போலீசால் நிறைவேறாமல் போன சுவாதியின் கடைசி ஆசை

TAMIL CNN  TAMIL CNN
போலீசால் நிறைவேறாமல் போன சுவாதியின் கடைசி ஆசை

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதியின் கடைசி ஆசை தான் இறந்த பின்னர் உடல்உறுப்புகளை தானம் செய்ய வேண்டுமென்பது. ஆனால் அது நிறைவேறவில்லையென அவரது தந்தை வேதனை தெரிவித்துள்ளார்.

இன்போசிஸ் ஊழியரான சுவாதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சில நாட்களுக்கு முன்பு மர்ம நபரால் கொலை செய்யப்பட்டார். கொலையாளியை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவையே இந்த சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில் சுவாதியின் தந்தை சந்தனகோபாலகிருஷ்ணன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,” எனது மகள் அடுத்தவருக்கு உதவி செய்யும் குணம் படைத்தவள். மனிதாபிமானமிக்கவள். எனது மகள் என்பதற்காக இதனை நான் சொல்லவில்லை. சாலையில் ஏழைக் குழந்தைகளை அல்லது பிச்சை எடுப்பவர்களை பார்த்தால் கூட வெறும் வயிற்றில் சென்று படுத்துக் கொள்வாள். அனாதரவாக இருப்பவர்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்ற எண்ணம் எப்போதும் அவளுக்கு உண்டு.

எனது இரு மகள்களின் கடைசி ஆசையும் தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்ய வேண்டுமென்பதுதான். சுவாதியின் ஆசையும் அதுதான். ஆனால் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் 2 மணி நேரத்திற்கு மேலாக உடல் அப்படியே கிடந்தது. பின்னர் போஸ்ட்மார்ட்டம் முடித்து மாலையில்தான் எங்களிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அவளது கடைசி ஆசையை கூட நிறைவேற்ற முடியாத பாவி ஆகி விட்டேன். எனது இன்னொரு மகள் சொல்கிறாள் சூளைமேட்டில் இருந்து எங்காவது சென்று தற்கொலை செய்து கொள்வோம் என்கிறாள்.

எனது மகள் என்ன தவறு செய்தாள்? தினமும் காயத்ரி மந்திரம் சொல்வாள். கடவுளுக்கு பயந்த பெண். அடுத்தவர்கள் வேதனையைக் காண சகிக்காதவள். ஆனால் சோசியல் மீடியாக்கள் அவளது இறப்புக்கு பின்னால் பல கதைகளை சொல்கின்றன. எங்கள் வேதனையை ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். எங்களை நிம்மதியாக துக்கம் அனுஷ்டிக்க விடுங்கள். என் மகள் எதையும் என்னிடம் மறைத்ததில்லை. யார் குறித்தும் புகார் தெரிவித்ததில்லை.

இப்போது அவள் உயிருடன் இல்லை. அது எங்களுக்கு தெரியும் தினமும் வேலை முடிந்து இரவு 7.30 மணிக்கு வீட்டுக்கு வருவாள். இரவு 7.30 மணியானால் அவளது காலிங் பெல் அடிக்கும். இப்போதும் இரவு 7.30 மணியானால் தானாகவே சென்று கதவை திறந்து பார்க்கிறோம்… அவள் வருகிறாளா என்று..!

மூலக்கதை