6 வயது சிறுவனை பள்ளியை விட்டு வெளியேற்ற முடிவு! ஓர் அப்பாவித் தாயின் போராட்டம் இறுதியில் தோற்றது!

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
6 வயது சிறுவனை பள்ளியை விட்டு வெளியேற்ற முடிவு! ஓர் அப்பாவித் தாயின் போராட்டம் இறுதியில் தோற்றது!

கொழும்பு, மார்ச்.3-

எய்ட்ஸ் நோயாளி எனக் கிளப்பி விடப்பட்ட வதந்தியின் விளைவாக, சக பள்ளி மாணவர்களின் பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்ட 6 வயது சிறுவனும் அவனுடைய தாயாரும் நடத்திய போராட்டத்திற்கு கடைசி வரையில் பலன் கிடைக்கவேயில்லை. மாணவர்களின் பெற்றோர்கள் தொடர்ந்து எதிர்த்ததால், அந்தச் சிறுவனை, வேறு பள்ளிக்கு மாற்ற முடிவு செய்திருப்பதாக மாநில கல்வியமைச்சர் அறிவித்திருக்கிறார்.

இலங்கையில் குருனெகெல என்ற இடத்திலுள்ள பள்ளி ஒன்றிலிருந்து அந்த 6 வயது சிறுவனை வெளியேற்ற வேண்டும் என்று சக மாணவர்களின் பெற்றோர்கள் கோரி வந்தனர். மேலும் அந்தச் சிறுவனை வெளியேற்றாத வரை தங்களுடைய பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று கூறி, பள்ளியை அவர்கள் புறக்கணித்து வந்தனர்.அந்த 6 வயது மாணவனுக்கு ‘எய்ட்ஸ்’ நோய் இருக்கிறது என்று கிளப்பி விடப்பட்ட புரளியினால், ஏற்பட்ட விளைவுதான் இது என்பது குறிப்பிடத்தக்கது.

“என் பிள்ளைக்கு எய்ட்ஸ் இல்லை. இதைச் சொன்னாலும், இந்த மக்கள் நம்ப மறுக்கிறார்கள். அதற்காக, என் பிள்ளைக்கும் எனக்கும் எய்ட்ஸ் இல்லை என்பதற்கான மருத்துவச் சான்றிதழைக் கூட கைவசம் வைத்திருக்கிறேன்” என்று அந்தச் சிறுவனின் அப்பாவித் தாய் தொடர்ந்து சில தினங்களாக மன்றாடி வந்தார்.

“என் கணவர் இறந்து போனார். அவர் எய்ட்ஸ் நோயினால் இறந்தார் என்று சிலர் தவறாகப் பலி சுமத்தினர் இதனால் நானும் என் மகனும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

ஏற்கெனவே, வேறு பள்ளி ஒன்றிலும் இப்படித் தான் என் மகனை எல்லோரும் புறக்கணித்தனர். அந்தப் பள்ளியை விட்டு நாங்கள் வெளியேற நேர்ந்தது என்று சாந்தினி டி சோய்சா என்ற அந்தத் தாய் குறிப்பிட்டார்.

சில வாரங்களுக்கு முன்புதான் குருனெகெல பள்ல்யில் என் மகனைச் சேர்த்தேன். இங்கும் அதே போன்ற பிரச்சனை உருவாகி விட்டது என்றார் அவர்.

இப்பள்ளியிலுள்ள 186 பிள்ளைகளையும் அவர்களுடைய பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தி விட்டனர். அதோடு, யாரும் தங்களின் பிள்ளைகளை இந்தப் பள்ளிக்கு அனுப்பக்கூடாது என்று வலியுறுத்தும் எச்சரிக்கை அறிவிப்புப் பலகை ஒன்றையும் அப்பள்ளி அருகே நிலைநாட்டியுள்ளனர்.

இந்நிலையில், இங்கு பெற்றோர்களுடன் கல்வி அதிகாரிகள் சந்திப்பு ஒன்றை நடத்தினர். இந்தச் சந்திப்பில் மாநில கல்வியமைச்சர் சந்தியா ராஜபக்சேவும் கலந்து கொண்டார்.

அந்தச் சிறுவனை, இந்தப் பள்ளியிலிருந்து வெளியேற்றுவது என முடிவு செய்யப்பட்டிருக்கிறது அமைச்சர் அறிவித்தபோது மாணவர்களின் பெற்றோர்கள் பெரும் ஆரவாரம் செய்து கரவொலி எழுப்பினர்.

சம்பந்தப்பட்ட 6 வயது சிறுவனுக்கு இது குறித்து சரியாக எதும் புரியாததால், எப்போதும் போலவே இருந்தான். அவனுடைய தாயார் மன வேதனையில் அழுதார். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மனித உரிமை அமைப்பினரும் சுகாதார அதிகாரிகளும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், அந்த எதிர்ப்பு நிராகரிக்கப்பட்டது.

அந்தச் சிறுவனுக்கு வேறு பள்ளியில் இடம் பெற்றுத் தரப்படும் என்று அமைச்சர் சந்தியா ராஜபக்சே சொன்னார்.

பள்ளியை இதுவரை புறக்கணித்து வந்த பெற்றோர்கள் திரும்பவும் பிள்ளைகளை அனுப்பலாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வேறொரு பள்ளியில் இடம் வாங்கித் தருவதாக அமைச்சர் வாக்குறுதி அளித்திருக்கிறார் என்றும் அந்த வாக்குறுதி நிறைவேறுமா என்று நான் பொறுத்திருந்து பார்க்கப் போகிறேன் என்றும் சிறுவனின் தாயார் சாந்தினி சோய்சா குறிப்பிட்டார்.

“எய்ட்ஸ் என்ற வதந்தியால், நானும் என் பிள்ளையும் படாத அவமானமே இல்லை. பிள்ளையின் படிப்புக் கெடக்கூடாது என்று போராடுகிறேன். என் மகனுடன் குருனெகெல பள்ளியில் படித்த சக மாணவர்கள் எந்தக் குரோதமும் இல்லாமல், என் மகனுடன் சேர்ந்து விளையாடுவதைப் பார்த்து இருக்கிறேன். ஆனால், என் மகனுடன் சேரக்கூடாது தங்களின் பிள்ளைகளைக் கண்டிக்கிற பெற்றோர்களையும் பார்த்திருக்கிறேன். இனி அடுத்தடுத்து எத்தனை தொல்லைகள் வரப்போகிறதோ..,” என வேதனையோடு குறிப்பிட்டார் சாந்தினி சோய்சா.

 

 

மூலக்கதை