தமிழக- கேரளா எல்லையில் சிறுத்தை அட்டகாசம்... நாய்களை அடித்து கொல்வதால் மக்கள் பீதி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தமிழக கேரளா எல்லையில் சிறுத்தை அட்டகாசம்... நாய்களை அடித்து கொல்வதால் மக்கள் பீதி

செங்கோட்டை : தமிழகம், கேரளா எல்லையில் உணவு தேடி காட்டைவிட்டு வெளியே வரும் சிறுத்தைகள், ஊருக்குள் உள்ள நாயை அடித்துக் கொல்வதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

தமிழக கேரள எல்லையான நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியான செங்கோட்டை அருகிலுள்ள மேக்கரை,வடகரை உள்ளிட்ட மலையடிவார பகுதிகளில் கடந்த சில மாத காலமாக வன விலங்குகள் அதிகமாக வனப்பகுதிகளில் இருந்து இறங்கி உணவு தேடி வருகின்றன.

அப்பகுதியையொட்டி உள்ள தனியார் தோட்டங்களில் யானைகள் புகுந்து தோட்டங்களை சேதப்படுத்தி வருவது வாடிக்கையாகிவிட்ட நிலையில் மேக்கரை 5 வது வளைவு பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஆங்காங்கே வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மேக்கரை 5-வது வளைவு பகுதியில் இரவு 11 மணி அளவில் சிறுத்தை புலி இந்த பகுதியில் வசிக்கும் சுரேஷ்குமார் என்பவர் வீட்டு முன்பு காவலுக்கு வளர்த்த இரண்டு நாய்களில் ஒன்றை கொன்று தின்று விட்டது மற்றொரு நாயை பாதி கடித்து தின்ற நிலையில் போட்டு சென்றது.

இது குறித்து இந்த பகுதி பொது மக்கள் வணத் துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த கடையநல்லூர் வனத் துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டு நாயை அடித்து கொன்றது சிறுத்தை தானா என ஆய்வு நடத்தி வருகின்றனர்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் வசிக்கும் முருகன் என்பவரது வீட்டில் வளர்த்த 3 ஆடுகள் மற்றும் ஒரு காவல்நாயை சிறுத்தை புலி கொன்று தூக்கி சென்றுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பண்பொழி கிராமம் கீழ ஊர்ச்சாவடி தெருவை சார்ந்த விவசாயி சுப்பையா(60) என்பவரை கடித்து கொன்றது.

இதனால் இந்த பகுதி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் அச்சத்தில் உள்ளனர்.மேற்கு தொடர்ச்சி மலையின் வனப்பகுதிகளில் இருந்து அவ்வபோது இரைதேடி மலையடிவார கிராமங்களுக்குள் வரும் வன விலங்குகள் விவசாய நிலங்களுக்குள் பயிர் செய்யப்பட்டுள்ள விவசாய பயிர்களை நாசம் செய்வதுடன் மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு மாடுகளையும், காவல் நாய்களையும் அவ்வப்போது இரையாக்கி விடுகின்றன.

இவ்வாறு விவசாயிகளையும் ,பொதுமக்களையும் சுமார் 30 கிலோமீட்டர் சுற்றளவில் மலையடிவார கிராம மக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை பிடிக்க வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கடந்த 1 ஆண்டாக 10 இடங்களில் கூண்டுகளை மாற்றி மாற்றி வைக்கப்பட் டு இந்தப்பகுதியில் சுற்றி வரும் சிறுத்தையை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

மேலும் சிறுத்தையின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வீட்டை விட்டு இரவில் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். விரைந்து நடவடிக்கை எடுத்து மலையடிவார மக்களின் உயிர்களையும் உடமைகளையும் பாதுகாக்க வேண்டும் என்பது இந்தப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மூலக்கதை