இ.தொ.கா மகளிர் பிரிவு நடத்தும் சர்வதேச மகளிர் தினம் மார்ச் 13 ஆம் திகதி தலவாக்கலையில் இடம்பெறும்

கதிரவன்  கதிரவன்
இ.தொ.கா மகளிர் பிரிவு நடத்தும் சர்வதேச மகளிர் தினம் மார்ச் 13 ஆம் திகதி தலவாக்கலையில் இடம்பெறும்

இ.தொ.காவின் சக்தி படைத்த பிரிவில் மகளிர் அணியும் ஒன்று அந்த வகையில் உழைக்கும் வர்க்கமாக இருக்கும் பெருந்தோட்டப்பெண்களுக்கு நியாயமான சம்பள விடயத்தை வலியுறுத்தும் வகையிலும் அரசியலில் அவர்களுக்கான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் வகையில் “ஆண்களும் பெண்களும் சமமானவர்கள்” என்ற தொனிப்பொருளில் இம்முறை இ.தொ.கா மகளிர் தினத்தை  அனுஷ்டிக்க உள்ளது என இ.தொ.காவின் உபதலைவரும் முன்னாள் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சருமான திருமதி அனுஷா சிவராஜா தெரிவித்தார்.

இ.தொ.காவின் மகளிர் தினம் குறித்து ஊடகவியலாளர்களுக்கு தெளிவு படுத்தும் சந்திப்பொன்று (28.01.2016) அன்று வியாழக்கிழமை கொட்டகலை காங்கிரஸ் தொழில்நுட்ப கட்டிடத்தில் இடம்பெற்றபோது அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றும் போது இ.தொ.காவானது மலையக மக்களுக்கு பல உரிமைகளை பெற்றுக்கொடுத்த அமைப்பு அந்த வகையில் அதன் பின்னணியில் உழைக்கும் வர்க்கமான பெண்கள் சக்தி மிக்கவர்களாக இருக்கின்றனர். அதை அடிப்படையாகக்கொண்டு எதிர்வரும் மார்ச் 8 ஆம் திகதி உலகெங்கும் அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இ.தொ.கா மகளிர் பிரிவானது மார்ச் 13 ஆம் திகதி தலவாக்கலையில் பிரமாண்டமான மகளிர் தினத்தை கொண்டாடவுள்ளது.

இதில் பெருந்தோட்டப்பகுதியில் கணிசமான உழைப்பு பங்களிப்பை வழங்கும் பெண்களுக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய சம்பளத்தை வலியுறுத்துவதோடு அரசியலில் அவர்களின் பங்கேற்பையும் நாம் உறுதி செய்யவுள்ளோம். ஏற்கனவே இ.தொ.காவின் மகளிர் பிரிவை சேர்ந்தவர்கள் உள்ளூராட்சி சபைகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கின்றனர். நான் மாகாண சபையின் அமைச்சராக பணியாற்றியிருக்கிறேன்.

பாராளுமன்ற வேட்பாளராக களமிறங்கி கணிசமான வாக்குகளைப்பெற்றேன். இப்படியாக இ.தொ.காவானது பெண்களுக்கான உரிமைகளைப்பெற்றுக்கொடுத்தது போன்று அவர்களின் அரசியல் பிரவேசத்திற்கும் வழிவகுத்துள்ளது. ஆகவே அதை தொடர்ந்தும் முன்னெடுக்கும் வகையில் நாம் இம்முறை மகளிர் தினத்தை ஏற்பாடு செய்துள்ளோம்.

கட்சி,தொழிற்சங்க பேதங்களை கடந்து மலையக பெருந்தோட்ட வாழ் பெண்களுக்கு  இ.தொ.கா ஆற்றியுள்ள சேவைகளை கணக்கிட முடியாது ஆகவே எமது உரிமைகளை நாமே வென்றெடுக்க ஒருமைப்பாடு,கட்டுக்கோப்பு அவசியம். அந்த வகையில் இந்த நிகழ்வில் அனைவரும் கலந்து சிறப்பிக்க வேண்டும் என்பதே எமது எதிர்ப்பார்ப்பு என்றார்.

2016-01-28

மூலக்கதை