பயங்கரவாதிகளுடனான மோதலில் 10 வீரர்கள் பலி
துருக்கியில் குர்து பயங்கரவாதிகளுடனான மோதல்களில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 10 வீரர்கள் பலியாகினர்.
இதுகுறித்து வான் மாகாண ஆளுநர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
துருக்கியின் கிழக்குப் பகுதியில் செயல்பட்டு வரும் பிரிவினைவாத அமைப்பான குர்திஸ்தான் தொழிலாளர் அமைப்பை (பி.கே.கே.) சேர்ந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே வெள்ளிக்கிழமை கடும் மோதல் நிகழ்ந்தது.
இதில், பாதுகாப்புப் படை வீரர்கள் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், எட்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் தென்பகுதியான மார்தினில் நிகழ்ந்த மற்றொரு மோதலில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஊர்க்காவல் படை வீரர் ஒருவரும் பி.கே.கே. பயங்கரவாதிகளுடனான சண்டையில் உயிரிழந்தார் என அனடோலு செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இதனிடையே டென்டுரெக் மலைப் பகுதியில் நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் பி.கே.கே. பயங்கரவாதிகள் 13 பேர் கொல்லப்பட்டனர் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.