தேமுதிகவில் எழுந்த அதிருப்தி அலை: காரணம் யார்?

NEW INDIA NEWS  NEW INDIA NEWS
தேமுதிகவில் எழுந்த அதிருப்தி அலை: காரணம் யார்?

விஜயகாந்த் தலைமையிலான தேமுதிகவில் திடீரென்று எழுந்துள்ள அதிருப்தி அலையால் கட்சி இரண்டாக பிளவு படும் நிலைக்கு வந்துள்ளது.

அடுத்தடுத்த திருப்பங்களுடன் தமிழக தேர்தல் களம் மெல்ல சூடுபிடிக்க துவங்கியுள்ளது. முக்கிய அரசியல் கட்சிகள் கூட்டணிக்காக அழைப்பு விடுத்து காத்திருந்த நிலையில் வைகோ தலைமையிலான மக்கள் நலக் கூட்டணி தேர்தல் பரப்புரையை துவங்கி நான்கு கட்டங்களை முடித்துள்ளது.

இந்த நிலையில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக பல்வேறு ஊகாபோகங்களுக்கு இடையே மக்கள் நலக் கூட்டணியுடன் கைகோர்த்துக் கொண்டு தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியுள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 29 தொகுதிகளை கைப்பற்றி சட்டமன்றத்தில் பிரதான எதிர்கட்சியாக உருவெடுத்த தேமுதிக, தொடர்ந்து வந்த நாட்களில் அதிமுக உடனான உறவை முறித்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டது.

இதனையடுத்து ஜெயலலிதா தலைமையிலான அரசை எப்பாடு பட்டேனும் அகற்றியே தீருவேன் என்ற சபதத்துடன் தனது அரசியல் நகர்வுகளை முன்னெடுத்து வந்தார் விஜயகாந்த்.

தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதும் தேமுதிக கட்டாயம் திமுகவுடன் கூட்டணி அமைக்கும் அந்த கூட்டணி ஜெயலலிதா அரசை வீழ்த்தும் பலமான கூட்டணியாக அமையும் என பெருவாரியான அரசியல் நோக்கர்களால் கருதப்பட்டது.

இந்த கருத்தை பிரதிபலிக்கும் வகையில் பல முறை திமுக தலைவர் கருணாநிதியும் கூட்டணிக்கு விஜயகாந்த் வர வேண்டும் என பகிரங்கமாக விருப்பம் தெரிவித்து வந்தார்.

இந்த நிலையில் தேமுதிக திமுக இடையே அதிகாரபூர்வமற்ற பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியானது. ஒருபக்கம் மத்திய அமைச்சர் ஜவடேக்கர் இருமுறை விஜயகாந்தை சந்தித்து பாஜக கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார்.

திமுகவுடன் பேச்சு நடைபெற்று வருவதாக தேமுதிக வட்டாரத்தில் தகவல் பரவியதை அடுத்து அந்த கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏராளமானோர் விருப்பம் தெரிவித்து மனு அளித்து வந்தனர்.

திமுகவுடன் கூட்டணி என்றால் கட்டாயம் வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கையே அதற்கு காரணமாக சொல்லப்பட்டது. மேலும் விருப்பம் தெரிவித்து மனு அளித்தவர்களிடம் இருந்து பெரும்தொகையை வசூலித்ததாகவும் கூறப்பட்டது.

இந்த சூழலில் கூட்டணி குறித்த எந்த அழைப்புக்கும் நேரடியாக பதில் தராத விஜயகாந்த், காஞ்சிபுரத்தில் வைத்து நடைபெற்ற மாநாட்டில் தேமுதிக தனித்துப் போட்டி என்பதை அறிவித்தார்.

இந்த சலசலப்பு அடங்கும் முன்னர் கடந்த மாதம் 23-ஆம் திகதி கட்சியின் முக்கிய தலைவர்கள் எவரையும் கலந்தாலோசிக்காமல் தேமுதிக மக்கள் நலக் கூட்டணியுடன் தேர்தல் ஒப்பந்தம் அமைத்துள்ளதாக விஜயகாந்த் அறிவித்தார்.

இந்த முடிவு கட்சியினர் இடையே கடுத்த அதிருப்தியை ஏற்படுத்தியது. வேட்பாளர் பட்டியலை அறிவிக்க வேண்டும் நேர்காணலில் பங்கேற்றவர்கள் கட்சி தலைமை அலுவலகத்தில் ஒன்று கூட வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டதற்கும் எவரும் கட்டுப்படவில்லை என கூறப்படுகிறது.

விஜயகாந்தின் இந்த முடிவால் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் சிலர் திமுகவில் ஐக்கியமாக துவங்கினர். கூட்டணிக்கு ஒப்புக்கொள்ளாததால் திமுக தனது பழைய தந்திரங்களை பயன்படுத்தி தேமுதிகவை கரைப்பதாக பிரேமலதா விஜயகாந்த் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்த திமுக பொருளாளர் ஸ்டாலின், தேமுதிகவை கரைக்க தேவையில்லை, அதுவாகவே கரையும் என பதில் அளித்தார்.

தனித்துப் போட்டி என்ற முடிவுக்கே எதிர்ப்பு தெரிவித்திருந்த கட்சியின் முக்கிய தலைவர்கள் சிலர் விஜயகாந்தை நேரில் சந்தித்து தங்களின் முடிவு குறித்து தெரிவித்தனர்.

ஆனால் மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து தேர்தலை சந்திக்கும் முடிவு இறுதியானது அல்ல எனவும் இன்னும் கூட்டணி வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் விஜயகாந்த் எடுத்த முடிவு இறுதியானதுதான் என்பதை உணர்ந்த அவரது கட்சியின் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் 10 மாவட்டச்செயலாளர்கள் அடங்கிய அணி ஒன்று மக்கள் நலக் கூட்டணியுடனான தேர்தல் ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

பொதுவாக தேர்தல் காலங்களில் கட்சிக்கு சாதகமான முடிவை எடுப்பதில் கோட்டை விடுபவர் வைகோ என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து. கடந்த கால அரசியல் நகர்வுகளை ஆய்வு செய்தால் அது புலப்படும்.

அந்த வரிசையில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசு தேர்தலில் வெற்றி வாய்ப்பு உள்ள கூட்டணியில் இணையாமல் தொடர் தோல்விகளை சந்தித்து வந்தார். தற்போது விஜயகாந்தும் அந்த வரிசையில் இணைந்துள்ளதாக கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.

திமுகவுடன் கூட்டணி அமைத்தால் மட்டுமே விஜயகாந்தால் தனது பிரதான எதிரியான ஜெயலலிதாவை வீழ்த்த முடியும் என அரசியல் நோக்கர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், மக்கள் நலக் கூட்டணியுடன் தேர்தல் களம் காணும் விஜயகாந்தின் முடிவு பலருக்கு வியப்பை ஏற்படுத்தியது.

மூலக்கதை