இலங்கை: கிழக்கு மாகாண சபையின் ஆசிரியர் நியமன வயது வரம்பில் சர்ச்சை

BBC  BBC
இலங்கை: கிழக்கு மாகாண சபையின் ஆசிரியர் நியமன வயது வரம்பில் சர்ச்சை

இலங்கையில் கிழக்கு மாகாண சபையினால் புதிதாக நியமனம் பெறவுள்ள பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் 35 வயதுக்கு மேற்பட்ட பட்டதாரிகளுக்கு அநீதி இழக்கப்பட்டுள்ளதாக மாகாண முதலமைச்சர் உட்பட பல்வேறு தரப்பினராலும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 - 35 என பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான வயது எல்லை வரையறுக்கப்பட்டுள்ளதால் நூற்றுக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கும் தகுதியை இழந்துள்ளனர்

கிழக்கு மாகாணப் பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் மாகாணப் பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காகப் பட்டதாரிகளிடமிருந்து தற்போது விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இது தொடர்பாகப் பொதுச் சேவைகள் ஆணைக்குழுவிடம் தொடர்பு கொண்டபோது மத்திய அரசின் அறிவுறுத்தல் என தனக்கு பதில் தரப்பட்டதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் கூறுகின்றார்

அதிகாரப் பகிர்வு தொடர்பாக மாகாண முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் ''மாகாண சபைக்குரிய அதிகாரங்கள் பெயரளவிலே இருக்கின்றது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்" என்றும் சுட்டிக் காட்டியிருக்கின்றார்.

இந்த நியமனத்தில் கிழக்கு மாகாணப் பொதுச் சேவைகள் ஆணைக்குழு வேலையற்ற பட்டதாரிகளின் வயது எல்லை தொடர்பாக கவனம் செலுத்தத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டுகின்றார் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான இரா. துரைரெத்தினம்.

பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புக்கான வயது எல்லை 45 ஆக இருக்க வேண்டும் என மாகாண சபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும் அவை புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

ஆளணிக்குரிய அனுமதியுடன் சேவை பிரமாணக் குறிப்பை தயாரிக்கும் அதிகாரம் மாகாணப் பொதுச் சேவைகள் ஆணைக்குழுவுக்கு உள்ளது என்றும் பிபிசி தமிழோசைக்குத் தெரிவித்துள்ள இரா. துரைரெத்தினம் இது தொடர்பாக மாகாண ஆளுநரிடம் மனுவொன்றையும் முன் வைத்துள்ளார்.

திருகோணமலை மாவட்ட ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வந்து வயது எல்லை அதிகரிக்கப்பட வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

மூலக்கதை