‛இறைவி’ கார்த்திக் சுப்பராஜ் பிரச்னை : தயாரிப்பாளர் சங்கம் முடிவு என்ன?

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
‛இறைவி’ கார்த்திக் சுப்பராஜ் பிரச்னை : தயாரிப்பாளர் சங்கம் முடிவு என்ன?

ஒரு படத்தைப் பற்றி அதிக விவாதம் வந்தால் அது அந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணமாக அமைந்து விடுமா என்பதும் விவாதத்திற்குரிய விஷயம்தான். குறும் படங்களை இயக்கி திரைக்கு வந்த இயக்குனர்களில் முதன் முதலில் தனி அடையாளத்தை ஏற்படுத்தியவர் கார்த்திக் சுப்பராஜ் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், சினிமாவில் தயாரிப்பாளர்களை நிம்மதியாக இருக்க வைக்கும் இயக்குனர்கள்தான் காலத்திற்கும் பேசப்படுவார்கள் என்பது பலருக்கும் தெரிவதில்லை. தயாரிப்பாளர்களை பணத்தைக் கொட்டும் மிஷினாக மட்டுமே பார்த்த பல இயக்குனர்கள் இன்று காணாமல் போயிருக்கிறார்கள்.

தன் முதல் படத்தை ஓரிரு கோடிகளில் இயக்கி வெற்றி கண்ட கார்த்திக் சுப்பராஜ், அடுத்து இயக்கிய ‘ஜிகர்தண்டா’ படத்தை பட்ஜெட்டுக்கு மீறி செலவு செய்து தயாரிப்பாளருக்கு மிகப் பெரும் சுமையை ஏற்படுத்தினார். அப்போது அந்தப் படம் வெளிவர பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. இப்போது தன்னுடைய முதல் பட வாய்ப்பை வழங்கிய ‘பீட்சா’ தயாரிப்பாளருக்காக ‘இறைவி’ படத்தை இயக்கி அவரை இக்கட்டான சூழலில் மாட்ட வைத்திருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ்.

7 கோடி ரூபாய் பட்ஜெட் போடப்பட்ட ‘இறைவி’படம் 13.5 கோடி வரை செலவு செய்து எடுக்கப்பட்டுள்ளது. அவ்வளவு பணமும் திரும்பி வந்தால்தான் தயாரிப்பாளர் நிம்மதியாக இருக்க முடியும். படம் எவ்வளவு வேண்டுமானாலும் சிறப்பாக இருக்கட்டும், ஆனால் தயாரிப்பாளருக்குப் போட்ட முதலீடு திரும்ப வந்தால்தானே அவர் தொடர்ந்து படமெடுக்க முடியும்.

தனக்கு முதல் பட வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளரை தன்னுடைய மூன்றாவது படத்திலேயே இப்படி தவிக்க விட்டது நியாயமா கார்த்திக் சுப்பராஜ் என தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து குரல் எழுந்துள்ளது.

‘இறைவி’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா, ‘இறைவி’ படம் பற்றியும், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் பற்றியும் பேசியுள்ள ஆடியோதான் தற்போது கோலிவுட்டின் ஹாட் டாபிக்காக இருந்து வருகிறது.

இதனிடையே இறைவி படத்தை தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் இறைவி படத்தை பார்த்த பல தயாரிப்பாளர்கள், இந்த மாதிரி படம் தயாரிப்பவர்களை தவறாக சித்தரிப்பவர்களுக்கு ரெட் கார்டு போட வேண்டும் என்று சத்தமாக குரல் கொடுத்தனர். இதையடுத்து கார்த்திக் சுப்புராஜ்க்கு தயாரிப்பாளர்கள் இடையே இனி ஒத்துழைப்பு வழங்கப்போவது கிடையாது என்று ஒருமனதாக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை