்வாக இயக்குநர் ரவி காந்த்  ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தப்படி, பிஎப் நிறுவனத்தின் வீட்டு வசதி திட்டம் மற்றும் பிரதமர் ஆவாஸ் திட்ட பலன்களை இணைத்து பிஎப் சந்தாதாரர்கள் பெற முடியும்.  பிரதமர் ஆவாஸ் திட்டத்தில் முதல் முறை வீடு வாங்குவோருக்கு வட்டி மானியம் வழங்கப்படுகிறது. சொந்த வீடு இல்லாத அனைவருக்கும் 2022ம்  ஆண்டுக்கு வீடு கிடைக்கச்செய்வதை மத்திய அரசு இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதையொட்டி பல்வேறு திட்டங்களை அறிவித்து  வருகிறது. இதன் தொடர்ச்சியாக பிஎப் சந்தாதாரர்கள் பலன் பெறும் வகையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூலக்கதை