அதிபர் வேட்பாளர்: ஹிலாரி அபார முன்னணி! கோடீஸ்வரர் டிரம்ப் மறுபுறம் முன்னேற்றம்!!

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
அதிபர் வேட்பாளர்: ஹிலாரி அபார முன்னணி! கோடீஸ்வரர் டிரம்ப் மறுபுறம் முன்னேற்றம்!!

நியூயார்க், மார்ச் 2-

அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தலில், உச்சக்கட்டமாக  நேற்று 12 மாநிலங்களில் நடந்த வாக்கெடுப்பில், ஜனநாயகக் கட்சிக்கான வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் 7 மாநிலங்களில் வாகை சூடியிருப்பதாக முன்னோட்டக் கருத்துக் கணிப்பில் இருந்து தெரிய வந்துள்ளது.

முன்னாள் அமெரிக்க அதிபர் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன்,  தற்போது ஜியார்ஜியா, விர்ஜீனியா, அலபாமா, டென்னிஸீ, டெக்சாஸ், மசாசூசெட்ஸ், மற்றும் தம்முடைய சொந்த மாநிலமான அர்கான்சாஸ் ஆகியவற்றை கைப்பற்றியிருப்பதாக தெரியவருகிறது.

அதேவேளையில், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் களத்தில் ஹிலாரியுடன் மோதும் பெர்னி சாண்டர்ஸ், நான்கு மாநிலங்களில் வெல்வார் என முன்னோட்டக் கணிப்புக் கூறுகிறது. ஆக்லஹாமா, வெர்மோண்ட், மின்னெசோட்டா, கொலராடோ ஆகியவற்றை பெர்னி சாண்டர்ஸ் கைப்பற்றுகிறார்.

ஏற்கெனவெ நடந்து முடிந்துள்ள 4 மாநிலத் தேர்தல்களில் மூன்றைக் கைப்பற்றியுள்ள ஹிலாரி, இதுவரை 548 பேராளர் வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கும் வேளையில், அவரை எதிர்த்துக் களத்தில் போராடி வரும் சாண்டர்ஸ், 87 பேராளர் வாக்குகளை இதுவரை தக்கவைத்துக் கொண்டுள்ளார். ஜனநாயகக் கட்சியின் அதிபர் தேர்தல் வேட்பாளராக தேர்வு பெறவேண்டுமானால், 2,383 பேராளர் வாக்குகளை ஒருவர் பெறவேண்டும்.

அமெரிக்காவின் முதல் பெண் அதிராகும் வாய்ப்பை எதிர்கொண்டுள்ள ஹிலாரி, இன்னமும் சாண்டர்சிடமிருந்து கடும் போட்டியைச் சந்தித்து வருகிறார்.

இதனிடையே குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளர் தேர்தல் களத்தில் முன்னணி வகிக்கும் சர்ச்சைக்குரிய கோட்டீஸ்வரர் டொனால்டு டிரம்ப், நேற்று வாக்குப் பதிவு நடந்த 12 மாநிலங்களில், குறைந்தது 6 மாநிலங்களில் வெல்வார் என முன்னோட்ட கணிப்புகள் தெளிவுபடுத்தியுள்ளன.

அவருக்குப் போட்டியாக விளங்கும் வேட்பாளர்களில் ஒருவரான செனட்டர் டெட் குரூஷ், இரண்டு மாநிலங்களிலும் மற்றொரு வேட்பாளரான செனட்டர் மார்க்கோ ருபியோ ஒரு மாநிலத்திலும் வெற்றிபெறுவார் எனத் தெரிய வந்துள்ளது.

இந்த முன்னோட்ட வெற்றி தொடர்பாக கருத்துரைத்த டொனால்டு டிரம்ப், “வேட்பாளர் தேர்தலில் என்னை எதிர்க்கிறவர்களையெல்லாம் முடித்துக் கட்டி விட்டு, அடுத்து ஒரு ஆளுக்கு குறிவைக்கப் போவதாகச்  சொன்னார். நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் அதிபர் பதவிக்கான தேர்தலில் என்னை எதிர்க்கவிருக்கும் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்துவேன் என்றார் அவர்.

மூலக்கதை