நல்லாட்சி அரசாங்கத்துக்கு அழுத்தங்களை கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் நாம் இருக்கின்றோம் -நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்

கதிரவன்  கதிரவன்
நல்லாட்சி அரசாங்கத்துக்கு அழுத்தங்களை கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் நாம் இருக்கின்றோம் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்

தமிழ் அரசியல் கைதிகளை சந்திப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோர் இன்று (26.01.2016) மகசீன் சிறைச்சாலைக்கு சென்றிருந்தனர். இங்கு கைதிகளை சந்தித்த ஞா.ஸ்ரீநேசன் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவிக்கையில்..

இன்று இச்சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகள், நல்லாட்சி அரசாங்கம் என்று சொல்லப்படுகின்ற இவ் அரசாங்கம் தமக்கு அளித்த உத்தரவாதங்களுக்கு ஏற்ப செயல்படவில்லை என்றும் வார்த்தை ரீதியாக வெளிப்படுத்தும் விடயங்களை செயல்பாட்டளவில் காண முடியவில்லை என்றும் ஆதங்கப்பட்டனர்..

கைது செய்யப்பட்ட போது சில சித்திரவதைகளை தாங்க முடியாமல் அவர்கள் கூறியதற்கு தலையசைத்ததாகவும், தமக்கு புரியாத மொழிகளில் வாக்கு மூலங்கள் பெற்றுக்கொண்டுள்ளதால் தமது வழக்கின் தன்மைகளை பற்றியும் அறிய முடியாது உள்ளதாகவும், எம்மில் பலர் கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கும் மேலான தண்டனைகளை அனுபவித்து வரும் நிலையில், நீதிமன்றங்களின் வழக்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஆதரவற்ற எமது குடும்பத்தினரால் எவ்வாறு இயலும்..? என்றும் எம்மிடம் முறையிட்டனர்.

இங்கு சிறைவைக்கப்பட்டுள்ளவர்களில் நோயாளர்களும், வயோதிபர்களும் காணப்படுகின்றனர், அத்துடன் ஒரே குடும்பத்தை சார்ந்த தாய், தந்தை, மகன் போன்றோரும் சிறைவைக்கப்படுள்ளனர். இவர்கள் தொர்பிலும் நிச்சயம் இவ்வரசாங்கம் கரிசனை காட்டவேண்டும். மேலும் சென்ற ஆட்சிக்காலத்தில் நடந்தது போலவே இவ்வரசாங்கத்திலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அண்மையிலும் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். நல்லாட்சி அரசாங்கத்துக்கு அழுத்தங்களை கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் நாம் இருக்கின்றோம். உறவுகள் வீடுகளில் வாடிக்கொண்டிருக்க அரசியல் கைதிகள் சிறைக்கூடங்களில் வாடிக்கொண்டிருப்பது நல்லாட்சிக்கு பாதகமாகவே அமையும்.

என நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்கள் தெரிவித்தார்.

2016-01-27

மூலக்கதை