தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா?: என்னுடன் விவாதிக்க அமைச்சர்கள் தயாரா? – ஸ்டாலின் சவால்

கதிரவன்  கதிரவன்
தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா?: என்னுடன் விவாதிக்க அமைச்சர்கள் தயாரா? – ஸ்டாலின் சவால்

திருச்சி மாவட்ட தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவு பொதுக்கூட்டம் மணப்பாறையில் பெரியார் சிலை அருகே நேற்று இரவு நடந்தது. கூட்டத்திற்கு தெற்கு மாவட்டச்செயலாளர் கே.என்.நேரு தலைமை தாங்கினார். கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:–

கடந்த 4¾ ஆண்டு கால ஆட்சியில் எல்லா திட்டங்களையும் நிறைவேற்றி விட்டதாக சட்டசபையில் முதல்– அமைச்சர் ஜெயலலிதா பேசியுள்ளார். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியதை பலவற்றை இதுவரை நிறைவேற்றவில்லை. இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.

நான் இதை சவாலாக கூறாமல் கேட்கிறேன். ஒரு இடத்தில் பொதுமேடை அமைத்து இதனை விவாதிக்க ஜெயலலிதா அல்லது அமைச்சர்கள் தயாரா? ஒரே மேடையில் விவாதிக்க நான் தயார்.

முதல்–அமைச்சர் ஜெயலலிதா வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் நமக்கு நாமே பயண திட்டத்தை தொடங்கி மக்களை சந்தித்து குறைகளை கேட்டேன். 234 தொகுதிகளில் இதுவரை 218 தொகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்துள்ளேன்.

மீதமுள்ள 16 தொகுதிகளை பிப்ரவரி மாதம் 12–ந்தேதிக்குள் முடிக்க உள்ளேன். இதன் மூலம் 234 தொகுதிகளுக்கும் சென்றவன் என்ற சிறப்பை பெற உள்ளேன்.

மாற்றத்தை உருவாக்க தான் இந்த பயணம். வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று கலைஞர் கருணாநிதி தலைமையில் ஆட்சி அமையும். அவ்வாறு வரும் போது உங்களது கோரிக்கைகள் என்னவாக இருக்கும். உங்களது எதிர் பார்ப்புகள் என்ன என்பதை அறிய தான் இந்த நமக்கு நாமே பயண திட்டம்.

இந்த திட்டத்தை பலரும் கேலி கிண்டல் பேசுகின்றனர். அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசிய போது நமக்கு நாமே பயண திட்டம் பற்றி பேசியதை எண்ணி நான் பெருமைப்படுகிறேன். மக்கள் மனதில் மட்டுமில்லாமல் ஜெயலலிதாவின் மனதிலும் பதிந்துவிட்டதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழகம் மின் மிகுமை மாநிலமாக மாறிவிட்டது என்கிறார். ஒரு மெகா வாட் உற்பத்தி செய்ய இந்த ஆட்சியில் ஏதேனும் திட்டம் தொடங்கப்பட்டதா? ராமஜெயம் கொலை வழக்கில் 3 ஆண்டுகளாக குற்றவாளிகள் கண்டு பிடிக்காத நிலையில் சட்டம்– ஒழுங்கு பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது.

அம்மா அழைப்பு மையம் என புதிய திட்டத்தை முதல்– அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்துள்ளார். 1100 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டால் குறைகள் தீர்க்கப்படும் என்றார். நான் பல முறை தொடர்பு கொண்டேன், தொடர்பு கிடைக்கவில்லை. தமிழில் பதில் இல்லாமல் இந்தியில் பதில் அளிக்கப்படுகிறது.

நான் எனது தொலைபேசியில் 1100 எண்ணை தொடர்பு கொள்கிறேன் கிடைக்கிறதா? என பாருங்கள் என்றார். (அப்போது தனது செல்போனில் 1100 எண்ணை தொடர்பு கொண்டார். தொடர்பு கிடைக்கவில்லை. இந்தி மொழியில் பெண் குரலில் பதிவு செய்யப்பட்ட வாசகம் ஒலித்தது. இதனை மைக்கில் வைத்து அனைவரும் கேட்கும்படி வைத்தார்) இது தான் 1100 தொடர்பு மையத்தின் நிலைமை.

நான் கொளத்தூர் தொகுதியில் வாங்க பேசுவோம் என்ற திட்டத்தில் தொகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்டு மனுவாக பெற்று என்னால் முடிந்த வரை நிவர்த்தி செய்துவருகிறேன். 78108 என்ற தொலைபேசி எண் மக்களிடம் அறிமுகப்படுத்தி உள்ளேன். அந்த எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால் எனது உதவியாளர்கள் மூலம் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

திருச்சியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க பஞ்சப்பூரில் கடந்த தி.மு.க. ஆட்சியில் நான் அடிக்கோல் நாட்டினேன். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அந்த திட்டத்தை ரத்து செய்து விட்டது. வேறு இடத்திலாவது பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. திருச்சி–மணப்பாறை சாலையில் வாசனை தொழிற்சாலை அமைக்கப்படும் என அறிவித்து நிறைவேற்றவில்லை. மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு தயாராகி விட்டார்கள்.

சட்டமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர்களை பேசவிடாமல் செய்கிறார்கள். சட்டமன்றத்தில் பேச அனுமதித்தால் தான் ஜல்லிக்கட்டு, மதுவிலக்கு பற்றி பேசமுடியும். ஆனால் உள்ளே பேசவிடாததால் மக்கள் மன்றத்தில் பேசுகிறோம்.

தற்போது வாட்ஸ்–அப்பில் வேகமாக ஒரு குறுஞ்செய்தி பரவி வருகிறது. அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பதை மறப்போம் என்ற வகையில் அது உள்ளது. அதனை உறுதி படுத்தி அ.தி.மு.க. ஆட்சி முடியட்டும், விடியட்டும் தி.மு.க. ஆட்சி.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் மகேஷ் பொய்யா மொழி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், பொருளாளர் பன்னப்பட்டி கோவிந்த ராஜன், ஒன்றிய செயலாளர்கள் ராமசாமி, சபியுல்லா, செல்வராஜ், சின்ன அடைக்கன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் மும்பை கே.எ.நாகராஜ் உள்பட மாநில, மாவட்ட, நகர ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக நகர செயலாளர் கீதா மைக்கேல்ராஜ் வரவேற்று பேசினார். கூட்டத்தில் முன்னாள் நகர்மன்ற தலைவர் மறைந்த கோபால கிருஷ்ணன், ராமுலட்சுமி துரைராஜன் ஆகியோரது உருவபடத்திற்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

2016-01-26

மூலக்கதை