பாஜ ஜனாதிபதி வேட்பாளரை சந்திக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை டெல்லி பயணம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாஜ ஜனாதிபதி வேட்பாளரை சந்திக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை டெல்லி பயணம்

சென்னை: பாஜ ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை டெல்லி செல்கிறார். பாஜ ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் மோடி, பாஜ தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் தொலைபேசி மூலம் பல்வேறு கட்சியினரிடம் ஆதரவு திரட்டி வருகின்றனர்.   இந்த நிலையில், பிரதமர் மோடி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

இதை தொடர்ந்து பாஜ வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். சுமார் 45 நிமிடம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஜனாதிபதி தேர்தலில் பாஜ வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தார்.

இதை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சர்கள், கட்சியின் நிர்வாகிகள் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக, இன்று மாலை 5 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

அவருடன் கட்சி நிர்வாகிகளும் செல்கின்றனர். அங்கு அவர், பாஜ ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்கிறார்.

அதன்பிறகு இன்று இரவே முதல்வர் சென்னை திரும்புகிறார்.


.

மூலக்கதை