வில்லன் நடிகர் வெளியிட்ட 2.0 தகவல்கள் – கடுங்கோபத்தில் ஷங்கர்

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
வில்லன் நடிகர் வெளியிட்ட 2.0 தகவல்கள் – கடுங்கோபத்தில் ஷங்கர்

இந்திய திரையுலக வரலாற்றில் அதிக பொருட்செலவில் தயாராகும் படம் என்ற பெருமை, 2.0 படத்துக்கு கிடைத்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் இப்படம், எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி வருகிறது.

இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க அர்னால்டு ஸ்வாஸ்நேகரை கேட்டு, அவர் சம்பளமாக 100 கோடிக்கும் அதிகமாக டிமாண்ட் செய்ய, அவரை மாற்றிவிட்டு அக்ஷய் குமாரை ஒப்பந்தம் செய்தனர். அக்ஷய், ரஜினி மோதும் பிரமாண்ட சண்டைக் காட்சி சமீபத்தில் டெல்லி மைதானத்தில் எடுக்கப்பட்டது.

பொதுவாக ஷங்கர் படத்தின் படப்பிடிப்பு ராணுவ கட்டுப்பாட்டுடன் நடைபெறும். படத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே படப்பிடிப்புதளத்தில் அனுமதிக்கப்படுவர். அதுவும், அடையாள அட்டை இருந்தால் மட்டும். படப்பிடிப்பு தளத்துக்கு செல்போன் எடுத்து வரவும், பயன்படுத்தவும் அனுமதி இல்லை.

2.0 அதிக பொருட்செலவில் தயாராகும் படம் என்பதால் கட்டுப்பாடு இன்னும் அதிகம். அதையும் மீறி அக்ஷய் குமாரின் ரோபோ தோற்றம் இணையத்தில் வெளியாகி ஷங்கரை அப்செட் செய்தது. இந்நிலையில், படத்தில் நடிக்கும் உதிரி வில்லனான சுதன்ஷு பாண்டே, படம் குறித்து முக்கியமான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

எந்திரன் படத்தில் சிட்டி என்ற ரோபோ ரஜினிதான் வில்லன். மனித வில்லன் என்று பார்த்தால் ரஜினியின் வளர்ச்சி பிடிக்காத பொறாமைக்கார புரபஸர் டானி. அந்த டானியின் மகனாக தான் நடித்திருப்பதாகவும். 2.0

படத்தைப் பொறுத்தவரை தான்தான் வில்லன் என்றும், அக்ஷய் குமார் தான் உருவாக்கிய வெறும் ரோபோ மட்டும் எனவும் 2.0 படம் குறித்த பல தகவல்களை சுதன்ஷு பாண்டே வெளியிட்டுள்ளார்.

ரஜினி படத்தில் வில்லன் அக்ஷய் அல்ல, நான்தான் என்ற சுதன்ஷுவின் வெற்று ஈகோ காரணமாக 2.0 படம் குறித்த முக்கிய தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அவரது இந்தப் பேட்டியால் கடும் கோபத்தில் இருக்கிறார் ஷங்கர். எந்தளவு என்றால், சுதன்ஷுவை நீக்கிவிட்டு அவருக்குப் பதில் வேறு ஒருவரை நடிக்க வைக்கலாமா என்று யோசிக்கும் அளவுக்கு கடுங்கோபம் ஷங்கருக்கு.

தவளை தன் வாயால் கெடும் என்பதற்கு உதாரணமாகியிருக்கிறார் சுதன்ஷு பாண்டே.

மூலக்கதை