விதிமீறிய கட்டடங்கள் மீதான நடவடிக்கை. மீண்டும் துவங்கும்! சீசன் நிறைவு பெறுவதால் நகராட்சி ஆலோசனை

தினமலர்  தினமலர்

ஊட்டி :'ஊட்டி நகரில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களின் மீதான நடவடிக்கை மீண்டும் துவங்கும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழல், இயற்கை சூழலை காக்கவும், 1993ம் ஆண்டு 'மாஸ்டர் பிளான்' சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால், குடியிருப்புகளுக்கான கட்டட அனுமதி உள்ளாட்சி அமைப்புகளிடமும், வணிக ரீதியாக கட்டட அனுமதி, மாவட்ட கலெக்டர் தலைமையிலான கட்டட அனுமதி குழுவிடமும் பெற உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், மாவட்டத்துக்கான கட்டட சட்டத்தை மீறி, பலரும் விதிகளை மீறி கட்டடங்களை கட்டி வருகின்றனர். இதை தொடர்ந்து, சென்னை ஐகோர்டில், தொடரப்பட்ட பொதுநல வழக்கின் அடிப்படையில், முதற்கட்டமாக, ஊட்டியில் கட்டப்பட்ட, 1330 கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் பணி துவக்கப்பட்டது.அதில், சில கட்டட உரிமையாளர்கள் கோர்டில் தடையாணை வாங்கியதால் அப்பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. வழக்கும் நடந்து வருகிறது.
அரசியல் தலையீடு
எனினும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள விவசாய தோட்டம்; எஸ்டேட்கள் விற்பனை செய்யப்பட்டு, விடுதிகள்; கட்டடங்கள் அதிகளவில் உயர்ந்து வருகின்றன. இதற்கான அனுமதிகள், சில அரசியல் வாதிகள் நிர்பந்தத்தின் பேரில், சில அதிகாரிகளின் உடந்தையுடன் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம், 'விவசாய நிலங்களில் கட்டடம் கட்ட அனுமதி அளிக்க கூடாது' என்ற ஐகோர்ட் உத்தரவு மீறப்பட்டுள்ளது. இதனை மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் கண்டு கொள்வதில்லை.
மீண்டும் அதிரடி
இந்நிலையில், சமீபத்தில் வெளிவந்த ஐகோர்ட் உத்தரவு; மாநில உள்ளாட்சி இயக்குனரகத்தின் அறிவுறுத்தலின் பேரில், ஊட்டி, குன்னுாரின் சில பகுதிகளில், விதிமீறி கட்டப்பட்ட சில வணிக வளாகங்களுக்கு, நகராட்சி அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். இந்த பட்டியலில், மேலும், நுாற்றுக்கும் மேற்பட்ட கட்டடங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஊட்டி, குன்னுாரில் கோடை சீசன் நடந்த போது, இந்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது, சீசன் முடியும் தருவாயில் இருப்பதால், மீண்டும் கட்டடங்களின் மீதான இடிப்பு நடவடிக்கை தொடரும் என கூறப்படுகிது.
நீலகிரி சுற்றுச்சூழல் அமைப்பின் நிர்வாகி பெள்ளி கூறுகையில்,''நகரங்களிலும், கிராமங்களிலும் உள்ள விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு, நீராதார பகுதிகளில் கட்டடங்கள் கட்டுவது அதிகரித்து வருகிறது. இந்த பணிக்காக, அனுமதியின்றி சாலைகள் அமைப்பது; மரங்களை வெட்டுவது; புல்வெளிகளை அழிப்பது போன்ற செயல்கள் நடக்கின்றன. இதனால், உயிர்ச்சூழல் மண்டலத்துக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டு வருகிறது.
இன்னும் சில ஆண்டுகள் இதேநிலை தொடர்ந்தால், நீலகிரியில் இயற்கை சமன்பாடு மாறி, மழை கால பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வரும் நாட்களில் இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, ஊட்டி, குன்னுார் பகுதிகளை காக்க முடியும். தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும்,'' என்றார். ஊட்டி நகராட்சி கமிஷனர் பிரபாகரன் கூறுகையில், ''ஊட்டி நகராட்சியில், விதி மீறிய, 1300 கட்டடங்கள் குறித்த பட்டியல் ஏற்கனவே அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் மீதான நடவடிக்கை குறித்து கோர்ட்டில் வழக்கு உள்ளதால் அப்பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது, மீண்டும் இங்கு கட்டப்பட்டு வரும் விதி மீறிய கட்டடங்கள் குறித்த ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போதைய கோர்ட் மற்றும் அரசின் உத்தரவின் கீழ், ஊட்டியில் சில கட்டடங்களுக்கு 'சீல்' வைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. கோடை சீசனின் போது நிறுத்தப்பட்ட இந்த பணிகள், பட்டியலின் அடிப்படையில், மீண்டும் துவக்கப்பட்டு, விதிமீறிய கட்டடங்களுக்கு மீண்டும் சீல் வைக்கும் பணி தொடரும்,'' என்றார்.

மூலக்கதை