மனு கொடுக்க வந்த நபரை தடுத்ததால் ஆத்திரம்: எடப்பாடி பழனிச்சாமி வீட்டின் முன்பு தீக்குளிக்க முயற்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
மனு கொடுக்க வந்த நபரை தடுத்ததால் ஆத்திரம்: எடப்பாடி பழனிச்சாமி வீட்டின் முன்பு தீக்குளிக்க முயற்சி

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் மனுக்கொடுக்க வந்த நபரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்ததால், ஆத்திரமடைந்த நபர் மண்ணெண்ெணயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் கிரீன் வேஸ் சாலையில் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பொறுப்பேற்ற பிறகு, தலைமை செயலகம் செல்லும் முன் பொது மக்களிடம் மனுக்களை பெற்று வருகிறார்.

இதனால் தினமும் அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர்கள் குடியிருப்பு பகுதியில் பரபரப்பாக காணப்படும்.

இந்நிலையில், இன்று காலை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் வீட்டின் அருகே நூற்றுக்கும் மேற்பட்ேடார் கூடி இருந்தனர்.

அப்போது குன்றத்தூர் பதிநகரை சேர்ந்த ராஜா என்பவரின் மகன் ராஜீவ்(40) மனு கொடுக்க வந்துள்ளார். முதல்வரை சந்தித்து மனு கொடுக்க முயற்சி செய்த போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ராஜீவை தடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் போலீசாருக்கும் மனு கொடுக்க வந்த ராஜீவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ராஜீவ், ஏற்கனவே மறைத்து கொண்டு வந்த மண்ணெண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத போலீசார் உடனே ராஜீவ் மீது தண்ணீரை ஊற்றினர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 இதுகுறித்து தகவல் அறிந்த அபிராமபுரம் போலீசார் சம்பவம் இடத்திற்கு வந்து தீ குளிக்க முயன்ற ராஜீவை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

பின்னர் ராஜீவிடம் விசாரணை நடத்திய போது, கடன் தொல்லையால் குடும்பம் வறுமையில் வாடுவதால் உதவி கேட்டு முதல்வரை சந்தித்து மனு கொடுக்க வந்தது தெரியவந்தது.

.

மூலக்கதை