கடும் பனிப்புயலுக்கு முகம் கொடுத்த நியூயார்க் நகரம் இயல்பு நிலைக்கு திரும்புகிறது

CANADA MIRROR  CANADA MIRROR
கடும் பனிப்புயலுக்கு முகம் கொடுத்த நியூயார்க் நகரம் இயல்பு நிலைக்கு திரும்புகிறது

அமெரிக்காவின் வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, ஜார்ஜியா, டென்னசி, பென்சில்வேனியா, கென்டகி, நியூஜெர்சி, நியூயார்க், வாஷிங்டன், மேற்கு வெர்ஜினியா மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்புயல் வீசியது. நியூயார்க் நகரில் கடந்த சனிக்கிழமை அதிக பட்சமாக 68 செ.மீட்டரும், வாஷிங்டன் நகரின் சர்வதேச விமான நிலைய பகுதியில் 74.2 செ.மீ பனியும் கொட்டியது. மேற்கு வெர்ஜினியா மாகாணத்தின் கிளெங்கரியில் நாட்டிலேயே மிக அதிக பட்சமாக 106.7 செ.மீ. பனிப்பொழிவு பதிவாகி இருந்தது.

வரலாறு காணாத இந்த கடும் பனிப்புயலுக்கு இதுவரை 20–க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். பனிப்பொழிவின் காரணமாக வாஷிங்டன் நகரில் சாலைகளில் வாகனங்களை இயக்க விதிக்கப்பட்ட தடை இன்னும் நீக்கப்படவில்லை. அங்கு அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.

அதேநேரம் நியூயார்க் நகரில் நேற்று முன்தினம் ஓரளவு கடுமையான வெயில் அடித்ததால் அங்கு நிலைமை மெல்ல மெல்ல சீரடையத் தொடங்கியது. இதனால் உற்சாகம் அடைந்த நியூயார்க் நகரவாசிகள் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியே வந்து பனிமூடிய தங்களது கார்களை வெளியே எடுத்தனர். மூடப்பட்டு இருந்த வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்களும் திறக்கப்பட்டன. மெட்ரோ ரெயில், பஸ் சேவைகள் வழக்கம்போல் இயங்கத் தொடங்கின.

எனினும் பல மாகாணங்களில் விமான போக்குவரத்து இன்னும் சீரடையவில்லை. நேற்று முன்தினம் 3,900 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது. நேற்றும் 900 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது. நியூயார்க் நகரின் ஜான் எப்.கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் மிகச் சொற்ப அளவிலேயே விமான சேவை இருந்தது.

மூலக்கதை