நாட்டைவிட்டு வெளியேறுகிறேன் என்று நான் கூறவேயில்லை : நடிகர் அமீர்கான் விளக்கம்

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 26, ஜனவரி 2016 (17:9 IST)

மாற்றம் செய்த நாள் :26, ஜனவரி 2016 (17:9 IST)

 நாட்டைவிட்டு வெளியேறுகிறேன் என்று 

நான் கூறவேயில்லை : 

நடிகர் அமீர்கான் விளக்கம்

நாட்டில் சகிப்புத்தன்மை விவகாரம் உச்சத்தில் இருந்தபோது, அதில் நடிகர் அமீர்கானும் சிக்கினார். நாட்டில் நடைபெற்று வரும் பல்வேறு சம்பவங்கள் தன்னை எச்சரிப்பதாகவும், இதன் காரணமாக இந்தியாவை விட்டு வெளியேறலாம் என்று தன்னுடைய மனைவி கிரண் ராவ் தன்னிடம் கூறியதாகவும் அமீர்கான் தெரிவித்தார். அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து, அவர் தன்னுடைய கருத்தில் இருந்து பின்வாங்கினார். இந்த சூழ்நிலையில், ‘வியத்தகு இந்தியா’வின் பிரசார தூதர் பொறுப்பில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். இதனால், இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இந்த நிலையில், கடந்த 2006–ம் ஆண்டில் வெளியான அவரது ‘ராங்க் டே பஷந்தி’ படத்தின் 10–வது ஆண்டு நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று மும்பையில் நடைபெற்றது. இதில் அமீர்கான் கலந்து கொண்டார்.

அங்கே அவர் நிருபர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது, சகிப்புத்தன்மை தொடர்பாக அவர் தெரிவித்த மாறுபட்ட கருத்துகளுக்கு விளக்கம் அளித்தார்.

அவர்,  ’’இந்தியா சகிப்புத்தன்மையற்ற நாடு என்றோ அல்லது நாட்டை விட்டு நான் வெளியேறுகிறேன் என்றோ ஒருபோதும் நான் கூறியது கிடையாது. என்னுடைய கருத்து தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டிருக்கிறது. இதற்கு சில ஊடகங்கள் தான் பொறுப்பு. இந்த நாட்டில் பிறந்த நான் இந்த நாட்டிலேயே இறக்க விரும்புகிறேன்.

நமது நாடு பல தரப்பட்ட மொழிகள், கலாசாரம் என பன்முகத்தன்மை கொண்ட நாடு. இதுபோன்று வேறு எந்தவொரு நாடும் கிடையாது. நான் வெளிநாடுகளுக்கு செல்லும் போது எல்லாம், என்னால் 2 வாரத்துக்குள் அங்கு தங்க முடியாது. வீட்டு ஏக்கத்தால் பாதிக்கப்பட்டு விடுவேன்’’என்று கூறினார்.

மூலக்கதை