ஆசியக் கிண்ண கிரிக்கெட்: இலங்கை வீழ்ந்தது! இந்தியாவுக்கு வெற்றி மேல் வெற்றி!

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
ஆசியக் கிண்ண கிரிக்கெட்: இலங்கை வீழ்ந்தது! இந்தியாவுக்கு வெற்றி மேல் வெற்றி!

 மிர்பூர்,மார்ச். 2-

ஆசிய கிண்ண டி-20 கிரிக்கெட் லீக் போட்டியில் இலங்கை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றியைக் குவித்தது.

தொடர்ந்து 3 போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. ஆசிய கிண்ண 7ஆவது லீக் போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதின.

முதலில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து இலங்கை அணியின் சண்டிமால்-தில்ஷன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

ஆரம்பத்தில் இந்தியாவின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் இலங்கை வீர்ர்கள் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். சிறிய இடைவெளிக்குள் விக்கெட்டுகளை இழந்தாலும், இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக அஸ்வின், பூம்ரா, பாண்ட்யா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இலங்கை அணியில் அதிகபட்சமாக கபுகேத்ரா 30 ரன்கள், ஸ்ரீவர்த்தன 22 ரன்கள், தில்ஷன் 18 ரன்களை எடுத்தனர். இதனையடுத்து 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணியில், தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவா - ரோஹித் சர்மா களமிறங்கினர். தொடக்க வீரர்கள் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் ரசிகர்ளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

இந்நிலையில், விராத் கோலியும் யுவராஜ் சிங்கும் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி, இந்தியாவை வெற்றிப் பாதைக்கு வழி நடத்தினர்.

இதனால், ஆட்டத்தின் இறுதியில் இந்திய அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. 

இந்திய அணியில் அதிகபட்சமாக கோலி 56 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார், யுவராஜ் 35 ரன்களும், ரெய்னா 25 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

மூலக்கதை