பீஃபா தலைவர் பதவிக்கான தேர்தல்: வெற்றி யார் பக்கம்? சல்மான் - ஜியானி இடையே கடும் போட்டி!

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
பீஃபா தலைவர் பதவிக்கான தேர்தல்: வெற்றி யார் பக்கம்? சல்மான்  ஜியானி இடையே கடும் போட்டி!

ஜுரிச், பிப்.26-

பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களால் கலகலத்துப் போன பீஃபா எனப்படும் அனைத்துலக கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கான இன்றைய தேர்தலில் இருவர் முன்னணி வகிப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

மொத்தம் 5 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஐரோப்பிய கால்பந்து யூனியனின் செயலாளர் ஜியானி இன்ஃபான்டினோ (வயது 45) மற்றும் பஹ்ரின் அரச குடும்பத்தைச் சேர்ந்தவரும் ஆசிய கால்பந்து சம்மேளத்தின் தலைவருமான ஷேக் சல்மான் ஆகிய இருவருக்கும் இடையே போட்டி மிகக் கடுமையாகி இருப்பதாக கருதப்படுகிறது.எனினும், இந்தத் தேர்தல் பல கட்டங்களாக நடத்தப்படவிருக்கிறது.

இவ்விருவரை அடுத்து, ஜோர்டானிய இளவரசரும் அந்நாட்டின் கால்பந்து சங்கத் தலைவருமான இளவரசர் அலி பின் அல் ஹுசைன், முன்னாள் பீஃபா செயலாளரான பிரான்சைச் சேர்ந்த ஜெரோம் சேம்பைன், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்  டோக்கியோ செக்ஸ்வெல் ஆகியோர் பீஃபா தலைவர் பதவிக்குப் போட்டியிடுகின்றனர்.

மொத்தம் 207வாக்குகள் உள்ளன. இந்த வாக்காளர்கள் அனைவரும் ஜுரிச்சில் ஒன்று திரண்டுள்ளனர்.

தங்கள் தரப்பு குறைந்தபட்சம் 105 வாக்குகளைப் பெறும் என்று ஷேக் சல்மான் ஆதரவாளர்கள் கூறினர். அதேவேளையில், தாங்கள் 100க்கும் கூடுதலான வாக்குகளைப் பெறுவோம் என்று ஜியானி இன்ஃபான்டினோ ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களின் கூற்றுப்படியே வாக்குகள் கிடைத்தாலும் அது ஒரே சுற்றில் பீஃபா தலைவர் பதவியை வெல்வதற்குப் போதுமான பெரும்பான்மை வாக்குகளைக் கொண்டிருக்காது என்றே கருதப்படுகிறது.

மேலும், இதர மூன்று வேட்பாளர்களுக்கும் போதுமான ஆதரவு இருக்காது என்று கணிக்கப்பட்டாலும், அவர்களால் வாக்குகள் சிதறும் என்பதால் அடுத்தடுத்த சுற்று வாக்கெடுப்புகள் நடத்தப்படும் வாய்ப்பே அதிகம் உள்ளது. 

இருப்பினும் இந்தச் சுற்றி அதிக வாக்குகலைப் பெறுகின்ற ஒருவர், அடுத்தடுத்த சுற்று வாக்குப் பதிவினை நடத்தும் அதிகாரத்தைப் பெறுவார் என்பதால் அது இறுதி வெற்றிக்கு வித்திடும் எனக் கருதப்படுகிறது. 

மூலக்கதை