ஊரே திரண்டு புறக்கணிக்கிறது 6 வயதுப் பிள்ளையை! வேதனையில் உழலும் ஒரு தாயின் கண்ணீர்க் கதை!!

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
ஊரே திரண்டு புறக்கணிக்கிறது 6 வயதுப் பிள்ளையை! வேதனையில் உழலும் ஒரு தாயின் கண்ணீர்க் கதை!!

கொழும்பு, பிப்.1-

“எதுக்காக என் கூட்டாளிகள் எல்லோரும் என்னுடன் விளையாடிக் கொண்டிருந்ததை நிறுத்திவிட்டனர்? ஏன் எல்லோரையும் அவர்களின் அப்பா, அம்மா கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு பள்ளிக்கூடத்தை விட்டுப் வீட்டுக்குப் போகிறார்கள்?” என்று என்னிடம் ஓடி வந்து கேட்கும் இந்த 6 வயதுச் சிறுவனுக்கு நான் என்ன பதில் சொல்வது? என்று கேட்கிறார் அந்தப் பள்ளியின் பணிபுரியும் ஓர் ஆசிரியை.

அந்த மாணவனுக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்று அவருக்குத் தெரியவில்லை. அந்த ஆசிரியை மிகுந்த வேதனையுடன் காணப்பட்டார்.

அன்றைக்கு அந்த மாணவன் பள்ளிக்கு வந்த பின்னர் சக மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். இதர பிள்ளைகளும் அவனுடன் விளையாடிக் கொண்டுதான் இருந்தனர்.

திடுதிப்பென்று அந்தப் பள்ளிப் பிள்ளைகளின் பெற்றோர்கள் ஒரே கும்பலாக வந்து தங்களின் பிள்ளைகளை இழுத்துக் கொண்டு சென்றதால், அந்த மாணவன் மட்டும் பயந்து போய், ஆசிரியையிடம் ஓடிப் போய் ஏன் எல்லோரும் போகிறார்கள் என்று கேட்ட போது ஆசிரியைக்கு விளக்கம் சொல்லத் தெரியவில்லை.

இரண்டு மூன்று தினங்களாக அந்தக் கிராமத்துப் பள்ளி மூடப்பட்டுக் கிடக்கிறது இரண்டு போலீஸ்காரர்கள் வெளி யில் நின்று கொண்டிருக்கிறார்கள். ஒரேயொரு தாய் மட்டும் தனது 6 வயது மகனுடன் பள்ளியின் வாசலில் உட்கார்ந்து இருக்கிறார். மேற்கு இலங்கையிலுள்ள குருனேகெல என்ற இடத்தில் இந்தப் பள்ளி உள்ளது.

அந்த 6 வயது மாணவனுக்கு ‘எய்ட்ஸ்’ நோய் இருக்கிறது என்று கிளப்பி விடப்பட்ட புரளியினால், ஏற்பட்ட விளைவுதான் இது.

“என் பிள்ளைக்கு அப்படி எதுவுமில்லை. நான் என்ன சொன்னாலும், இந்த மக்கள் நம்ப மறுக்கிறார்கள். அதற்காக, நான் என் பிள்ளைக்கும் எனக்கும் கூட எய்ட்ஸ் இல்லை என்பதற்கான மருத்துவச் சான்றிதழைக் கூட கைவசம் வைத்திருக்கிறேன்” என்று அந்தத் தாய் கண்ணீருடன் கூறுகிறார்.

“என் கணவர் இறந்து போனதற்கு எய்ட்ஸ் தான் காரணம் என்று தவறாகச் சிலர் பலி சுமத்தியதால் என் மகனுக்கு இந்தக் கதி ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே வேறு பள்ளிகளிலும் இப்படித் தான் என் மகனை எல்லோரும் புறக்கணித்தனர். அதனால், அந்தப் பள்ளிகளை விட்டு நாங்கள் வெளியேற நேர்ந்தது என்று சாந்தினி டி சோய்சா என்ற அந்தத் தாய் குறிப்பிட்டார்.

“நான் இதை ஆட்சேபித்துப் போராடிப் பார்த்தேன். ஒன்றும் நடக்கவில்லை. நான் வேலைக்குச் செல்லும் இடங்களில் கூட இதே வதந்தி பரவி அங்கும் எனக்குப் பிரச்சனைக்கு மேல் பிரச்சனை தான். இந்தத் தகவல் பத்திரிக்கையில் வெளியானதால், மனித உரிமை இயக்க அதிகாரிகள், மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் ஆகியோர் உதவ முன்வந்தனர்” என்று சாந்தினி சோய்சா சொன்னார்.

“கடந்த வாரம் தான் இந்தக் கிராமத்துப் பள்ளியில் என் மகனை சேர்க்க அவர்கள் உதவினர். அதற்குள் இங்கேயும் அதே செய்தி பரவி, என் பிள்ளையின் படிப்புக்கு தொல்லை வந்து விட்டது. எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் மற்ற மாணவர்களின் பெற்றோர்கள் கேட்கவே மாட்டேன் என்கிறார்கள்.

“எங்களுடைய மருத்துவ சான்றிதழைக் கூட காட்டினோம். ஆனால் பிள்ளையைக் கூட்டிக் கொண்டு இந்தப் பள்ளிக்கூடத்தை விட்டே போ என்று அவர்கள் விரட்டுகிறார்கள் . நான் முடியவே முடியாது என்று மறுத்து விட்டேன்.

“என் பிள்ளை பள்ளிக்கூடத்திற்கு வந்தான். சக மாணவர்களுடன் அவன் விளையாடிக் கொண்டிருந்தான். திடிரென கூட்டமாக வந்த பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு போய் விட்டார்கள். பள்ளி சில தினங்களாக மூடிக்கிடக்கிறது. ஆனால், நானும் என் பிள்ளையும் பள்ளிக்கூடத்திற்கு தினமும் வந்து கொண்டுதான் இருக்கிறோம்” என்றார் சாந்தினி.

பரிதாபப் படுவதைத் தவிர, பள்ளி ஆசிரியர்களால் எதுவும் செய்ய இயலவில்லை. இந்தப் பள்ளிக்கூடத்திற்கு பிள்ளைகளை அனுப்பாதீர்கள் என்று எச்சரிக்கும் அறிவிப்புப் பலகையைக் கூட இவர்கள் பள்ளிக்கு அருகில் வைத்திருக்கிறார்கள். 

மற்ற பிள்ளைகள், அந்தச் சிறுவனுடன் சகஜமாகவே விளையாடுகின்றனர். ஆனால், இனிமேல் எப்படியோ தெரியாது. தங்களின் பிள்ளைகளை இழுத்துக் கொண்டு சென்ற பெற்றோர்கள் பிள்ளைகளின் மனதையும் கெடுத்திருக்கக் கூடும் என்று ஆசிரியை சொன்னார். 

மொத்தமுள்ள 186 பிள்ளைகளும் பள்ளிக்கு வருவது நின்றுவிட்டது. பெற்றோர்களுக்கு விளக்கமாக எடுத்துரைக்க கூட்டம் ஒன்றை நடத்துவதற்கு கல்வித் துறை திட்டமிட்டிருக்கிறது என்று வட்டார கல்வித் துறை இயக்குனர் சமான் விஜேசேகரா தெரிவித்தார்

மூலக்கதை