காதில் பூ சுற்றுகின்றார் ஜெயலலிதா

NEW INDIA NEWS  NEW INDIA NEWS
காதில் பூ சுற்றுகின்றார் ஜெயலலிதா

ஆட்சி முடியப் போகும் நேரத்தில் முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டியிருப்பது புரியாத மக்கள் காதுகளிலே பூ சுற்றுகின்ற வேலைதான் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்‌கையில்,

ஆட்சி முடியப் போகிற நேரத்தில் முதல்வர் ஜெயலலிதா ஏழு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறாரே?

புரியாத மக்கள் காதுகளிலே பூ சுற்றுகின்ற வேலைதான்! ஆட்சி முடிய இன்னும் இரண்டு மூன்று மாதங்களே இருக்கின்ற நிலையில் பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட வரிப் பணத்தைக் கொண்டு, தங்களுக்கு வேண்டிய ஏடுகளுக்கு ஒரு பக்கம், இரண்டு பக்கம் என்று முழுப்பக்க விளம்பரங்கள் செய்து, சாலையிலே இரண்டு பக்கங்களிலும் “ஃப்ளக்ஸ்” தட்டிகளை மிகப் பெரிய அளவிலே வைத்து மக்களுக்கு அளப்பரிய இடைஞ்சல்களை விளைவித்து, ஏழு திட்டங்களுக்கு காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டியிருக்கிறார்.

முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி, 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய்க்கு முதலீடு வரப்போவதாக “கதை” விட்டது என்னவாயிற்று என்று எதிர்க்கட்சிகள் எல்லாம் கேட்கின்றனவே, அவர்கள் வாயை அடைப்பதற்காக, 7 திட்டங்களுக்கு அடிக்கல் என்கிறார்களே தவிர வேறொன்றும் அல்ல!

முக்கிய சம்பவங்களைப் பற்றி விசாரிக்க, விசாரணைக் கமிஷன்களை அமைக்க மறுக்கும், அ.தி.மு.க. அரசு, அமைத்த விசாரணைக் கமிஷன்களிடமிருந்து அறிக்கை பெறுவதிலும் சுணக்கம் காட்டுகிறதே?

உண்மைதான்; விரைவில் தேர்தல் வரவிருக்கிறது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சி ஐந்தாண்டுகளுக்கு முன் நியமித்த புதிய தலைமைச் செயலகம் குறித்த விசாரணைக் கமிஷனின் அறிக்கை இன்னமும் தாக்கல் செய்யப்படவில்லை. கால நீடிப்பு வழங்கிக் கொண்டே இருக்கிறார்கள். அண்மையில்கூட அந்தக் கமிஷனுக்கு மூன்று மாத கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அது போலவே, தர்மபுரி மாவட்டத்தில் மறைந்த தலித் இளைஞன் இளவரசனின் மரணம் குறித்து 2013-ம் ஆண்டு அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷனின் முடிவும் வெளிவரவில்லை. அந்தக் கமிஷனுக்கும் அ.தி.மு.க. அரசு ஆறு மாதங்கள் நீடிப்பு வழங்கியிருக்கின்றது. இவ்வாறு விசாரணைக் கமிஷனுக்கு கால நீடிப்பு கொடுப்பதால், மக்களின் வரிப் பணம்தான் வீணாவதாகச் செய்திகள் வந்துள்ளன.

தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்று “துக்ளக்” “சோ” பேசியது பற்றி?

மதுவகைகள் தயாரிக்கும் “மிடாஸ்” நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் வேறு எப்படிப் பேசுவார்?

திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில் 6,376 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனல் மின் திட்டத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டியதாகச் செய்தி வந்திருக்கிறதே?

110வது விதியின் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா பேரவையில் பல்வேறு மின்சாரத் திட்டங்களை அறிவித்தபோது, 2015-ம் ஆண்டு இத்திட்டம் உற்பத்தியைத் தொடங்கும் என்று கூறினார். ஆனால் 2016-ம் ஆண்டு தொடங்கிய பிறகும், அந்தத் திட்டம் உற்பத்தி தொடங்கவில்லை. குறிப்பாக 29-3-2012 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா 110வது விதியின்கீழ் படித்த நீண்ட அறிக்கையில், “660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் அனல் மின் விரிவாக்கத் திட்டம் என்னும் ஒரு புதிய திட்டத்தைச் செயல்படுத்த எனது தலைமையிலான அரசு தற்போது முடிவு செய்துள்ளது என்பதை இந்தப் பேரவைக்குத் தெரிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

சுமார் 3,960 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவக்கப்படும் இந்த அனல் மின் திட்டம் 2015-ம் ஆண்டு இறுதிக்குள் தனது உற்பத்தியைத் தொடங்கும்” என்றார். இந்தத் திட்டத்தின் 15-12-2014 நிலை என்ன தெரியுமா? “இத்திட்டத்திற்கான ஆரம்ப கட்ட கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இத்திட்டம் 2017-2018-ம் ஆண்டில் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்பதுதான்! எப்படி அறிவிப்பு?

எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழாவினை கட்சி அலுவலகத்தோடு முடித்து விட்டாரே ஜெயலலிதா?

எம்.ஜி.ஆர். பற்றி ஜெயலலிதா சேலம் கண்ணன் மூலம் ராஜீவ் காந்திக்கு கைப்பட எழுதிய கடிதத்தில் என்னென்ன குறிப்பிட்டார், எம்.ஜி.ஆர். மறைவதற்கு முன் ஜெயலலிதா பற்றி என்ன கருத்துகளை வெளியிட்டார் என்பதையெல்லாம் நன்கு அறிந்து வைத்திருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு, எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவினை கட்சி அலுவலகத்தோடு முடித்ததில் ஆச்சரியம் இருக்காது.

ஆண்டுதோறும் நடைபெறும் திருவள்ளுவர் தின விழாவுக்கும், ஒன்பது தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கும் விழாவுக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா வரவில்லையே?

“அந்தஸ்து”க்கு, அந்த விழாவிலே கலந்து கொள்வதை மரியாதைக் குறைவாகக் கருதியிருக்கலாம். காணொலிக் காட்சி வாயிலாகக் கலந்துகொள்ள நினைத்திருக்கலாம். அதிகாரிகள் அதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறிவிட்டார்களோ என்னவோ? இந்த இலட்சணத்தில்தான் இவர்கள் ஆட்சியில் தமிழுக்காக பாடுபடுகிறார்களாம்!

தமிழகத்திலே உள்ள 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டுமென்று ஜெயலலிதா அன்புக் கட்டளை விடுத்திருக்கிறாரே?

அதுவும் “கட்டளை”தானா? “வேண்டுகோள்” கிடையாதா? போகட்டும்! 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றுவிட்டால், பேரவையே அ.தி.மு.க. பேரவையாகி, சட்டப்பேரவையில் கேள்வி கேட்க யாரும் இருக்க மாட்டார்கள் அல்லவா? ஜனநாயகமும் விடை பெற்றுச் சென்றுவிடும் அல்லவா? பின்னர் எல்லா நேரங்களிலும் பாராட்டு மழையிலேயே நனைந்து மகிழலாம்! எதிர்க்கட்சிகள் இருக்கும்போது மட்டும் என்ன? எதிர்த்துப் பேசவா முடிகிறது? எதிர்க்கட்சிகளை கூண்டோடு வெளியேற்றி விட்டு அல்லவா பேரவை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், அவர் தலைமை ஏற்ற நாளில் இருந்து, வரலாற்றுச் சிறப்புமிக்க எண்ணற்ற வெற்றிகளைப் பெற்றுத் தந்திருப்பதாகக் கூறுகிறாரே?

அவருக்கு முன்பு அந்தக் கட்சிக்குத் தலைமை ஏற்றிருந்த எம்.ஜி.ஆர். காலத்தில் வெற்றிகளைப் பெற்றுத் தரவில்லை என்பதையும், இவர்தான் வெற்றிகளைப் பெற்றுத் தந்திருப்பதாகவும் மறைமுகமாகக் குறிப்பிடுகிறார் போலும்!

மூலக்கதை