சிவகார்த்திகேயன் கண்ணீர்…நடந்தது என்ன ?

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
சிவகார்த்திகேயன் கண்ணீர்…நடந்தது என்ன ?

‘ரெமோ’ படத்தின் நன்றி விழாவில் சிவகார்த்திகேயன் கண்ணீர் விட்டு அழுததுதான் கடந்த சில நாட்களாக கோலிவுட்டையும் தாண்டி அரசியல் வரை சென்றிருக்கிறது. சமூக வலைத்தளங்களிலும் சிவகார்த்திகேயன் மேடையில் கண்ணீர் விட்டதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. எப்படியோ அந்த கண்ணீரும் படத்தின் கலெக்ஷனுக்கு உறுதுணையாக அமைந்துவிட்டது. இரண்டாவது வாரத்திலும் ‘ரெமோ’ கலெக்ஷன் குறையவில்லை என்கிறது வினியோக வட்டாரம்.

இதனிடையே, சிவகார்த்திகேயன் தங்களிடம் படத்தில் நடிப்பதற்காக வாங்கிய முன்பணத் தொகைக்கு படத்தில் நடித்துக் கொடுக்க வேண்டும் என ஸ்டுடியோ க்ரீன், வேந்தர் மூவீஸ், எஸ்கேட் ஆர்ட்டிஸ்ட் ஆகிய நிறுவனங்கள்தான் மூன்று தயாரிப்பு நிறுவனங்கள் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திடம் முறையிட்டுள்ளதாகத் தெரிகிறது. இது சம்பந்தமாக ‘ரெமோ’ பட வெளியீட்டிற்கு முன்பே பேச்சு வார்த்தை நடந்துள்ளது. ஆனால், உரிய முடிவு எட்டப்படவில்லை என்கிறார்கள். ‘ரெமோ’ வெளியீட்டிற்கு முன்பாகவே சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து தான் நடிக்கும் படங்களைப் பற்றிய அறிவிப்புகளையும் வெளியிட்டது அந்த மூன்று நிறுவனங்களையும் ஆத்திரப்பட வைத்துள்ளது. அந்த நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் சிலர் களத்தில் இறங்கினார்களாம். இதனிடையே நவம்பர் 11ம் தேதி முதல் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தைப் பற்றிய அறிவிப்பும் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் விவகாரம் மேலும் சூடு பிடித்துள்ளது.

இந்தப் பிரச்சனைக்கு சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக நடிகர் சங்க செயலாளர் விஷால், நடிகர் சிம்பு ஆகியோர் வெளிப்படையாக தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். மேலும் ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட சில முன்னணி நடிகர்களும் சிவகார்த்திகேயனிடம் பேசியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், சிவகார்த்திகேயன் தரப்பில் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்திடம் மட்டுமே முன்பணம் வாங்கியுள்ளோம். அதனால் அவர்கள் தயாரிக்கும் படத்தில் மட்டுமே நடித்துத் தருவாம் என்று சொல்லியுள்ளார்களாம். மற்றவர்களிடம் முன்பணம் வாங்கவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்கள். விரைவில் இது பற்றி மீண்டும் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. அப்போது இந்த விவகாரத்திற்கு சுமூகத் தீர்வு எட்டப்படும் என்று தெரிகிறது.

மூலக்கதை