தாய்-தந்தையை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடாதீர்கள்!

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
தாய்தந்தையை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடாதீர்கள்!

பீட்சா, ஜிகர்தண்டா படங்களைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் இறைவி. ஜூன் 3-ந்தேதி வெளியாகும் இந்த படத்தில் விஜயசேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, ராதாரவி, அஞ்சலி, கமாலினி முகர்ஜி, கருணாகரன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பிரஸ்மீட் நேற்று இரவு 7 மணி அளவில் சென்னையில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது நடிகர் ராதாரவி பேசுகையில்,

கார்த்திக் சுப்புராஜின் இறைவி படத்தில் எனது போட்டோவைப்பார்த்து விட்டு, நீங்கதான் இந்த படத்தில் வில்லனா? என்று கேட்கிறார்கள். ஆனால் இந்த படத்தில் நான்தான் ரொம்ப நல்லவனாக நடித்திருக்கிறேன். அப்படியொரு கேரக்டர். எனது 45 வருட சினிமா பயணத்தில் இதுவரை 300 படங்களில் நடித்திருக்கிறேன். பெரும்பாலான படங்களில் வில்லன்தான். ஆனால் இப்போது என்னை நல்லவனாக காண் பித்து வருகிறார்கள். அந்த வகையில், கார்த்திக் சுப்புராஜ் என்னை ரொம்ப நல்லவனாக காண்பித்துள்ளார். அவர் படத்தில் நடித்தது ரொம்ப பெருமையாக உள்ளது. அவர் பார்க்கத்தான் பெரிய உருவமாக இருப்பார். ஆனால் பழகினால் ஒரு குழந்தை மாதிரி தெரிவார்.

ஒரு நாள் ஒரு காட்சியை காலை 8 மணி தொடங்கி மாலை 3 மணி வரை எடுத்தார். எவ்வளவு நடித்தாலும் திருப்தியடையவே மாட்டார். ஆனால் அப்படி நடித்த அந்த காட்சியை டப்பிங்கில் பார்த்தபோது வியந்து விட்டேன். அவ்வளவு சிறப்பாக இருந்தது. ஹாலிவுட் படங்களைப்பார்த்து நாம காப்பியடிக்க வேண்டாம். இறைவி மாதிரியான படங்களை அவர்கள்தான் காப்பியடிக்க வேண்டும். அந்த அளவுக்கு இந்த படத்தில் ஒரு ட்ரெயின் ஷாட்டை பிரமாதமாக எடுத்துள்ளார்.

மேலும், இந்தியில் அமிதாப்பச்சன் ஒரு படத்தில் குடிகாரனாக நடித்திருந்தார். அவ்வளவு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதற்காகவே அந்த படத்தை நான் பலதடவை பார்த்தேன். அதன்பிறகு இந்த இறைவி படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பை பார்த்தேன். அவர் குடிப்பதில்லை என்று கேள்விப்பட்டேன். ஆனபோதும் நிஜ குடிகாரன் போலவே ரியலாக நடித்திருக்கிறார்.

இந்த சினிமா உலகில் ஒருவன் தேவையாக இருந்தால் கருவில் இருந்துகூட வெளியில் எடுத்து கொண்டு வந்து விடுவார்கள். ஆனால் தேவையில்லை என்றால் எதிரில் நின்றால்கூட அவர்களுக்கு நம்மை அடையாளமே தெரியாது.

மனிதன் படத்தில் எனக்கு ரொம்ப நல்ல பேரு. என்ன பண்ணினால் பிரகாஷ்ராஜை காலி பண்ண முடியும் என்று அந்த படத்தில் நடிப்பதற்கு முன்பே ஹோம் ஒர்க் செய்தேன். இந்தியாவிலேயே இன்றைக்கு வான்டட் ஆர்ட்டிஸ்ட் பிர காஷ்ராஜ் மட்டும்தான். பெரிய நடிகன். அதனால்தான் அவரை நடிப்பில் மிஞ்ச வேண்டுமே என்று நான் ஹோம்ஒர்க் பண்ணி விட்டு சென்றேன். அந்த நடிப்பை அனைவருமே பாராட்டுகிறார்கள்.

அதேமாதிரி இந்த இறைவியில் நடித்துள்ள விஜயசேதுபதி சேவிங் பண்ணிவிட்டு ஒருநாள் வந்து நின்றார். அழகாக இருந்தார். ஆனால் இந்த இறைவி படத்தில் தாடி வைத்து அவரை அடையாளமே தெரியாத அளவுக்கு கார்த்திக் சுப்புராஜ் மாற்றி வைத்துள்ளார். விஜயசேதுபதி நல்ல நடிகன். வேணும்னாலும் பாரு நீ நம்பர் ஒன்னுலதான் நிற்பே. உன் டெடிகேசன் என்னான்னு எனக்கு தெரியும் அதனால் சொல்றேன்.

இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா பாடியிருக்கிறாரு. அதை பார்க்கையில் அவரே பாடும்போது மற்றவர்களெல்லாம் பாடினால் என்ன என்று எனக்கு தோன்றுகிறது. இந்த இறைவி படம் பெண்களின் மகத்துவத்தை சொல்லும் படம். அம்மாவின் பெருமைகளை சொல்லும் படம்.

நான் படித்த காலத்தில் அம்மா என்னை பார்த்து எழுது என்று சொல்லி அனுப்பினார். ஆனால் நான் அருகில் இருந்தவனை பார்த்து எழுதினேன். ஆசிரியர் பிடித்துவிட்டார். அம்மா கவனமாக பார்த்து எழுது என்று சொன்னதை நான் தவறாக புரிந்து கொண்டதால் ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டேன். அதனால் யாராக இருந்தாலும் அம்மா சொல்வதை கவனமாக கேட்டு அதன்படி நடந்தால் எந்த பிரச்சினையும் வராது.

இந்த இடத்தில் நான் ஒரு மெசேஜ் சொல்ல ஆசைப்படுகிறேன். தயவு செய்து தாய்-தந்தையை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடாதீர்கள். எந்த நாட்டில் முதியோர் இல்லங்கள் இல்லையே அந்த நாடுதான் மானிதாபிமானம் உள்ள நாடு.

ஒரு பையன் மழையில் நனைந்து கொண்டே வீட்டிற்குள் வந்தான். அப்போது அப்பா ஏன்டா மழை பெய்தே ஓரமா நின்னுட்டு வரக்கூடாது என்றார். அண்ணன், இவனுக்கு இதே வேலைதான் என்றான். ஆனால் அம்மாவோ, மகனின் தலையை துவட்டியபடி, இந்த சனியன் பிடிச்ச மழை எம்புள்ள வர்ற நேரம்தான வரனுமா – என மழைய திட்டினாள். அப்படிப்பட்ட தாய்-தந்தையை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடாதீர்கள்.இவ்வாறு ராதாரவி பேசினார்.

மூலக்கதை