ஓபிஎஸ் அணியில் அதிருப்தி வெடிக்கிறது பன்னீர்செல்வம் - நத்தம் விஸ்வநாதன் இடையே பனிப்போர்: விரைவில் வெளியேற திட்டம்?

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஓபிஎஸ் அணியில் அதிருப்தி வெடிக்கிறது பன்னீர்செல்வம்  நத்தம் விஸ்வநாதன் இடையே பனிப்போர்: விரைவில் வெளியேற திட்டம்?

சென்னை: பன்னீர்செல்வம் அணியில் அதிருப்தியில் இருக்கும் நத்தம் விஸ்வநாதன், விரைவில் வெளியேற திட்டமிட்டு, தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இது ஓபிஎஸ் அணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையொட்டி அதிமுக பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு அணியும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும் பிரிந்து செயல்படுகிறது.   பன்னீர்செல்வம் அணிக்கு 12 எம். எல். ஏக்கள், 12  எம். பி. க்கள் ஆதரவு தெரிவித்து சசிகலாவிடமிருந்து பிரிந்து  வந்தனர்.

இதற்கிடையில் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை  பெற்று  சசிகலா 4 ஆண்டுகள் சிறைக்கு சென்றார்.
 இந்த நிலையில் ஆர். கே. நகரில் இடைத்தேர்தல் அறிவிப்பு வந்ததும் பன்னீர்செல்வம் அணியின் சார்பில் மது சூதனனை வேட்பாளராக அறிவித்து தேர்தல் வேலை செய்து வந்தார்.   அதிமுக டி. டி. வி. தினகரனின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.

அதிமுகவின் கட்சி சின்னமான இரட்டை இலை யாருக்கு என்கிற சர்ச்சை பன்னீர்செல்வம் அணியினருக்கும் தினகரன் அணியினருக்கும் இருந்ததால் இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கியது.

 ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய தினகரன்  இரட்டை இலையை மீட்க தேர்தல் அதிகாரிக்கு 50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லிப் போலீசார் வழக்குப் பதிவு செய்து டெல்லி திகார் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டுகள் நடத்தினர்.

இந்த ரெய்டுப் பின்னணியில் பன்னீர் செல்வம் இருப்பதாக தினகரன் தரப்பினர் புகார் கூறினர். இந்த நிலையில் பன்னீர்செல்வம் மக்களை தேடி செல்கிறேன் என ஒவ்வொரு ஊரிலும் கூட்டம் நடத்தினார்.

முதல் கூட்டத்தினை காஞ்சிபுரத்தில் ஆரம்பித்தவர் அடுத்து சேலம், திண்டுக்கல் என பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டம் நடத்தினார். இந்த நிலையில் கடந்த வாரம் திண்டுக்கலில் பன்னீர்செல்வம் அணியினர்  கூட்டம் நடத்தினார்கள்.

அந்தக் கூட்டத்திற்கான எல்லா வேலைகளையும் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பொறுப்பேற்று நடத்தினார். கூட்டத்தினை நடத்தி முடித்த மறுநாள் டெல்லிக்கு  சென்ற பன்னீர்செல்வம், கே. பி. முனுசாமி, மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் ஆகிய 4 பேரும் பிரதமர் மோடியை சந்தித்தார்கள்.

 இந்த சந்திப்பு குறித்து  நத்தம் விஸ்வநாதனிடம் ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை.

மேலும் சமீப காலமாக பன்னீர்செல்வம் தனித்து இயங்கி வருவதாகவும், பன்னீர்செல்வத்தினை முன்னாள் அமைச்சர் முனுசாமி அவரது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக புலம்பி வருகிறார் நத்தம் விஸ்வநாதன். இது குறித்து அவரது ஆதரவாளர்கள் கூறியதாவது: சசிகலாவிடமிருந்து பிரிந்து வந்ததும் கட்சியை வழிநடத்த பல்வேறு சமயங்களில் செலவு செய்தது விஸ்வநாதானும் முனுசாமியும்தான்.

மூத்த அமைச்சர் என்பதை மறந்து விட்டு பல்வேறு சம்பவங்களில் விஸ்வநாதனை கலந்து பேசாமல் தவிர்த்து வருகிறார்கள். சமீப காலமாக முழுவதும் ஒதுக்கி வைத்து விட்டனர்.

திண்டுக்கல்லில் கூட்டம் நடந்த மறுநாள்தான் டெல்லிக்கு சென்றார் பன்னீர்செல்வம். அவருடன் மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் சென்றனர்.

ஆனால் டெல்லிக்கு செல்வதை ரகசியமாக வைத்துக் கொண்டு எங்களை கழட்டி விட்டு விட்டு சென்று விட்டனர். தவிர கட்சியில் எடுக்கும் பல்வேறு முடிவுகளுக்கு முன் கலந்து பேச அழைப்பதில்லை.

இது ஒரு முறையல்ல. பல்வேறு முறை இப்படியே செய்வதால் விஸ்வநாதன் மிகவும் மன உளைச்சலில் இருக்கிறார்.

ஆதலால் விரைவில் ஓ. பி. எஸ் அணியிலிருந்து இ. பி. எஸ் அணிக்கு இடமாறுதல் ஆகலாம் இல்லையென்றால் அரசியலை விட்டு வெளியேறி விட்டு ஓய்வு எடுக்க செல்லலாம் என்கிற மன நிலையில் விஸ்வநாதன் இருக்கிறார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

.

மூலக்கதை