சக்களத்தி சண்டையில் சிக்கியவருக்கு போலீஸ் வழங்கிய பலே தீர்ப்பு.. நம்ம முருகேசன் தீர்ப்பே தேவல போல!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சக்களத்தி சண்டையில் சிக்கியவருக்கு போலீஸ் வழங்கிய பலே தீர்ப்பு.. நம்ம முருகேசன் தீர்ப்பே தேவல போல!

பாட்னா: பீகாரில் இரு மனைவிகளிடம் சிக்கி தவித்தவருக்கு அந்த மாநில போலீஸார் வினோதமான தீர்ப்பு வழங்கினர்.

பாட்னாவை சேர்ந்தவர் அருண்குமார். இவர் அங்கு நர்ஸிங் ஹோமை நடத்தி வருகிறார். இவருக்கு மீனா என்பவருடன் கடந்த 1996-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு வளர்ந்த குழந்தைகள் உள்ளனராம்.

அருண் தன்னுடைய கணவர் என்று பூஜா என்பவர் சொந்தம் கொண்டாடினார். இவர் தன்னுடன் தான் வாழ வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இது மீனாவின் மனதில் புயலை வீச தொடங்கியது.

அருண் மீது மீனாவும், பூஜாவும் உரிமை கொண்டாடி புல்வாரிஷெரீப் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து அருண்குமாரை போலீஸார் காவல் நிலையத்துக்கு நேற்று காலை 10 மணிக்கு வரவழைத்தனர்.

அருணின் முதல் மனைவியான மீனா, தனக்கும், அருணுக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி வயது வந்த பிள்ளைகள் உள்ளனர் என்று தன் தரப்பு ஆதாரத்தை காட்டினார். அதேபோல் பூஜாவும் அருணுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், வீடியோக்கள், ஆடியோக்களை ஆதாரமாக சமர்ப்பித்தார்.

இருவரும் மாறி மாறி ஆதாரங்களை காண்பித்ததால் போலீஸார் மண்டையை பிய்த்து கொண்டனர். பின்னர் உண்மையை சொல்லாவிட்டால் முதல் மனைவி இருக்கும் போதே இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக புகார் அளிப்பேன் என்று மீனா, அருணை அச்சுறுத்தினார். இதைத் தொடர்ந்து இறுதியாக அருண் இரு பெண்களையும் திருமணம் செய்து கொண்டதாக ஒப்புக் கொண்டார்.

இதுபோல் இரு மனைவிகள் சண்டை என்றாலே அதுவும் காவல்நிலையம் வரை சென்ற சண்டைகளில் குற்றம்சாட்டப்பட்டவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்வதுதான் போலீஸார் எடுக்கும் முடிவாக இருக்கும். ஆனால் இந்த வழக்கில் அருண் முதல் மனைவி மீனாவுடன் வாரத்தில் 3 நாள்களும், இரண்டாவது மனைவி பூஜாவுடன் 3 நாள்களும், மீதமுள்ள ஒரு நாள் தனித்தும் வாழ வேண்டும் என்பது வினோதமான தீர்ப்பை வழங்கினர். இந்த தீர்ப்பை மூன்று பேரும் ஏற்றுக் கொண்டனர்.

போலீஸாருக்கு தலைவலியை ஏற்படுத்திய இந்த விவகாரம் இரவு 9 மணிக்குதான், அதாவது 11 மணி நேரம் கழித்துதான் முடிவுக்கு வந்தது. இந்த தீர்ப்பை பார்க்கும்போது "என் புருஷன் குழந்தை மாதிரி" படத்தில் முருகேசன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் லிவிங்கஸ்டன் அளிக்கும் தீர்ப்பே தேவலாம் என்பதை போல் உள்ளது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மூலக்கதை