பாவம்! அந்த அ.தி.மு.க. அமைச்சர்கள்: திமுக தலைவர் கருணாநிதி

NEW INDIA NEWS  NEW INDIA NEWS
பாவம்! அந்த அ.தி.மு.க. அமைச்சர்கள்: திமுக தலைவர் கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதி அதிமுக அமைச்சர்கள் வெளியிட்ட அறிக்கைக்கு பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் தனது அறிக்கையில், அ.தி.மு.க. அமைச்சர்கள் இருவர் நேற்றையதினம் ஓர் அறிக்கை விடுத்துள்ளனர்.

அந்த அறிக்கையில் நான் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

நான் விடுத்த அறிக்கைக்குத் தலைப்பே, “மத்திய அமைச்சர் ஜவடேகர் குற்றச்சாட்டுகளுக்காவது முதலமைச்சர் ஜெயலலிதா பதில் அளிப்பாரா?” என்பது தான்.

இதற்குத் தான் அ.தி.மு.க. அமைச்சர்கள் விடுத்த அறிக்கையில் எனக்குப் பதில் அளிப்பதாகக் கூறியிருக்கிறார்கள்.

எனது அறிக்கையின் முதல் பத்தியில், மத்திய அமைச்சர்கள் பியுஷ் கோயல் அவர்களும், பொன். ராதாகிருஷ்ணன் அவர்களும் அ.தி.மு.க. அரசு மீதும், முதலமைச்சர் மீதும் கடுமையாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறார்களே, அதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஏன் பதில் கூறவில்லை என்று கேட்டிருக்கிறேன்.

அது பற்றி தற்போது அறிக்கை விடுத்துள்ள இரண்டு அமைச்சர்களும் பதில் எதுவும் அளிக்கவில்லை.

எனது அறிக்கையின் இரண்டாவது பத்தியில், மற்றொரு மத்திய அமைச்சரான ஜவடேகர், மின் திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு ஆதரவாகவே தமிழக அரசு செயல்பட்டு வருகிறது, மக்கள் நலனில் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அக்கறை இல்லை என்று சொல்லியிருக்கிறாரே, இந்தக் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் ஜெயலலிதாவின் பதில் என்ன என்று கேட்டிருந்தேன்.

தற்போது அறிக்கை விடுத்துள்ள இரண்டு அமைச்சர்களும் அதைப் பற்றியும் எதுவுமே கூறவில்லை; ஏன் கண்டு கொள்ளவே இல்லை.

எனது அறிக்கையின் மூன்றாவது பத்தியில் மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு தொடர்பாக ஏழு மாநிலங்களின் அறிக்கையை மத்திய அரசு கேட்டதாக வும், ஆறு மாநிலங்கள் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளன என்றும், தமிழக அரசு மட்டும் இதுவரை எந்தவிதமான அறிக்கையும், பதிலும் அளிக்கவில்லை என்றும் மத்திய அமைச்சர் கூறியிருக்கிறாரே, அது சாதாரணமான குற்றச் சாட்டு அல்ல என்றெல்லாம் குறிப்பிட்டிருந்தேன்.

நேற்றையதினம் இரண்டு அமைச்சர்கள் கொடுத்த அறிக்கையில் இதுபற்றியும் எந்த விளக்கமும் இல்லை.

எனது அறிக்கையின் நான்காவது பத்தியில், தமிழக மின் வாரியத்துக்கு கடந்த ஆண்டில் மட்டும் 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் மின்சாரத் துறையை நட்டத்திலிருந்து மீட்கவும், வருவாயை அதிகரிக்கவும் உதவும் மத்திய அரசின் “உதய்” எனும் திட்டத்தைச் செயல்படுத்த மாநில அரசு முன் வரவில்லை.

இத்திட்டத்தைப் பின்பற்றும் மற்ற மாநிலங்கள் நல்ல பலனைப் பெற்றுள்ளன. மற்ற மாநிலங்களில் செயல்படுத்தியதன் மூலம் 1.80 இலட்சம் கோடி அளவுக்குப் பலன் கிடைத்துள்ளது.

ஆனால் தமிழக அரசுக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை என்று மத்திய அமைச்சர் ஜவடேகர் கூறியிருக்கிறார் என்று தெரிவித்திருந்தேன்.

இதற்குத் தான் அ.தி.மு.க. அமைச்சர்கள் இருவர், எனக்கு அந்தத் திட்டம் பற்றித் தெரியவில்லை என்றும், நான் குழப்பமான அறிக்கையை வெளியிட்டுள்ளேன் என்றும் எனக்கு “அர்ச்சனை” செய்திருக்கிறார்கள்.

தமிழக அரசு மீது குற்றஞ்சாட்டியது மத்திய அமைச்சர். அதை எடுத்துக்காட்டி வெளியிடப்பட்டது தான் எனது அறிக்கை. அது தவறா?

தமிழ்நாட்டு மக்களே, எப்படிப்பட்ட அமைச்சர்கள் தமிழ்நாட்டை கடந்த ஐந்தாண்டு காலம் ஆட்சி நடத்தியிருக்கிறார்கள் என்பதைத் தயவுசெய்து இப்போதாவது இப்படிப்பட்ட அறிக்கைகளிலிருந்தாவது புரிந்து கொள்ளுங்கள்.

அறிக்கை தந்த அமைச்சர்கள் அடுத்து எல்.ஈ.டி. பல்புகளைப் பற்றி விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இதைப் பற்றி மத்திய அமைச்சர் கூறும்போது, எல்.ஈ.டி. பல்புகளை மத்திய அரசு குறைந்த விலையில் வழங்க தயாராக இருந்த போதிலும், அதிக விலை கொடுத்து வெளி மார்க்கெட்டில் தமிழக அரசு வாங்குகிறது என்று சொல்லியிருக்கிறார்.

தமிழக அரசு அமைச்சர் பெருமக்களே, நான் விடுத்த அறிக்கையை தயவுசெய்து மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள்! அதிலே எங்கேயாவது நான் இந்தக் கேள்வியை எந்த இடத்திலாவது கேட்டிருக்கிறேனா என்றும் பாருங்கள்.

இவ்வாறு இந்தக் கருத்தினை மத்திய அமைச்சர் குற்றஞ்சாட்டியிருப்பதற்கு, அ.தி.மு.க. அரசின் பதில் என்ன என்று தான் நான் கேட்டிருக்கிறேன் என்பதை இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள்.

அ.தி.மு.க. அரசு மீது மத்திய அமைச்சர் சாட்டியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாத அ.தி.மு.க. அமைச்சர்கள், மத்திய அமைச்சர், 2ஜி பற்றியும், 1,76,000 கோடி ரூபாய் இழப்பு என மத்திய தணிக்கை துறை தெரிவித்துள்ளது, அதற்குப் பதில் என்ன என்பதை கருணாநிதி தெரிவிக்கட்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.

இதுகுறித்த வழக்கு டெல்லியில் நடந்து கொண்டிருப்பதையும், ஜெயலலிதாவைப் போல் வாய்தா வாங்காமல், பல்லாண்டுக் காலமாக விசாரணையை இழுத்தடிக்காமல், குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவர்கள் நீதி மன்றத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதையும், "மத்திய தணிக்கைத் துறை அறிக்கையின் அடிப்படையில் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுப்பது சட்டத்திற்குப் புறம்பானது" என்று இரண்டு நாட்களுக்கு முன்பு கூட கர்நாடக உயர் நீதி மன்றத்தில் தீர்ப்பு கூறியிருப்பதையும் கூடத் தெரிந்து கொள்ளாமல், அ.தி.மு.க. அமைச்சர்கள், முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் மத்திய அமைச்சர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லுமாறு கூறத் துணிவில்லாமல், அவரை எப்படியாவது திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக; அது பற்றி என்னிடம் விளக்கம் கேட்டிருப்பதைப் பார்க்கும்போது, "பாவம்! அந்த அ.தி.மு.க. அமைச்சர்கள்" என்று தான் சொல்லத் தோன்றுகிறது! என குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை