சமூக பாரபட்சங்கள் கூடாது : மோதி

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
சமூக பாரபட்சங்கள் கூடாது : மோதி

தீவிரவாதிகளை உயர்வாக போற்றுகின்ற பாகிஸ்தானை தாக்கி பேசியதோடு, தீவிரவாதத்திற்கு நாடு ஒருபோதும் தலை வணங்காது என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார்.

பலுசிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள மக்களுக்கு எதிரான அட்டூழியங்களை அவர் எழுப்பி இருப்பதற்கு அவர்கள் நன்றி தெரிவித்திருப்பதாகவும் மோதி கூறினார்.

இந்தியாவின் 70-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லியிலுள்ள செங்கோட்டையில் இன்று காலை கொடியேற்றிய பிரதமர், அதன் பின்னர் சுதந்திரதின உரையாற்றினார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முப்படைகளின் தளபதிகள் இதில் பங்கேற்றனர்.

விடுதலைக்காக தங்களுடைய உயிர்களை தியாகம் செய்தத் தலைவர்களை தனது உரையில் நினைவுகூர்ந்த அவர், தொலைநோக்கு திட்டங்கள் குறிந்து விரிவாக பேசினார். சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு ஓய்வூதியத்தை 20 சதவீதம் உயர்த்த அரசு முடிவெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொது மக்களின் கனவுகளை நனவாக்கவும், அவர்களின் தேவைகளை நிறைவேற்றவும் மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாக பிரதமர் தெரிவித்தார்.

நாடு எதிர்நோக்குகின்ற பல்வேறு சவால்களை சமாளிக்கும் செயல்திறன் 125 இந்திய மக்களிடம் உள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.

தற்போதைய ஆட்சியின் பல்வேறு நன்மைகளை பட்டியலிட்ட அவர், சர்வதேச பொருளாதாரத்தை இந்தியா வழிநடத்த வேண்டுமானால், நம் நாட்டின் பொருளாதாரம் சர்வதேச தரத்திற்கு உயர வேண்டும் என்றார்.

பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல, தேசத்திற்கு சமூக சமத்துவமும் தேவை என்றும், வேற்றுமையில் ஒற்றுமை தான் நமது பலம் என்றும் அவர் தெரிவித்தர்.

ராமானுஜர், அம்பேத்கர் மற்றும் மகாத்மா காந்தி போன்றோர் சமூக பாரபட்சங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்ததை மோதி நினைவுகூர்ந்தார்.

மாவோயியத்தையும் பயங்கரவாதத்தையும் நாடு சகித்துக்கொள்ளாது என்று குறிப்பிட்ட மோதி, வன்முறைக்கும் அட்டூழியங்களுக்கும் நாட்டில் இடமில்லை என்றார்.

சுதந்திர தின விழாவையொட்டி டெல்லியில் உள்ள மகாத்மாக காந்தி நினைவிடத்தில் மோதி மரியாதை செலுத்தினார்.

டெல்லி முழுவதும் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி செங்கோட்டை வளாகம் மற்றும் அதை சுற்றிய இடங்களில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மூலக்கதை