விவசாய நிலங்களாக மாறும் குண்டாறு:ஆக்கிரமிப்பை கண்டு கொள்ளாததால் மழைநீரை தேக்குவதில் சிக்கல்

தினமலர்  தினமலர்

கமுதி;கமுதியில் ஆக்கிரமிப்பால் அழிந்து வரும் குண்டாற்றினை விவசாய நிலங்களாக உருமாற்றபடுவதால், மழை காலங்களில் தண்ணீரை சேசமிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயம், தொழில்துறையில் மிகவும் பின்தங்கிய தாலுகாக்களாக முதுகுளத்துார், கமுதி, கடலாடி ஆகிய 3 தாலுகாக்கள் உள்ளது. 3 தாலுகாக்களிலுள்ள 12 ஆயிரம் எக்டேர் விவசாய நிலங்களும் குண்டாறு இதிலிருந்து பிரிந்து செல்லும் மலட்டாற்றினை நம்பியே உள்ளது.
குண்டாறு மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து உருவாகி, விருதுநகர், சாப்டூர் வழியாக மதுரை மாவட்டம் திருமங்கலம், திருச்சுழி, மண்டலமாணிக்கம், புதுக்குளம், வளையபட்டி, மறக்குளம், சின்னஉடப்பங்குளம் வழியாக கமுதியை வந்தடைகிறது. முதுகுளத்துார், கமுதி, கடலாடி பகுதிகளிலுள்ள 600 க்கும் மேற்பட்ட கண்மாய்களில் குண்டாறு தண்ணீர் பாய்ந்து, விவசசாயம் செய்யபடுகிறது. 8 ஆண்டுகளுக்கும் மேலாக பருவமழை பொய்ப்பால் குண்டாற்றில் நீர்வரத்து இல்லை.
வரலாறு: குண்டாறு துவக்கத்தில் மதுரை வைகை ஆற்றினைபோல் 120மீ., 150 மீ., வரை அகலம் கொண்டதாகவும், 40 கிமீ., துாரம் வரை பாசன வசதி கொண்டதாகவும் இருந்துள்ளது. குண்டாற்றின் நீர்பிடிப்பு பகுதி கமுதியில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் தங்கியிருந்த கோட்டைமேடு வரை அகன்றிருந்தது. குண்டாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால், கோட்டைமேடு சேசதமடைந்து, ஒரு பகுதி அழிந்துவிட்டது.
ஆக்கிரமிப்பு: 150 மீ., அகலம் கொண்ட குண்டாறு தற்போது, மண்டலமாணிக்கம் வரை 40 மீ., மட்டும் அகலம் கொண்டு, மீதமுள்ள கமுதி குண்டாறு அணைக்கட்டு வரை வரத்துகால்வாய் போல் சுருங்கிவிட்டது. அதிகாரிகளின் ஒத்துழைப்பால், குண்டாறு நீர்ப்பிடி பகுதிகளை தனியார் பலர் பட்டா நிலங்களாக உருமாற்றிவிட்டனர். இதனால் கமுதி குண்டாறு நிலப்பரப்பு 50 சதவீதம் ஆக்கிரமிப்பால் விளை நிலங்களாக மாற்றபட்டுள்ளது. குண்டாறு 30 ஆண்டுகளாக மராமத்து செய்யபடாததால், விளைநிலம் போல் மேடாகி, சிறிதளவு மழைநீர் வந்தாலும், தேக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
முறையாக மராமத்து செய்யபடாத குண்டாற்றில் 1996 ல், ஏற்பட்ட வெள்ளபெருக்கில் வீடுகள், கல்வி நிலையங்கள் சேதமடைந்து, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்தனர். குற்ற செயல்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றும் கமுதி போலீசார் 5 ஏக்கருக்கும் மேல், குண்டாற்றினை ஆக்கிரமிப்பு செய்து, பலன் தரும் மரக்கன்றுகளை நட்டு, ஆக்கிரமித்துள்ளனர். 2015 டிசம்பரில், சென்னையில் ஏற்பட்ட வெள்ளபெருக்கிற்கு காரணம் நீர்நிலைகளை ஆக்கிரமித்ததால்தான் என, உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததுடன், நீர்பிடிப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
குண்டாறு ஆக்கிரமிப்பில் அழிந்து வருவதற்கு பொதுப்பணித்துறையினரின் அலட்சியம், மராமத்து செய்யாததே காரணம், கனமழை காலங்களில் குண்டாற்றில் மழைநீர் தேக்க முடியாமல், வெள்ள பெருக்கு ஏற்படும் முன், ஆக்கிரமிப்புகளை அகற்றி, விபத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மூலக்கதை