கோவையில் கைது செய்யப்பட்ட நீதிபதி கர்ணன் ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட் மீண்டும் தள்ளுபடி: சென்னை ஏர்போர்ட்டில் விடிய விடிய வைத்திருந்ததால் பரபரப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கோவையில் கைது செய்யப்பட்ட நீதிபதி கர்ணன் ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட் மீண்டும் தள்ளுபடி: சென்னை ஏர்போர்ட்டில் விடிய விடிய வைத்திருந்ததால் பரபரப்பு

சென்னை: கோவையில் கைது செய்யப்பட்ட நீதிபதி கர்ணனை விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. முன்னதாக அவர் விடிய விடிய சென்னை விமானநிலையத்தில் வைக்கப்பட்டார்.

இதனால் விமானநிலையத்தில் பரபரப்பு எற்பட்டது. கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதியாக இருந்தவர் கர்ணன்(62).

இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.   அப்போது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் கிஷன்கவுல் உள்பட பல நீதிபதிகள் ஊழல் செய்வதாக கடந்த 2015ல் பிரதமருக்கு கடிதம் எழுதினார். இவரது செயல்பாடு நீதிமன்றத்தை அவமதிப்பதாக உச்ச நீதிமன்றம் கருதியது.

இதனால் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிபதி கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தியது. பின்னர் நீதிபதி கர்ணன் கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு அதிரடியாக மாற்றப்பட்டார்.

அங்கும் தொடர்ந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக உத்தரவுகளை பிறப்பித்து வந்தார். இதனால், கர்ணன் மீது உச்சநீதிமன்றம் தானாக முன் வந்து அவதூறு வழக்கு எடுத்துக் கொண்டது.

இந்த அவதூறு வழக்கு விசாரணையின் போது நீதிபதி கர்ணனுக்கு மனநல பரிசோதனை நடத்த உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது. ஆனால் நீதிபதி கர்ணன் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் மனநல பரிசோதனைக்கு உத்தரவிட்டு புதிய சர்ச்சையை கிளப்பினார்.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த உச்ச நீதிமன்றம், நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

அதன்படி நீதிபதி கர்ணனை கைது ெசய்ய கொல்கத்தா போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதற்கிடையே நீதிபதி கர்ணன் தலைமறைவாகிவிட்டார்.   தலைமறைவாக இருந்து கொண்டே தம் மீதான சிறை தண்டனையை ரத்து ெசய்ய கோரி 4 முறை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தார்.

ஆனால் உச்ச நீதிமன்றம் அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது.

இதற்கிடையே கடந்த மாதமே நீதிபதி கர்ணனை கைது ெசய்ய கொல்கத்தா போலீசார் சென்னை வந்து நீதிபதி கர்ணனை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். ஆனால் நீதிபதி கர்ணன் இருக்கும் இடத்தை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனால் தமிழக போலீசார் உதவியுடன் நீதிபதி கர்ணனை தேடி வந்தனர். இந்நிலையில் நீதிபதி கர்ணன் கடந்த வாரம் ஓய்வுபெற்றார்.

ஆனாலும் அவரை கைது ெசய்ய கொல்கத்தா போலீசார் தீவிரம்காட்டினர். தமிழகம் முழுவதும் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு கோவை ஈச்சனாரி அருகே உள்ள மாச்சேகவுண்டன்பாளையம் பகுதியில் தமிழக போலீசார் உதவியுடன் கொல்கத்தா போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் நீதிபதி கர்ணனை கோவையில் இருந்து சென்னைக்கு கொல்கத்தா போலீசார் இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் நள்ளிரவு 12. 15 மணிக்கு சென்னைக்கு அழைத்து வந்தனர்.


இன்று அதிகாலை 5. 15 மணிக்கு சென்னையில் இருந்து கொல்கத்தா செல்ல இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்திலேயே அழைத்து செல்ல முடிவு செய்து இருந்தனர். இதனால் விமான நிலையத்தில் இருந்து நீதிபதி கர்ணனை இரண்டாவது தளத்தில் உள்ள உள்நாட்டு புறப்பாடு நிலையத்திறக்கு அழைத்து சென்று அங்கு முக்கிய பிரமுகர்கள் தங்கும் அறையில் தங்க வைத்தனர்.

இதற்கிடையே கொல்கத்தா உயர் போலீஸ் அதிகாரிகள். சென்னையில் உள்ள கொல்கத்தா போலீசாருடன் தொடர்பு கொண்டு அவரை சென்னை விமான நிலையம் அருகில் உள்ள ஒரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அதன் பிறகு கொல்கத்தா அழைத்து வரும்படி உத்தரவிட்டனர்.

இதையடுத்து கொல்கத்தா போலீசார் அதிகாலை 5. 15 மணிக்கு கொல்காத்தாவுக்கு அழைத்து செல்ல இருந்த முன்பதிவை ரத்து செய்தனர்.

பிறகு இன்று பகல் 11. 40 மணிக்கு கொல்கத்தா அழைத்து செல்ல ஏர் இந்தியா விமானத்தில் முன்பதிவு செய்தனர்.

ஆனாலும் நீதிபதி கர்ணனை ஓய்வு அறையில் தங்க வைக்காமல் தொடர்ந்து முக்கிய பிரமுகர்கள் தங்க வைக்கும் அறையிலேேய உட்காரவைத்தனர். இதனால் கொல்காத்தா போலீசாரிடம் நீதிபதி கர்ணன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

என்னை எவ்வளவு நேரம் தான் தொடர்ந்து உட்கார வைப்பீர்கள் என்று கூறி நான் படுத்து ஓய்வு எடுக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று கடும் வாக்குவாதம் செய்தார். இதையடுத்து கொல்கத்தா போலீசார் சென்னை விமான நிலைய போலீசாரிடம்  நீதிபதி கர்ணனை தங்க வைக்க முயற்சி ெசய்தனர்.

அனால் விமான நிலையத்தில் இருந்து வெளியில் அழைத்து ெசல்ல கூடாது என்று உத்தரவிட்டுள்ளதால் அதிகாலை 2. 45 மணிக்கு முக்கிய பிரமுகர்கள் தங்கும் லிங்க் கட்டிடத்தில் தங்க வைத்தனர். இதற்கிடையே கொல்கத்தா போலீசார் மீண்டும் சென்னையில் உள்ள கொல்கத்தா போலீசாரை தொடர்பு கொண்டு அவரை இரவு 7,30 மணி அளவில்தான் கைது செய்யப்பட்டுள்ளார்.

எனவே நீதிமன்றத்தில் 24 மணி நேரத்தில் ஆஜர்படுத்த வேண்டும். நேரம் இருப்பதால் நீதிபதி கர்ணனை கொல்கத்தாவிற்கு அழைத்து வந்து இங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ெகாள்ளலாம் என்று கூறிவிட்டனர்.

இதனால் கர்ணனை சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதை கைவிட்டனர்.
பின்னர் இன்று காலை நீதிபதி கர்ணனை அவர் தங்க வைத்த லிங்க் கட்டிடத்தில் இருந்து காலை 10. 30 மணி அளவில் உள்நாட்டு முனையத்திற்கு விமான நிலைய போலீசாருக்கே தெரியாமல் காலை கர்ணனை மிகவும் ரகசியமாக அழைத்து வந்து பேட்டரி காரில் ஏற்றி உள்நாட்டு புறப்பாடு இடத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் காலை 11. 40 விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டார்.

இதற்கிடையில் கர்ணன் சார்பாக இன்று காலை  சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் ஒரு மேல் முறையீடு மனு தாக்கல்  செய்யப்பட்டது.

அதில், என் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அடிப்படை  விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை. எனது தரப்பு நியாயம் கேட்கப்படவில்லை.   எனக்கு விதிக்கப்பட்ட தண்டனை நீதிக்கு புறம்பானது.

எனக்க உடனடியாக ஜாமீன் வழங்க வேண்டும். தண்டனையை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில்  கூறப்பட்டுள்ளது. கர்ணன் சார்பாக வக்கீல் நெடும்பாரா மனுவை தாக்கல்  செய்தார்.

இந்த மனுவை கோடைக்கால சிறப்பு நீதிபதி சந்தரசூட் இன்று  விசாரித்தார். கர்ணன் இதற்கு முன்பு தாக்கல் செய்த மனுக்கள் மீது 7  நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது.

எனவே தற்போது  இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது. ஜூலை 2ம் தேதி கோடை  விடுமுறைக்கு பின்னர் சுப்ரீம் கோர்ட் திறக்கப்படும்.

அப்போது 7 நீதிபதிகள்  பெஞ்ச்சில் புதிய மனுவை தாக்கல் செய்து கொள்ளுங்கள். அவர்கள் இதனை  விசாரிப்பார்கள்.

இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.

.

மூலக்கதை